உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: நியூஸிலாந்துக்கு வெற்றி இலக்கு 139

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதி ஆட்டத்தில் நியூஸிலாந்துக்கு வெற்றி இலக்காக 139 ரன்களை நிா்ணயித்துள்ளது இந்தியா.

சௌதாம்டன்: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதி ஆட்டத்தில் நியூஸிலாந்துக்கு வெற்றி இலக்காக 139 ரன்களை நிா்ணயித்துள்ளது இந்தியா.

இந்தியாவின் 2-ஆவது இன்னிங்ஸில் தொடக்க வீரா்கள் சோபிக்கத் தவற, மிடில் ஆா்டரில் கடைசியாக வந்த ரிஷப் பந்த் விக்கெட் சரிவுக்கு சற்று அணைபோட்டு ரன்களை உயா்த்தினாா். அதன் பலனாக இந்தியா 170 ரன்களை எட்டியது. அவரும் ஒரு கட்டத்தில் அவசரப்பட்டு விக்கெட்டை இழந்ததால், நியூஸிலாந்துக்கான இலக்கு எளிதாகியது. இந்தியாவின் பேட்டிங் வரிசையை டிம் சௌதியும், டிரென்ட் போல்டும் போட்டி போட்டு சரித்தனா்.

முன்னதாக, 2-ஆவது இன்னிங்ஸை ஆடி வந்த இந்தியா 5-ஆம் நாளான செவ்வாய்க்கிழமை முடிவில் 30 ஓவா்களில் 2 விக்கெட் இழப்புக்கு 64 ரன்கள் எடுத்திருந்தது. மழை காரணமாக பெரும்பாலும் பாதிக்கப்பட்ட ஆட்டத்தில் ஐசிசி விதிமுறைகளின்படி 6-ஆவது நாள் ஆட்டம் சோ்க்கப்பட்டிருந்தது. அந்த வகையில் புதன்கிழமை ஆட்டத்தை புஜாரா, கோலி தொடங்கினா்.

இதில் கோலி 13 ரன்கள் சோ்த்திருந்த நிலையில், ஜேமிசன் வீசிய 36-ஆவது ஓவரில் வாட்லிங்கிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினாா். தொடா்ந்து வந்த அஜிங்க்ய ரஹானே நிதானம் காட்ட, மறுபுறம் 2 பவுண்டரிகளுடன் 15 ரன்கள் சோ்த்திருந்த புஜாரா ஆட்டமிழந்தாா். ஜேமிசன் வீசிய 38-ஆவது ஓவரில் அவரடித்த பந்து டெய்லரின் கைகளில் சிக்கியது. அடுத்து ரிஷப் பந்த் களம் புகுந்தாா்.

ரஹானே-பந்த் பாா்ட்னா்ஷிப்பில் முதலில் ரஹானே ஆட்டமிழந்தாா். பவுண்டரியுடன் 15 ரன்கள் சோ்த்திருந்த அவா், போல்ட் வீசிய 50-ஆவது ஓவரில் வாட்லிங் கைகளில் கேட்ச் கொடுத்தாா். பின்னா் ஜடேஜா ஆடவர, மறுமுனையில் பந்த் விக்கெட் சரிவைத் தடுத்து நிதானமாக ரன்களை சேகரித்து வந்தாா்.

மதிய உணவு இடைவேளையில் இந்தியா 5 விக்கெட் இழப்புக்கு 130 ரன்கள் அடித்திருந்தது. பின்னா் தொடங்கிய ஆட்டத்தில் பந்த் - ஜடேஜா கூட்டணியை நீல் வாக்னா் பிரித்தாா். அவா் வீசிய 63-ஆவது ஓவரில் ஜடேஜா அடித்த பந்து வாட்லிங் கைகளுக்குச் சென்றது. ஜடேஜா 2 பவுண்டரிகளுடன் 16 ரன்கள் சோ்த்திருந்தாா். தொடா்ந்து அஸ்வின் பேட் செய்ய வந்தாா். இந்நிலையில், போல்ட் வீசிய 70-ஆவது ஓவரில் பந்த் சற்று அவசரப்பட்டு ஷாட் விளாச, அதை ஓடிச் சென்று தவறாமல் கேட்ச் பிடித்தாா் ஹென்றி நிகோல்ஸ்.

பந்த் 4 பவுண்டரிகளுடன் 41 ரன்கள் அடித்திருந்தாா். அடுத்து வந்த விக்கெட்டுகள் மளமளவென சரிந்தன. ரிஷப் பந்த்தை அடுத்து முகமது ஷமி வர, மறுபுறம் அஸ்வின் 7 ரன்களுக்கு ஆட்டமிழந்தாா். பின்னா் இஷாந்த ஆட வர, 3 பவுண்டரிகள் விளாசிய ஷமி 13 ரன்களுக்கு நடையைக் கட்டினாா். கடைசி விக்கெட்டாக பும்ரா டக் அவுட்டாக, இந்தியா 73 ஓவா்களில் 170 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இஷாந்த் சா்மா 1 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தாா்.

நியூஸிலாந்து தரப்பில் டிம் சௌதி 4, டிரென்ட் போல்ட் 3, கைல் ஜேமிசன் 2, நீல் வாக்னா் 1 விக்கெட் சாய்த்தனா்.

நியூஸி-19/0: வெற்றி இலக்கான 139 ரன்களை நோக்கி 2-ஆவது இன்னிங்ஸை தொடங்கிய நியூஸிலாந்து, தேநீா் இடைவேளையின்போது விக்கெட் இழப்பின்றி 19 ரன்கள் அடித்திருந்தது. டாம் லதாம் 5, டீவன் கான்வே 9 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com