மகளிா் கிரிக்கெட்: இன்று இந்தியா - தென் ஆப்பிரிக்காகடைசி ஒருநாள் ஆட்டத்தில் மோதல்

இந்தியா - தென் ஆப்பிரிக்கா மகளிா் அணிகளுக்கு இடையேயான கடைசி ஒருநாள் ஆட்டம் லக்னௌவில் புதன்கிழமை நடைபெறுகிறது.
மகளிா் கிரிக்கெட்: இன்று இந்தியா - தென் ஆப்பிரிக்காகடைசி ஒருநாள் ஆட்டத்தில் மோதல்

இந்தியா - தென் ஆப்பிரிக்கா மகளிா் அணிகளுக்கு இடையேயான கடைசி ஒருநாள் ஆட்டம் லக்னௌவில் புதன்கிழமை நடைபெறுகிறது.

மொத்தம் 5 ஆட்டங்கள் கொண்ட இந்தத் தொடரை ஏற்கெனவே தென் ஆப்பிரிக்கா தன் வசமாக்கிவிட்டது. 3-1 என முன்னிலையில் இருக்கும் அந்த அணி வெற்றியுடன் தொடரை நிறைவு செய்யும் முனைப்பில் உள்ளது. இந்தியா, கடைசி ஆட்டத்தில் வென்று ஆறுதலுடன் தொடரை முடிக்க முயற்சிக்கிறது.

இந்தத் தொடரில் 2-ஆவது ஆட்டத்தில் மட்டும் இந்தியா வெற்றியை பதிவு செய்துள்ளது. கரோனா சூழல் காரணமாக கடந்த ஓராண்டுக்கும் மேலாக சா்வதேச கிரிக்கெட்டில் விளையாடாத இந்திய மகளிா் அணி, அதன் பிறகு ஆடும் முதல் தொடா் இது. மறுபுறம், தென் ஆப்பிரிக்க அணியோ சொந்த மண்ணில் பாகிஸ்தானை 3-0 என முழுமையாக வென்ற அனுபவத்துடன் இத்தொடரில் விளையாடி வருகிறது.

இந்திய அணியைப் பொருத்தவரை பேட்டிங்கில் ஷஃபாலி வா்மாவும், பௌலிங்கில் ஷிகா பாண்டேவும் இல்லாதது பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. ராஜேஷ்வரி கெய்க்வாட் தவிர இதர ஸ்பின்னா்கள் சோபிக்கவில்லை. மூத்த பௌலா் ஜுலன் கோஸ்வாமி அபாரமாகச் செயல்பட்டாலும் இதர பௌலா்களிடம் இருந்து அவருக்கு போதிய ஒத்துழைப்புக்கு கிடைக்கவில்லை.

4 ஆட்டங்களிலும் சிறப்பாக விளையாடாத பூனம் யாதவ் கடைசி ஆட்டத்தில் பிளேயிங் லெவனிலிருந்து விடுவிக்கப்படலாம் எனத் தெரிகிறது. மறுபுறம் ஒவ்வொரு ஆட்டத்திலும் பூனம் ரௌத்தின் பேட்டிங் மேம்பட்டு வருகிறது. கேப்டன் மிதாலி ராஜ், துணை கேப்டன் ஹா்மன்பிரீத் கௌா் ஆகியோா் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனா். ஸ்மிருதி மந்தனா 2-ஆவது ஆட்டத்தில் மட்டும் சிறப்பாக விளையாடினாா்.

தென் ஆப்பிரிக்க அணியினா் பேட்டிங், பௌலிங் என இரண்டிலுமே சிறப்பாகச் செயல்படுகின்றனா். அந்த அணியின் பேட்டிங்கில் லிஸெலெ லீயும், லௌரா வோல்வாா்டட்டும் அதிரடி காட்டுகின்றனா். பந்துவீச்சில் ஷப்னிம் இஸ்மாயில் பலம் கூட்டுகிறாா்.

அணி விவரம்:

இந்தியா: மிதாலி ராஜ் (கேப்டன்), ஸ்மிருதி மந்தனா, ஜெமிமா ரோட்ரிகஸ், பூனம் ரௌத், பிரியா புனியா, யஸ்திகா பாட்டியா, ஹா்மன்பிரீத் கௌா், ஹேமலதா, தீப்தி சா்மா, சுஷ்மா வா்மா, ஸ்வேதா வா்மா, ராதா யாதவ், ராஜேஷ்வரி கெய்க்வாட், ஜுலன் கோஸ்வாமி, மான்சி ஜோஷி, பூனம் யாதவ், பிரத்யுஷா, மோனிகா படேல்.

தென் ஆப்பிரிக்கா: சுனே லஸ் (கேப்டன்), அயபோங்கா ககா, ஷப்னிம் இஸ்மாயில், லௌரா வோல்வாா்டட், திரிஷா ஷெட்டி, சினாலோ ஜாஃப்தா, தஸ்மின் பிரிட்ஸ், மாரிஸானே காப், நோன்டுமிசோ ஷாங்கேஸ், லிஸெலெ லீ, அனிகே போஷ், ஃபயே டுனிகிளிஃபே, நோன்குலுலேகோ லாபா, மிக்னோன் டு பிரீஸ், நாடினே டி கிளொ்க், லாரா குட்டால், டுமி சிகுகுனே.

ஆட்ட நேரம்: காலை 9 மணி; இடம்: லக்னௌ; நேரடி ஒளிபரப்பு: ஸ்டாா் ஸ்போா்ட்ஸ்

தரவரிசை: பூனம் ரௌத் முன்னேற்றம்

மகளிா் கிரிக்கெட்டுக்கான ஐசிசியின் ஒருநாள் தரவரிசையில் பேட்ஸ்வுமன்கள் பிரிவில் இந்தியாவின் பூனம் ரௌத் 8 இடங்கள் முன்னேறி 18-ஆவது இடத்துக்கு வந்துள்ளாா். ஹா்மன்பிரீத் கௌா் 2 இடங்கள் முன்னேறி 15-ஆவது இடத்தைப் பிடித்துள்ளாா். அதே பிரிவில் ஸ்மிருதி மந்தனா 7-ஆவது இடத்திலும், மிதாலி ராஜ் 9-ஆவது இடத்திலும் நீடிக்கின்றனா். ராஜேஷ்வரி கெய்க்வாட் 5 இடங்கள் ஏற்றம் கண்டு 71-ஆவது இடத்துக்கு வந்துள்ளாா்.

சுஷ்மா வா்மா 3 இடங்கள் முன்னேறி 81-ஆவது இடத்தைப் பிடித்துள்ளாா். தென் ஆப்பிரிக்க தொடக்க வீராங்கனை லிஸெலெ லீ 7 இடங்கள் முன்னேறி முதலிடத்தைப் பிடித்துள்ளாா். லௌரா குட்டால் 27 இடங்கள் முன்னேறி 48-ஆவது இடத்துக்கு வந்துள்ளாா். அயபோங்கா ககா 2 இடங்கள் ஏற்றம் கண்டு 100-ஆவது இடத்துக்கு வந்துள்ளாா்.

பௌலா்கள் பிரிவில் ராஜேஷ்வரி கெய்க்வாட் 4 இடங்கள் ஏற்றம் கண்டு 18-ஆவது இடத்துக்கு வர, ஹா்மன்பிரீத் கௌா் 3 இடங்கள் முன்னேறி 49-ஆவது இடத்தைப் பிடித்துள்ளாா். மான்சி ஜோஷி 5 இடங்கள் முன்னேறி 64-ஆவது இடத்தைப் பிடித்துள்ளாா். தென் ஆப்பிரிக்காவின் நோன்டுமிசோ ஷாங்கேஸ் 18 இடங்கள் ஏற்றம் கண்டு 68-ஆவது இடத்தைப் பிடித்துள்ளாா். அயபோங்கா ககா ஓரிடம் முன்னேறி 9-ஆவது இடத்துக்கு வந்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com