டி20 தொடர்: முன்னிலை பெற்றது இங்கிலாந்து

​இந்தியாவுக்கு எதிரான 3-ஆவது டி20 ஆட்டத்தில் இங்கிலாந்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
டி20 தொடர்: முன்னிலை பெற்றது இங்கிலாந்து

3-ஆவது ஆட்டத்தில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி
இந்தியாவுக்கு எதிரான 3-ஆவது டி20 ஆட்டத்தில் இங்கிலாந்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதையடுத்து 5 ஆட்டங்கள் கொண்ட தொடரில் அந்த அணி 2-1 என முன்னிலை பெற்றுள்ளது.
ஆமதாபாதில் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் பேட் செய்த இந்தியா 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 156 ரன்கள் அடித்தது. அடுத்து ஆடிய இங்கிலாந்து 18.2 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 158 ரன்கள் எடுத்து வென்றது. பவுண்டரி, சிக்ஸர்களாக விளாசி அணியின் வெற்றிக்கு வழி வகுத்த ஜோஸ் பட்லர் ஆட்டநாயகன் ஆனார்.
முன்னதாக, இந்த ஆட்டத்தில் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் சூர்யகுமார் யாதவுக்குப் பதிலாக ரோஹித் சர்மா சேர்க்கப்பட்டார். கடந்த ஆட்டத்தில் தொடக்க வீரர்களில் ஒருவராக வந்த இஷான் கிஷணுக்கு 3-ஆம் இடம் வழங்கப்பட்டது.
டாஸ் வென்ற இங்கிலாந்து பெளலிங் வீசத் தீர்மானித்தது. இந்தியாவின் இன்னிங்ஸை ரோஹித் சர்மா - லோகேஷ் ராகுல் கூட்டணி தொடங்கியது. ரோஹித் நிதானமாக ஆடி வந்த நிலையில், லோகேஷ் ராகுல் டக் அவுட்டானார். ஆஸ்திரேலிய தொடரின் கடைசி ஆட்டத்திலும், இந்தத் தொடரின் 3 ஆட்டங்களிலும் லோகேஷ் டக் அவுட்டாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
பின்னர் இஷான் கிஷண் களம் காண, மறுமுனையில் 2 பவுண்டரிகளுடன் 15 ரன்கள் அடித்திருந்த ரோஹித் சர்மா, 4-ஆவது ஓவரில் மார்க் வுட் பந்துவீச்சில் ஆர்ச்சரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
அடுத்து கேப்டன் கோலி ஆட வர, கடந்த ஆட்டத்தைப் போல அதிரடியாக ஆடுவார் என எதிர்பார்க்கப்பட்ட இஷான் 4 ரன்களில் நடையைக் கட்டினார்.
தொடர்ந்து ஆட வந்த ரிஷப் பந்த், கோலியுடன் சற்று நிலைத்தார். 3 பவுண்டரிகள் விளாசிய அவர், 25 ரன்களுக்கு ரன் அவுட்டானார். தொடர்ந்து வந்த ஷ்ரேயஸ் ஐயர் 1 பவுண்டரி மட்டும் விளாசி 9 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தார். பின்னர் வந்த ஹார்திக் பாண்டியா 2 சிக்ஸர்களை பறக்கவிட்டு 17 ரன்களுடன் கடைசி பந்தில் ஆட்டமிழந்தார்.
அரைசதம் கடந்த கோலி, ஓவர்கள் முடிவில் 8 பவுண்டரிகள், 4 சிக்ஸர்கள் உள்பட 77 ரன்களுக்கு ஆட்டமிழக்காமல் இருந்தார். இங்கிலாந்து தரப்பில் மார்க் வுட் 3, கிறிஸ் ஜோர்டான் 2 விக்கெட்டுகள் சாய்த்தனர்.
பின்னர் ஆடிய இங்கிலாந்தில் தொடக்க வீரர் ஜேசன் ராய் 2 பவுண்டரிகள் உள்பட 9 ரன்களுக்கு வெளியேற, ஒன் டவுனாக வந்த டேவிட் மலான் 1 சிக்ஸர் உள்பட 18 ரன்களுக்கு நடையைக் கட்டினார். நிலைத்து ஆடிய ஜானி பேர்ஸ்டோ, ஜோஸ் பட்லர் கூட்டணி இங்கிலாந்தை வெற்றிக்கு வழி நடத்தியது. பட்லர் 5 பவுண்டரிகள், 4 சிக்ஸர்கள் உள்பட 83 ரன்கள், பேர்ஸ்டோ 5 பவுண்டரிகளுடன் 40 ரன்களுக்கு ஆட்டமிழக்காமல் இருந்தனர். இந்திய தரப்பில் சஹல், சுந்தர் தலா 1 விக்கெட் சாய்த்தனர்.

 - கடந்த 2019-க்குப் பிறகு சொந்த மண்ணில் நடைபெறும் டி20 ஆட்டங்களில் 200-க்கும் குறைவான ஸ்கோரை இந்தியா பதிவு செய்வது
இது 8-ஆவது முறையாகும். அதில் ஒருமுறை மட்டுமே இந்தியா வெற்றியைப் பதிவு செய்துள்ளது.
2  - கடந்த 2016 டி20 உலகக் கோப்பைக்கு பிறகு டி20 தொடரில் கோலி அடுத்தடுத்த ஆட்டங்களில் அரைசதம் அடிப்பது இது 2-ஆவது முறையாகும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com