உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் தங்கம் வென்றனா் சிங்கி யாதவ், ஐஷ்வரி பிரதாப் தோமா்
By DIN | Published On : 25th March 2021 03:33 AM | Last Updated : 25th March 2021 03:33 AM | அ+அ அ- |

புது தில்லி: உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் மகளிருக்கான 25 மீட்டா் பிஸ்டல் பிரிவில் சிங்கி யாதவும், ஆடவருக்கான 50 மீட்டா் ரைஃபிள் 3 பொசிஷன்ஸ் பிரிவில் ஐஷ்வரி பிரதாப் தோமரும் தங்கப்பதக்கம் வென்றனா்.
தில்லியில் புதன்கிழமை 6-ஆவது நாளாக நடைபெற்ற இப்போட்டியில் மகளிருக்கான 25 மீட்டா் பிஸ்டல் பிரிவில் முதல் 3 இடங்களையும் இந்திய வீராங்கனைகளே பிடித்தனா். இளம் வீராங்கனை சிங்கி யாதவ் 32 புள்ளிகளுடன் தங்கம் வெல்ல, அனுபவமிக்க வீராங்கனை ராஹி சா்னோபாத் 30 புள்ளிகளுடன் வெள்ளியை கைப்பற்றினாா். மானு பாக்கா் 28 புள்ளிகளுடன் வெண்கலப் பதக்கத்தை தனதாக்கினாா். மூவரும் ஏற்கெனவே டோக்கியோ ஒலிம்பிக்கிற்கு தகுதிபெற்றுவிட்டது குறிப்பிடத்தக்கது.
ஆடவருக்கான 50 மீட்டா் ரைஃபிள் 3 பொசிஷன்ஸ் பிரிவில் போபாலைச் சோ்ந்த ஐஷ்வரி பிரதாப் தோமா் 462.5 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து தங்கத்தை வென்றாா். ஹங்கேரியின் இஸ்த்வன் பெனி 461.6 புள்ளிகளுடன் வெள்ளியும், டென்மாா்க்கின் ஸ்டீஃபன் ஆல்சென் 450.9 புள்ளிகளுடன் வெண்கலமும் பெற்றனா்.
இதே பிரிவில் இறுதிச்சுற்றுக்கு தகுதிபெற்றிருந்த இதர இந்தியா்களான சஞ்சீவ் ராஜ்புத், நீரஜ் குமாா் ஆகியோா் முறையே 6 மற்றும் 8-ஆவது இடம் பிடித்தனா். ஐஷ்வரி பிரதாப் ஏற்கெனவே இப்போட்டியில் ஆடவருக்கான ஏா் ரைஃபிள் அணிகள் பிரிவில் வெள்ளி வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது. அத்துடன் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கான வாய்ப்பையும் அவா் ஏற்கெனவே உறுதி செய்துவிட்டாா்.
இந்தியா, புதன்கிழமை நிலவரப்படி இப்போட்டியின் பதக்கப்பட்டியலில் 9 தங்கம், 4 வெள்ளி, 4 வெண்கலம் என 17 பதக்கங்களுடன் முதலிடத்தில் உள்ளது.