அதிகாரபூர்வமாக ஒத்திவைக்கப்பட்ட ஆசியக் கோப்பைப் போட்டி
By DIN | Published On : 24th May 2021 11:56 AM | Last Updated : 24th May 2021 11:56 AM | அ+அ அ- |

பாகிஸ்தானின் பாபர் அஸாம்
இலங்கையில் அடுத்த மாதம் நடைபெறுவதாக இருந்த ஆசியக் கோப்பைப் போட்டி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
2020 செப்டம்பரில் டி20 ஆசிய கோப்பைப் போட்டியை நடத்தும் வாய்ப்பு பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்டது. டி20 ஆசிய கோப்பைப் போட்டியில் இந்தியாவும் பங்கேற்பதால் பாகிஸ்தானுக்குப் பதிலாக வேறு நாட்டில் போட்டி நடைபெறவேண்டிய சூழல் இருந்தது. 2018-ல் ஆசிய கோப்பை இந்தியாவில் நடைபெறுவதாக இருந்தது. ஆனால் பாகிஸ்தான் வீரர்களுக்கு விசா கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டதால், ஐக்கிய அரபு அமீரகத்தில் போட்டி நடைபெற்றது.
பிறகு, 2020 டி20 ஆசியக் கோப்பைப் போட்டி பாகிஸ்தானில் நடைபெறுவதற்குப் பதிலாக இலங்கையில் நடைபெறும் எனக் கூறப்பட்டது. தனக்கு வழங்கப்பட்ட உரிமையை இலங்கைக்கு வழங்கிய பாகிஸ்தான், 2022-ல் இலங்கையில் நடைபெறுவதாக உள்ள ஆசியக் கோப்பைப் போட்டியைத் தனது நாட்டில் நடத்தவும் திட்டமிட்டிருந்தது.
2010-க்குப் பிறகு இலங்கையில் ஆசியக் கோப்பைப் போட்டி நடைபெற்றதில்லை. இதனால் பல வருடங்களுக்குப் பிறகு அந்த நாட்டில் ஆசியக் கோப்பை நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்டது. எனினும் கரோனா அச்சுறுத்தல் காரணமாக 2020 ஆசியக் கோப்பைப் போட்டி ஒத்திவைக்கப்பட்டது. ஆசியக் கோப்பை 2021-ல் இலங்கையிலும் 2022-ல் பாகிஸ்தானிலும் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் ஜூன் மாதம் போட்டி நடைபெறுவதாக இருந்த 2021 ஆசியக் கோப்பைப் போட்டியும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இலங்கையில் கரோனா பரவல் மீண்டும் அதிகரித்துள்ளதால் போட்டி ஒத்திவைக்கப்படுவதாக ஆசிய கிரிக்கெட் கவுன்சில் அறிவித்துள்ளது. இதையடுத்து இந்தப் போட்டி 2023-ல் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 2022 ஆசியக் கோப்பைப் போட்டி பாகிஸ்தானில் நடைபெறவுள்ளது.