இங்கிலாந்து பேட்ஸ்மேனை உசுப்பேற்றி ஆட்டமிழக்கச் செய்த ரிஷப் பந்த்!

சிக்ஸர் அடிக்க அவரை உசுப்பேற்றி, அதேபோல தன்னுடைய திட்டத்தில் வெற்றி கண்டுள்ளது...
இங்கிலாந்து பேட்ஸ்மேனை உசுப்பேற்றி ஆட்டமிழக்கச் செய்த ரிஷப் பந்த்!

இங்கிலாந்து கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து இந்திய அணிக்கு எதிராக 4 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. சென்னையில் நடைபெற்ற முதல் டெஸ்டில் இங்கிலாந்து அணி 227 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தியது. 2-வது டெஸ்டை 317 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்திய அணி தொடரை 1-1 என சமன் செய்தது. 3-வது டெஸ்ட், பகலிரவு ஆட்டமாக ஆமதாபாத்தில் நடைபெற்றது. இந்த டெஸ்டை இரு நாள்களில் வென்றது இந்தியா. டெஸ்ட் தொடா், தற்போது 2-1 என இந்தியாவுக்குச் சாதகமாக உள்ளது. 4-வது டெஸ்ட், ஆமதாபாத்தில் இன்று தொடங்கியுள்ளது. 

டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளது. இந்திய அணியில் பும்ராவுக்குப் பதிலாக சிராஜ் இடம்பெற்றுள்ளார்கள். இங்கிலாந்து அணியில் பிராட், ஆர்ச்சருக்குப் பதிலாக லாரன்ஸ், பெஸ் இடம்பெற்றுள்ளார்கள்.

6-வது ஓவரை அக்‌ஷர் படேல் வீச வந்தார். 2-வது பந்திலேயே டாம் சிப்லியை போல்ட் செய்தார். சிப்லி 2 ரன்கள் மட்டும் எடுத்தார். அக்‌ஷர் பந்தில் சிக்ஸர் அடிக்க முயன்று, 9 ரன்களில் ஆட்டமிழந்தார் கிராவ்லி. இதன்பிறகு கேப்டன் ரூட்டை 5 ரன்களில் எல்பிடபிள்யூ செய்து வெளியேற்றினார் சிராஜ். ஸ்டோக்ஸ் ஆரம்பத்தில் அதிரடியாக விளையாட ஆரம்பித்தார். சிராஜ் ஓவரில் மூன்று பவுண்டரிகள் அடித்தார். 

இங்கிலாந்து அணி 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 68 ரன்கள் எடுத்து தடுமாறி வருகிறது. 

இந்நிலையில் இங்கிலாந்து தொடக்க வீரர் கிராவ்லி 8-வது ஓவரின் தொடக்கத்தில் ஒரு பவுண்டரி அடித்தார். அக்‌ஷர் படேல் வீசிய அந்த ஓவரில் இரு பந்துகளுக்கு முன்னேறி வந்து ரன் எடுக்கப் பார்த்தார். ஆனால் அவரால் நினைத்தபடி ஷாட் ஆட முடியவில்லை. அப்போது பின்னால் இருந்து அவரை உசுப்பேற்றினார் ரிஷப் பந்த். ஒருத்தர் கோபப்படுகிறார், இப்போது ஒருத்தர் கோபப்படுகிறார் என்று கிராவ்லியை வம்புக்கு இழுத்தார். அருகில் இருந்த கோலியும், மோசமான ஷாட் ஒன்று வரப்போகிறது என்று அணி வீரர்களுக்கு ஒரு தகவல் கொடுத்தார். இந்திய அணியினரின் இந்தக் கிண்டலால் உத்வேகம் அடைந்தார் கிராவ்லி. அடுத்த பந்தில் கிரீஸை விட்டு மேலேறி வந்து சிக்ஸர் அடிக்க முயன்றார். பந்து பேட்டின் முனையில் பட்டு சிராஜிடம் கேட்ச்சாக மாறியது.

கிராவ்லியின் மனநிலையில் குழப்பத்தை ஏற்படுத்தி, சிக்ஸர் அடிக்க அவரை உசுப்பேற்றி, அதேபோல தன்னுடைய திட்டத்தில் வெற்றி கண்டுள்ளது இந்திய அணி. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com