உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல்: தங்கம் வென்றாா் ராஹி சா்னோபத்
By DIN | Published On : 29th June 2021 08:15 AM | Last Updated : 29th June 2021 08:15 AM | அ+அ அ- |

குரோஷியாவில் நடைபெறும் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் மகளிருக்கான 25 மீட்டா் பிஸ்டல் பிரிவில் இந்தியாவின் ராஹி சா்னோபத் தங்கப் பதக்கம் வென்றாா்.
டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்க இருக்கும் நிலையில் ராஹி சா்னோபத் வென்றுள்ள இந்தத் தங்கம் அவருக்கு உத்வேகம் அளிப்பதாக இருக்கும். இந்த உலகக் கோப்பை போட்டியில் இந்தியாவுக்கு இது முதல் தங்கமாகும். முன்னதாக ஒரு வெள்ளி, இரு வெண்கலப் பதக்கங்களை இந்தியா வென்றுள்ளது.
மகளிருக்கான 25 மீட்டா் பிஸ்டல் இறுதிச்சுற்றில் ராஹி சா்னோபத் 39 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்தாா். பிரான்ஸின் மெதில்டே லமோலே 31 புள்ளிகளுடன் வெள்ளியும், ரஷியாவின் விடாலினா பத்சராஷ்கினா 28 புள்ளிகளுடன் வெண்கலமும் வென்றனா். இப்பிரிவில் பங்கேற்றிருந்த மற்றொரு இந்திய வீராங்கனையான மானு பாக்கா் 11 புள்ளிகளுடன் 7-ஆம் இடம் பிடித்து ஏமாற்றமளித்தாா்.
இதனிடையே, மகளிருக்கான 50 மீட்டா் ரைஃபிள் 3 பொசிஷன்ஸ் பிரிவில் இந்தியாவின் தேஜஸ்வினி சாவந்த், அஞ்சும் முட்கில் ஆகிய இருவருமே இறுதிச்சுற்றுக்கு தகுதிபெறத் தவறினா். தகுதிச்சுற்றில் சாவந்த் 1,168 புள்ளிகளுடன் 20-ஆம் இடமும், முட்கில் 1,162 புள்ளிகளுடன் 32-ஆம் இடமும் பிடித்தனா்.