முகப்பு விளையாட்டு செய்திகள்
துபையில் வாங்கிய கைக்கடிகாரத்தின் மதிப்பு ரூ. 5 கோடியா?: ஹார்திக் பாண்டியா அறிக்கை
By DIN | Published On : 16th November 2021 11:46 AM | Last Updated : 16th November 2021 11:46 AM | அ+அ அ- |

துபையில் வாங்கிய கைக்கடிகாரத்தின் மதிப்பு ரூ. 1.5 கோடிதான், சமூகவலைத்தளங்களில் வெளியானது போல ரூ. 5 கோடி அல்ல என கிரிக்கெட் வீரர் ஹார்திக் பாண்டியா கூறியுள்ளார்.
டி20 உலகக் கோப்பைப் போட்டியில் பங்கேற்ற இந்திய வீரர் ஹார்திக் பாண்டியா, நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். இதையடுத்து ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து மும்பைக்கு வந்த ஹார்திக் பாண்டியாவிடம் விமான நிலையத்தில் ரூ. 5 கோடி மதிப்பிலான இரு கைக்கடிகாரங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகச் சமூகவலைத்தளங்களில் தகவல் வெளியானது. இதற்கு மறுப்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார் பாண்டியா. அதில் அவர் கூறியதாவது:
நவம்பர் 15 அன்று துபையிலிருந்து திரும்பினேன். நான் கொண்டு வந்த பொருள்களைக் காண்பித்து சுங்க வரி செலுத்துவதற்காக மும்பை விமான நிலையத்தின் சுங்கத்துறை அலுவலகத்துக்குச் சென்றேன். மும்பை விமான நிலையத்தில் நான் அளித்த விவரங்கள் பற்றி தவறான தகவல்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளன. அதுபற்றிய விளக்கத்தை அளிக்கிறேன்.
துபையில் சட்டபூர்வமாக நான் வாங்கிய பொருள்கள் பற்றி நானாகத்தான் அறிவித்தேன். அதற்கான சுங்க வரியைச் செலுத்தத் தயாராக இருந்தேன். பொருள் வாங்கியதற்கான எல்லா ஆவணங்களையும் கேட்டார்கள். நானும் அளித்தேன். பொருள்களுக்கான சுங்க வரி மதிப்பீட்டைச் செய்து வருகிறார்கள். அதைச் செலுத்தத் தயாராக உள்ளேன். நான் கொண்டு வந்த கைக்கடிகாரத்தின் மதிப்பு ரூ. 5 கோடி அல்ல, ரூ. 1,50 கோடி .
இந்நாட்டின் சட்டத்தை மதித்து நடப்பவன் நான். எனக்கு மும்பை சுங்கத்துறை அதிகாரிகள் நல்ல ஒத்துழைப்பு அளித்துள்ளார்கள். நானும் அவர்களுக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பதாக உறுதி அளித்துள்ளேன். இந்த விவகாரத்தை முடிப்பதற்கான அனைத்து சட்டபூர்வமான ஆவணங்களையும் அளிக்கத் தயாராக உள்ளேன். நான் சட்டத்தை மீறிவிட்டதாக வெளியான தகவல்கள் தவறானவை என்றார்.