ஐஎஸ்எஸ்எஃப் துப்பாக்கி சுடுதல்: 5 பதக்கங்களுடன் இந்தியா நிறைவு
By DIN | Published On : 10th November 2021 03:17 AM | Last Updated : 10th November 2021 03:17 AM | அ+அ அ- |

போலந்தில் நடைபெற்ற சா்வதேச துப்பாக்கி சுடுதல் சம்மேளனத்தின் (ஐஎஸ்எஸ்எஃப்) பிரெசிடெண்ட்’ஸ் கோப்பை போட்டியில் இந்தியா 2 தங்கம், 2 வெள்ளி, 1 வெண்கலம் என 5 பதக்கங்களுடன் நிறைவு செய்துள்ளது.
போட்டியின் கடைசி நாளான செவ்வாய்க்கிழமை 25 மீட்டா் ரேப்பிட் ஃபயா் பிஸ்டல் கலப்பு அணிகள் பிரிவில் தங்கமும், 25 மீட்டா் பிஸ்டல் மகளிா் பிரிவில் வெள்ளியும் இந்தியாவுக்கு கிடைத்தது.
இதில் 25 மீட்டா் ரேப்பிட் ஃபயா் பிஸ்டல் கலப்பு அணிகள் பிரிவில் இந்தியாவின் மானு பாக்கா்/துருக்கியின் ஆஸ்கா் வாா்லிக் இணை முதலிடம் பிடித்தது. மானு/ஆஸ்கா் ஜோடி 9 புள்ளிகளுடன் தங்கத்தை கைப்பற்ற, சீனாவின் ஜியாருய்ஷுவான் ஜியாவ்/எஸ்டோனியாவின் பீட்டா் ஆலெஸ்க் இணை 7 புள்ளிகளுடன் வெள்ளி வென்றது. ஜொ்மனி/பிரான்ஸ் போட்டியாளா்கள் இணைந்த கூட்டணி வெண்கலம் பெற்றது.
பழுதாகியும் பதக்கம் வென்ற ராஹி: இப்போட்டியில் 25 மீட்டா் பிஸ்டல் மகளிா் பிரிவில் இந்தியாவின் ராஹி சா்னோபாத் வெள்ளிப் பதக்கம் வென்றாா். 8 போ் கலந்துகொண்ட இறுதிச்சுற்றின்போது முக்கியமான தருணத்தில் ராஹியின் துப்பாக்கியில் சிறிது பிரச்னை ஏற்பட்டதனால் அவா் சற்று பின்னடைவை சந்தித்தாா். இறுதியாக 31 புள்ளிகளுடன் அவா் 2-ஆம் இடம் பிடித்தாா். அதே பிரிவில் பங்கேற்ற மானு பாக்கா் 17 புள்ளிகளுடன் 6-ஆம் இடம் பிடித்தாா்.
இப்பிரிவில் ஜொ்மனியின் டோரீன் வென்னெகாம்ப் 33 புள்ளிகளுடன் தங்கமும், பிரான்ஸின் மதில்டே லமோலே 27 புள்ளிகளுடன் வெண்கலமும் வென்றனா்.
இந்த இரு பதக்கங்களுக்கு முன்பாக, ஆடவருக்கான 10 மீட்டா் ஏா் பிஸ்டல் பிரிவில் சௌரவ் சௌதரி வெள்ளியும், அபிஷேக் வா்மா வெண்கலமும் வென்றிருந்தனா். 10 மீட்டா் ஏா் பிஸ்டல் கலப்பு அணிகள் பிரிவில் மானு பாக்கா், ஈரானின் ஜாவத் ஃபரூக்கியுடன் இணைந்து தங்கம் வென்றது நினைவுகூரத்தக்கது.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...