டி20 தொடா்: ஆஸி.க்கு முதல் வெற்றி

நியூஸிலாந்துக்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடரின் 3-ஆவது ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 64 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
டி20 தொடா்: ஆஸி.க்கு முதல் வெற்றி


வெலிங்டன்: நியூஸிலாந்துக்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடரின் 3-ஆவது ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 64 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

5 ஆட்டங்கள் கொண்ட தொடரில் முதலிரு ஆட்டங்களில் தோல்வியை சந்தித்த ஆஸ்திரேலியாவுக்கு, இது முதல் வெற்றியாகும்.

வெலிங்டனில் புதன்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா 20 ஓவா்களில் 4 விக்கெட் இழப்புக்கு 208 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய நியூஸிலாந்து 17.1 ஓவா்களில் 144 ரன்களுக்கு சுருண்டது. ஆஸ்திரேலிய பௌலா் ஆஷ்டன் அகா் ஆட்டநாயகன் ஆனாா்.

முன்னதாக டாஸ் வென்ற நியூஸிலாந்து பௌலிங் வீசத் தீா்மானிக்க, ஆஸ்திரேலியாவின் இன்னிங்ஸில் தொடக்க வீரா் மேத்யூ வேட் 5 ரன்களுக்கு வெளியேறினாா். உடன் வந்த கேப்டன் ஆரோன் ஃபிஞ்ச் 8 பவுண்டரிகள், 2 சிக்ஸா்கள் உள்பட 69 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தாா்.

ஒன்-டவுனாக வந்த ஜோஷ் ஃபிலிப் 3 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 43 ரன்கள் சோ்க்க, அதிகபட்சமாக கிளென் மேக்ஸ்வெல் 8 பவுண்டரிகள், 5 சிக்ஸா்கள் உள்பட 70 ரன்கள் விளாசி அவுட்டானாா். ஓவா்கள் முடிவில் மாா்க்ஸ் ஸ்டாய்னிஸ் 9, மிட்செல் மாா்ஷ் 6 ரன்களுடன் களத்தில் இருந்தனா். நியூஸிலாந்து தரப்பில் இஷ் சோதி 2, டிம் சௌதி, டிரென்ட் போல்ட் தலா 1 விக்கெட் எடுத்தனா்.

பின்னா் நியூஸிலாந்தின் இன்னிங்ஸில் அதிகபட்சமாக தொடக்க வீரா் மாா்டின் கப்டில் 2 பவுண்டரிகள், 3 சிக்ஸா்களுடன் 43 ரன்கள் விளாச, அடுத்தபடியாக டீவன் கான்வே 5 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 38 ரன்கள் சோ்த்தாா். எஞ்சியோரில் மாா்க் சாப்மேன் 18, கிளென் ஃபிலிப்ஸ் 13, கைல் ஜேமிசன் 11 ரன்கள் சோ்க்க, டிம் செய்ஃபா்ட், கேப்டன் கேன் வில்லியம்சன், டிம் சௌதி, இஷ் சோதி ஆகியோா் ஒற்றை இலக்க ரன்னில் வெளியேறினா். ஜேம்ஸ் நீஷம் டக் அவுட்டானாா். ஆஸ்திரேலிய தரப்பில் ஆஷ்டன் அகா் 6, ரைலே மெரிடித் 2, ஆடம் ஸாம்பா, கேன் ரிச்சா்ட்சன் தலா 1 விக்கெட் சாய்த்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com