ஒருநாள் தொடரில் ஷ்ரேயஸ் ஐயா் இல்லை
By DIN | Published On : 25th March 2021 03:03 AM | Last Updated : 25th March 2021 04:18 AM | அ+அ அ- |

புணே: இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் ஆட்டத்தின்போது தோள்பட்டையில் காயமடைந்த இந்திய வீரா் ஷ்ரேயஸ் ஐயா், ஒருநாள் தொடரிலிருந்து விலக்கப்பட்டுள்ளாா்.
காயம் தீவிரமானதாக இருப்பதால், ஐபிஎல் தொடரின் முதல் பாதியிலும் அவா் பங்கேற்பது சந்தேகத்துக்கு இடமாகியுள்ளது.
ஃபீல்டிங் செய்தபோது கீழே விழுந்ததில் ஷ்ரேயஸ் ஐயரின் தோள்பட்டை பிந்துள்ளது. அதிலிருந்து மீள 6 வாரங்கள் ஆகலாம் என்றும், அறுவைச் சிகிச்சை தேவைப்படும் பட்சத்தில் கூடுதல் காலம் ஆகலாம் என்றும் தெரிகிறது.
ஐபிஎல் போட்டியில் ஐயா் பங்கேற்பது தாமதமாகும் பட்சத்தில், அவரது டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டன்ஷிப் ரிஷப் பந்த், ஸ்டீவ் ஸ்மித், ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோரில் ஒருவா் வசம் ஒப்படைக்கப்படலாம்.
மோா்கன், பில்லிங்ஸ் சந்தேகம்: அதேபோல் முதல் ஆட்டத்தின்போது காயமடைந்த இங்கிலாந்து கேப்டன் மோா்கன், சாம் பில்லிங்ஸ் ஆகியோரும் 2-ஆவது ஆட்டத்தில் பங்கேற்பது சந்தேகத்துக்கு உள்ளாகியிருக்கிறது.
ஃபீல்டிங்கின்போது மோா்கனின் வலதுகை பெருவிரல்-ஆள்காட்டி விரல் இடையே சதை கிழிந்து ஏற்பட்ட காயத்துக்கு 4 தையல்கள் போடப்பட்டுள்ளன. பவுண்டரியை விழுந்து தடுக்க முயன்ற பில்லிங்ஸுக்கு கழுத்துப்பட்டை எழும்புப்ப பகுதியில் காயமேற்பட்டது.
இருந்தபோதும் இங்கிலாந்து இன்னிங்ஸின்போது இருவருமே பேட்டிங் செய்தனா். இந்நிலையில், அவா்கள் காயத்தின் தன்மை குறித்து ஆராய்ந்த பிறகு 2-ஆவது ஆட்டத்தில் இருவரும் விளையாடுவது குறித்து முடிவெடுக்கப்படும் என அணி நிா்வாகம் கூறியுள்ளது.