5-வது ஒருநாள் ஆட்டத்திலும் இந்திய மகளிர் தோல்வி

இந்தியாவுக்கு எதிரான 5-வது ஒருநாள் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க மகளிர் அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 4-1 என்ற கணக்கில் தொடரை வென்றுள்ளது.
படம்: பிசிசிஐ
படம்: பிசிசிஐ


இந்தியாவுக்கு எதிரான 5-வது ஒருநாள் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க மகளிர் அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 4-1 என்ற கணக்கில் தொடரை வென்றுள்ளது.

இந்தியா, தென் ஆப்பிரிக்கா மகளிர் அணிகளுக்கிடையிலான 5-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் ஆட்டம் புதன்கிழமை நடைபெற்றது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா முதலில் இந்திய அணியை பேட்டிங் செய்ய அழைத்தது.

இந்திய அணியில் டாப் ஆர்டர் வீராங்கனைகள் சொதப்ப, ஹர்மன்பிரீத் கௌரும் 30 ரன்களுக்கு ரிடயர்ட் ஹர்ட் ஆனார். கேப்டன் மிதாலி ராஜ் மட்டும் அரைசதம் அடித்து நம்பிக்கையளித்து வந்தார். எனினும் மற்ற வீராங்கனைகளிடமிருந்து ஒத்துழைப்பு இல்லாததால் இந்திய அணி 49.3 ஓவர்களில் 188 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த மிதாலி 79 ரன்கள் சேர்த்தார்.

189 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்பிரிக்க அணி களமிறங்கியது. தொடக்கத்தில் இந்திய வீராங்கனைகள் ஆதிக்கம் செலுத்தியதால் தென் ஆப்பிரிக்க அணி 27 ரன்களுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது.

ஆனால், மாற்றுத் திட்டத்தை வைத்திருந்த டு பிரீஸ் மற்றும் போஷ் அட்டகாசமான பாட்னர்ஷிப் அமைத்தனர். இந்த இணை 4-வது விக்கெட்டுக்கு 96 ரன்கள் சேர்த்து வெற்றியை இந்திய அணியிடமிருந்து பறித்தது.

எனினும், போஷ் 58 ரன்களுக்கு முதலில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து, டு பிரீஸ் 57 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இதனால், ஆட்டத்தில் திருப்புமுனை ஏற்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. எனினும், கேப் மற்றும் டி கிளெர்க் ஆட்டத்தில் மற்றுமொரு பாட்னர்ஷிப் அமைத்து அந்த அணியை வெற்றி பெறச் செய்தனர்.

48.2 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 189 ரன்கள் எடுத்த தென் ஆப்பிரிக்க அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்திய அணியில் சிறப்பாக பந்துவீசிய ராஜேஸ்வரி 10 ஓவர்கள் வீசி 13 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றதன்மூலம் 5 ஆட்டங்கள் கொண்ட தொடரை ஏற்கெனவே வென்ற தென் ஆப்பிரிக்க, 4-1 என்ற கணக்கில் கோப்பையைக் கைப்பற்றியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com