4-வது டெஸ்ட்: இந்தியா 365 ரன்களுக்கு ஆல் அவுட்! சதமடிக்க முடியாமல் ஏமாற்றமடைந்த வாஷிங்டன் சுந்தர்!

மறுமுனையில் இருந்த வாஷிங்டன் சுந்தர், ஏமாற்றத்தோடு 96 ரன்களுடன் ஓய்வறைக்குத் திரும்பினார். 
4-வது டெஸ்ட்: இந்தியா 365 ரன்களுக்கு ஆல் அவுட்! சதமடிக்க முடியாமல் ஏமாற்றமடைந்த வாஷிங்டன் சுந்தர்!

இங்கிலாந்துக்கு எதிரான 4-வது டெஸ்டில் தமிழகத்தைச் சேர்ந்த வாஷிங்டன் சுந்தர் அபாரமாக விளையாடி ஆட்டமிழக்காமல் 96 ரன்கள் எடுத்தார். 160 ரன்கள் முன்னிலை பெற்ற இந்திய அணி, முதல் இன்னிங்ஸில் 365 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 

இங்கிலாந்து கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து இந்திய அணிக்கு எதிராக 4 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. சென்னையில் நடைபெற்ற முதல் டெஸ்டில் இங்கிலாந்து அணி 227 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தியது. 2-வது டெஸ்டை 317 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்திய அணி தொடரை 1-1 என சமன் செய்தது. 3-வது டெஸ்ட், பகலிரவு ஆட்டமாக ஆமதாபாத்தில் நடைபெற்றது. இந்த டெஸ்டை இரு நாள்களில் வென்றது இந்தியா. டெஸ்ட் தொடா், தற்போது 2-1 என இந்தியாவுக்குச் சாதகமாக உள்ளது. 4-வது டெஸ்ட், ஆமதாபாத்தில் மார்ட் 4 அன்று தொடங்கியது. 

டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. இந்திய அணியில் பும்ராவுக்குப் பதிலாக சிராஜ் இடம்பெற்றார். இங்கிலாந்து அணியில் பிராட், ஆர்ச்சருக்குப் பதிலாக லாரன்ஸ், பெஸ் இடம்பெற்றார்கள். 

முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 75.5 ஓவர்களில் 205 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அக்‌ஷர் படேல் 4 விக்கெட்டுகளும் அஸ்வின் 3 விக்கெட்டுகளும் சிராஜ் 2 விக்கெட்டுகளும் வாஷிங்டன் சுந்தர் 1 விக்கெட்டும் எடுத்தார்கள். 

2-ம் நாள் முடிவில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 7 விக்கெட் இழப்புக்கு 294 ரன்கள் எடுத்தது. வாஷிங்டன் சுந்தர் 60, அக்‌ஷர் படேல் 11 ரன்களுடன் களத்தில் இருந்தார்கள். இந்திய அணி 3 விக்கெட்டுகள் மீதமுள்ள நிலையில் 89 ரன்கள் முன்னிலை பெற்றிருந்தது. 

3-ம் நாளான இன்று வாஷிங்டன் சுந்தரும் அக்‌ஷர் படேலும் நன்கு விளையாடி ரன்கள் சேர்த்தார்கள். சுழற்பந்துவீச்சில் இருவரும் அதிக ரன்கள் குவிக்க முயன்று அதில் வெற்றியும் பெற்றார்கள். இதனால் இருவரையும் பிரிக்க இங்கிலாந்து அணி மிகவும் தடுமாறியது. இருவர் கூட்டணி 79 பந்துகளில் 50 ரன்களை முதலில் சேர்த்தது. மிகவும் எதிர்பார்த்த பெஸ் இன்று சுமாராகப் பந்துவீசியதால் வேறுவழியின்றி தவித்தார் இங்கிலாந்து கேப்டன் ரூட். தொடர்ந்து சிறப்பாக விளையாடிய வாஷிங்டன் - அக்‌ஷர் கூட்டணி 171 பந்துகளில் 100 ரன்கள் எடுத்து அசத்தியது. எனினும் தேவையில்லாமல் ஓடி 43 ரன்களில் ரன் அவுட் ஆனார் அக்‌ஷர் படேல். அப்போது 96 ரன்களில் இருந்தார் வாஷிங்டன் சுந்தர். அவர் எப்படியும் சதமடித்து விடுவார் என நம்பினார்கள் இந்திய ரசிகர்கள். 

ஆனால் அடுத்த ஓவரில் இஷாந்த் சர்மா, சிராஜ் ஆகிய இருவரையும் டக் அவுட் செய்தார் பென் ஸ்டோக்ஸ். இதனால் மறுமுனையில் இருந்த வாஷிங்டன் சுந்தர், ஏமாற்றத்தோடு 96 ரன்களுடன் ஓய்வறைக்குத் திரும்பினார். 

இந்திய அணி, 114.4 ஓவர்களில் 365 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனால் முதல் இன்னிங்ஸில் 160 ரன்கள் முன்னிலை பெற்றது. இங்கிலாந்துத் தரப்பில் பென் ஸ்டோக்ஸ் 4 விக்கெட்டுகளும் ஆண்டர்சன் 3 விக்கெட்டுகளும் லீச் 2 விக்கெட்டுகளும் எடுத்தார்கள்.

3-ம் நாள் மதிய உணவு இடைவேளையின்போது இங்கிலாந்து அணி 3 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 6 ரன்கள் எடுத்துள்ளது.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com