தோனியின் ரசிகராக வந்திருக்கிறேன்: சிஎஸ்கே பாராட்டு விழாவில் முதல்வர் ஸ்டாலின்

சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் ரசிகனாக இந்த விழாவிற்கு வந்திருப்பதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தோனியின் ரசிகராக வந்திருக்கிறேன்: சிஎஸ்கே பாராட்டு விழாவில் முதல்வர் ஸ்டாலின்


சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் ரசிகனாக இந்த விழாவிற்கு வந்திருப்பதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் ஐபிஎல் கோப்பை வென்றதற்கு சென்னையில் உள்ள கலைவாணர் அரங்கில் சனிக்கிழமை மாலை பாராட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் மகேந்திர சிங் தோனி, முதல்வர் மு.க. ஸ்டாலின், பிசிசிஐ செயலர் ஜெய் ஷா, ஐபிஎல் தலைவர் பிரிஜேஷ் படேல், இந்தியா சிமெண்ட்ஸ் நிர்வாக இயக்குநர் என். சீனிவாசன், கிரிக்கெட் ஜாம்பவான் கபில் தேவ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசியது:

இந்த விழாவிற்கு தோனியின் ரசிகராக வந்திருக்கிறேன். நான் மட்டுமல்ல கருணாநிதியும் தோனி ரசிகர்தான். எனவே, இந்த விழாவிற்கு மகிழ்ச்சியுடனும், பெருமையுடனும், பூரிப்புடனும் வந்துள்ளேன்.

சென்னை என்றாலே சூப்பர்தான். அது மீண்டும் ஒருமுறை நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்த விழாவில் கலந்துகொண்டிருந்தாலும், முதல்வர் என்கிற முறையில் என் மனம் மழை குறித்தும், அதனால் ஏற்பட்ட வெள்ளம் குறித்தும் தான் யோசித்துக்கொண்டிருக்கிறது. இப்படிப்பட்ட நெருக்கடி நேரத்தில் இளைப்பாரமாக இந்த விழாவிற்கு வந்திருக்கிறேன்.

தோனி அவர்களுடைய சொந்த மாநிலம் ஜார்க்கண்ட். தற்போது சென்னைக்காரராகவே மாறிவிட்டார். இந்த மக்களுக்கு அவர் செல்லமாகிவிட்டார். கடின உழைப்பால் உச்சத்தைத் தொட்டவர் என்பதால்தான் தங்களுள் ஒருவராகவே மக்கள் அவரை நினைத்துக்கொண்டுள்ளனர். 

சென்னை கோப்பை பெற்றது என்பதைக் காட்டிலும் சென்னை அணி தனது ஆளுமையை நிலைநிறுத்திக்கொண்டது என்பதே சரியாகும். சென்னை அணி மீண்டும் எழுச்சி கண்டுள்ளது.

சிறந்த கேப்டன்ஷிப்புக்கான அடையான் தோனி. டு பிளெஸ்ஸி, பிராவோ போன்ற அனுபவம் வாய்ந்த வீரர்கள் மற்றும் ருதுராஜ் போன்ற இளம் வீரர்களை ஒருபுள்ளியில் இணைப்பதுதான் தேர்ந்த ஆளுமைக்கான எடுத்துக்காட்டு. 

இலக்குதான் முக்கியம். அதை அடைய உழைப்புதான் முக்கியம். இது அரசியலுக்கும் பொருந்தும்.

சிமெண்ட் குறித்து அறிந்ததால்தான், தனது அணியை உறுதியுடன் மீட்டெடுத்திருக்கிறார் சீனிவாசன். இது தொடர வேண்டும் என விரும்புகிறேன்.

நீங்கள், உங்கள் விளையாட்டைத் தொடருங்கள். நாங்கள், எங்கள் மக்கள் பணியைத் தொடர்கிறோம்" என்றார் முதல்வர் ஸ்டாலின்.

இறுதியாக, "அன்புள்ள தோனி, இன்னும் பல ஐபிஎல் சீசன்களுக்கு நீங்களே சென்னை சூப்பர் கிங்ஸை வழிநடத்த வேண்டும்" என்பதை ஆங்கிலத்தில் இரண்டு முறை கூறி தனது உரையை முடித்துக்கொண்டார் முதல்வர் ஸ்டாலின்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com