இங்கிலாந்து சுற்றுப்பயணம்: இந்திய அணியில் நடராஜன் இடம்பெறாதது ஏன்?

இந்த வருட ஐபிஎல் போட்டியில் இரு ஆட்டங்களில் மட்டுமே விளையாடிய நடராஜன்....
இங்கிலாந்து சுற்றுப்பயணம்: இந்திய அணியில் நடராஜன் இடம்பெறாதது ஏன்?

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் மற்றும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி இறுதிச்சுற்றுக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது.

விராட் கோலி தலைமையிலான இந்திய அணியில் ஜடேஜா, ஷமி, விஹாரி ஆகியோர் மீண்டும் தேர்வாகியுள்ளார்கள். ஹார்திக் பாண்டியா, குல்தீப் யாதவ் ஆகியோருக்கு இடமில்லை. மேலும் வேகப்பந்து வீச்சாளர்களான புவனேஷ்வர் குமார், நடராஜன் ஆகியோரும் இந்திய அணியில் இடம்பெறவில்லை.

சமீபகாலமாக காயங்களால் அவதிப்பட்டதால் புவனேஸ்வர் குமாருக்கு இந்திய டெஸ்ட் அணியில் இடம் கிடைக்கவில்லை. 

ஐபிஎல் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடி வந்த தமிழக வீரரான டி. நடராஜன், முழங்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக போட்டியிலிருந்து விலகினார். 30 வயதான நடராஜனுக்கு ஆஸ்திரேலிய தொடரின்போதே முழங்காலில் காயம் ஏற்பட்டது. எனினும் அவா் தொடா்ந்து விளையாடியதால், அறுவை சிகிச்சை செய்துகொள்ளும் அளவுக்குக் காயம் பெரிதானது.

இந்த வருட ஐபிஎல் போட்டியில் இரு ஆட்டங்களில் மட்டுமே விளையாடிய நடராஜன், முழங்கால் காயத்துக்குக் கடந்த மாத இறுதியில் அறுவை சிகிச்சை செய்துகொண்டார். இதன் காரணமாகவும் இந்திய அணியில் ஏற்கெனவே பும்ரா, இஷாந்த் சர்மா, ஷமி, சிராஜ், ஷர்துல் தாக்குர், உமேஷ் யாதவ் எனப் பல வேகப்பந்து வீச்சாளர்கள் இருப்பதாலும் நடராஜனால் இந்திய அணியில் இடம் பெற முடியாமல் போனது. 

மேலும் மாற்று வீரர்களாக அபிமன்யூ ஈஸ்வரன், பிரசித் கிருஷ்ணா, அவேஷ் கான், அர்ஸான் ஆகியோர் இங்கிலாந்துச் சுற்றுப்பயணத்துக்குத் தேர்வாகியுள்ளார்கள். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com