விமர்சனத்துக்கு ஆளாகியிருக்கும் இந்திய அணியின் புதிய டி20 ஆட்ட அணுகுமுறை!

மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் இங்கிலாந்து அணியினரின் அதிரடி ஆட்ட அணுகுமுறையைப் பின்பற்றி...
விமர்சனத்துக்கு ஆளாகியிருக்கும் இந்திய அணியின் புதிய டி20 ஆட்ட அணுகுமுறை!

இங்கிலாந்துடனான முதல் டி20 ஆட்டத்தில் இந்திய அணி வெளிப்படுத்திய புதிய அணுகுமுறை விமர்சனத்தை வரவழைத்துள்ளது.

இந்தியாவுக்கு எதிரான முதல் டி20 கிரிக்கெட் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

குஜராத் மாநிலம், ஆமதாபாதில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இந்திய அணியில் தொடக்க வீரா் ரோஹித் சா்மாவுக்கு ஓய்வளிக்கப்பட்டு ஷிகா் தவன் சோ்க்கப்பட்டாா். இதில், டாஸ் வென்ற இங்கிலாந்து அணி, பந்துவீச்சைத் தோ்வு செய்தது. 

இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த இந்திய அணி 20 ஓவா்களில் 7 விக்கெட் இழப்புக்கு 124 ரன்கள் எடுத்தது. பின்னா் ஆடிய இங்கிலாந்து அணி 15.3 ஓவா்களில் 2 விக்கெட் இழப்புக்கு 130 ரன்கள் எடுத்து வெற்றி கண்டது. டேவிட் மலான் 20 பந்துகளில் 1 சிக்ஸா், 2 பவுண்டரிகளுடன் 24, ஜானி போ்ஸ்டோவ் 17 பந்துகளில் 2 சிக்ஸா், 1 பவுண்டரியுடன் 26 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனா். இந்த வெற்றியின் மூலம் 5 ஆட்டங்கள் கொண்ட இந்தத் தொடரில் இங்கிலாந்து 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. இவ்விரு அணிகள் இடையிலான 2-ஆவது ஆட்டம் வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.

2019 தொடக்கத்தில் இந்திய அணி இரு டி20 தொடர்களில் தோல்வியடைந்தது. நியூசிலாந்தில் நியூசிலாந்துக்கு எதிராக 1-2 எனவும் சொந்த மண்ணில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 0-2 எனவும் தோற்றது. அதன்பிறகு இந்திய அணி விளையாடிய 7 டி20 தொடர்களில் 6-ல் வெற்றி பெற்றும் ஒரு தொடரை டிராவும் செய்தது. இந்தளவுக்கு இந்திய அணி வலுவாக டி20 அணியாக உள்ள நிலையில் இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி20 ஆட்டத்தில் இந்திய அணி புதிய அணுகுமுறையை வெளிப்படுத்தியது.

வழக்கமாக இந்திய அணியின் அணுகுமுறை என்பது ஆரம்பத்தில் விக்கெட்டைத் தக்கவைத்துக்கொண்டு கடைசிக்கட்டத்தில் அதிரடியாக விளையாடுவதாகும். ஆனால் நேற்று இந்திய அணி, மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் இங்கிலாந்து அணியினரின் அதிரடி ஆட்ட அணுகுமுறையைப் பின்பற்றியது. இந்திய அணியின் தொடக்க வீரர்கள், நடுவரிசை வீரர்கள் அனைவரும் அதிரடியாக விளையாட முயன்று தங்களுடைய விக்கெட்டுகளைப் பறிகொடுத்தார்கள். ஓரளவு ரன்கள் எடுத்த பிறகு இந்த அணுகுமுறையைப் பின்பற்றாமலும் தொடக்கத்தில் இருந்தே ஆடுகளம், பந்துவீச்சின் தன்மை ஆகியவற்றைக் கருத்தில் கொள்ளாமலும் ஆரம்பத்தில் இருந்தே அதிரடியாக விளையாட முயன்று தோல்வியடைந்தது இந்திய அணி. 

இங்கிலாந்து, மேற்கிந்தியத் தீவுகள் அணிகளின் வீரர்களின் பாணியில் விளையாடுவது சரியா, இந்திய அணிக்கென்று ஒரு வெற்றிச் சூத்திரம் உள்ளது, அதையே தொடரலாமே எனப் பலரும் கருத்து தெரிவித்துள்ளார்கள். இந்திய அணியின் பேட்ஸ்மேன் ஷ்ரேயஸ் ஐயர் இதுபற்றி கூறியதாவது:

இந்திய அணியின் அணுகுமுறை தோல்வியினால் மாறாது. எங்களுடைய பேட்டிங் வரிசையையும் கீழ்நடுவரிசை வீரர்களையும் பாருங்கள். எனவே நாங்கள் எங்கள் திட்டத்தை மாற்ற வேண்டியதில்லை. நாங்கள் ஒரு திட்டத்துடன் வந்தோம். அதை முடிந்தவரை செயல்படுத்த வேண்டும். இது 5 ஆட்டங்கள் கொண்ட தொடர். எனவே எங்கள் திட்டங்களை வெளிப்படுத்த இதுவே சரியான நேரம் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com