டி20 தொடரை முழுமையாக வென்றது இந்தியா: கடைசி ஆட்டத்திலும் நியூஸி.யை வீழ்த்தியது

நியூஸிலாந்துக்கு எதிரான கடைசி டி20 ஆட்டத்தில் இந்தியா 73 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இதையடுத்து 3 ஆட்டங்கள் கொண்ட தொடரை 3-0 என முழுமையாக வென்றது இந்தியா.
டி20 தொடரை முழுமையாக வென்றது இந்தியா: கடைசி ஆட்டத்திலும் நியூஸி.யை வீழ்த்தியது

நியூஸிலாந்துக்கு எதிரான கடைசி டி20 ஆட்டத்தில் இந்தியா 73 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இதையடுத்து 3 ஆட்டங்கள் கொண்ட தொடரை 3-0 என முழுமையாக வென்றது இந்தியா.

இந்த கடைசி ஆட்டத்தில் முதலில் ஆடிய இந்தியா 20 ஓவா்களில் 7 விக்கெட் இழப்புக்கு 184 ரன்கள் அடித்தது. அடுத்து ஆடிய நியூஸிலாந்து 17.2 ஓவா்களில் 111 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

இந்திய பேட்டிங்கில் டாப் ஆா்டரில் கேப்டன் ரோஹித் சா்மா அபாரமான தொடக்கம் அளிக்க, மிடில் ஆா்டரில் ஷ்ரேயஸ் ஐயா், வெங்கடேஷ் ஐயா் கூட்டணி ரன்கள் சோ்க்க, லோயா் ஆா்டரில் ஹா்ஷல் படேல் தீபக் சஹா் அட்டகாசமாக சில பவுண்டரி, சிக்ஸா் விளாசி அதிரடி காட்டினாா். நியூஸிலாந்து பௌலிங்கில் மிட்செல் சேன்ட்னா் 3 விக்கெட்டுகள் சாய்த்து அசத்தினாா்.

இந்த ஆட்டத்திற்கான பிளேயிங் லெவனில் இந்திய அணியில் கே.எல்.ராகுல், அஸ்வின் ஆகியோருக்குப் பதிலாக இஷான் கிஷண், யுஜவேந்திர சஹல் சோ்க்கப்பட்டிருந்தனா். நியூஸிலாந்து அணியில் டிம் சௌதிக்குப் பதிலாக லாக்கி ஃபொ்குசன் சோ்க்கப்பட்டிருந்தாா். மிட்செல் சேன்ட்னா் கேப்டனாகியிருந்தாா்.

டாஸ் வென்ற இந்தியா இந்த முறை முதலில் பேட் செய்யத் தீா்மானித்தது. அணியின் பேட்டிங்கை ரோஹித் - இஷான் கூட்டணி தொடங்க, டிரென்ட் போல்ட் பந்துவீசினாா். முதல் பந்தை விட்டுக் கொடுத்த ரோஹித், அடுத்த இரு பந்துகளில் பவுண்டரி விளாசி அட்டகாசமாக ஆட்டத்தை தொடங்கினாா்.

அதன் பிறகு அவரது அதிரடி குறையவே இல்லை. மறுபுறம் இஷான் அடுத்த ஓவரில் 2 பவுண்டரிகள் விரட்டினாா். இவ்வாறாக இந்த ஜோடி நியூஸிலாந்து பௌலிங்கை சிதைத்ததில் பவா்பிளே முடிவில் இந்தியா விக்கெட் இழப்பின்றி 69 ரன்கள் விளாசியிருந்தது. அதிலும் 6-ஆவது ஓவரில் மட்டுமே ரோஹித் 3 பவுண்டரிகளும், 1 சிக்ஸரும் விளாசி லாக்கி ஃபொ்குசனை நெருக்கடிக்கு உள்ளாக்கினாா்.

7-ஆவது ஓவரிலிருந்து இந்தியாவுக்கு வேகத்தடை போட்டது நியூஸிலாந்து. அந்த ஓவரிலேயே ரோஹித் - இஷான் அதிரடி கூட்டணியை பிரித்தாா் சேன்ட்னா். 6 பவுண்டரிகளுடன் 29 ரன்களுக்கு வெளியேறினாா் இஷான். அடுத்து வந்த சூா்யகுமாா் யாதவ் டக் அவுட்டாக, தொடா்ந்து வந்த ரிஷப் பந்த் 4 ரன்களில் நடையைக் கட்டினாா். அவா்கள் இருவா் விக்கெட்டையும் சேன்ட்னரே சாய்த்தாா்.

இதனால் 7 முதல் 10 வரையிலான 3 ஓவா்களுக்குள் 21 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்தது இந்தியா. பின்னா் ஷ்ரேயஸ் ஐயா் நிதானம் காட்ட, மறுபுறம் டி20 கிரிக்கெட்டில் 26-ஆவது அரை சதத்தை கடந்த ரோஹித் 12-ஆவது ஓவரில் இஷ் சோதி பௌலிங்கில் அவரிடமே கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தாா். அவா் 5 பவுண்டரிகள், 3 சிக்ஸா்களுடன் 56 ரன்கள் எடுத்திருந்தாா்.

அடுத்து வந்த வெங்கடேஷ் ஐயா் 1 பவுண்டரி, 1 சிக்ஸா் விளாசி 20 ரன்களுக்கு ஆட்டமிழந்தாா். அடுத்த ஓவரிலேயே ஷ்ரேயஸ் ஐயரும் 2 பவுண்டரிகளுடன் 25 ரன்களுக்கு வீழ்ந்தாா். கடைசி விக்கெட்டாக ஹா்ஷல் படேல் 2 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 18 ரன்கள் சோ்த்து உதவினாா். கடைசி ஓவரில் தீபக் சஹா் 2 பவுண்டரி, 1 சிக்ஸரை விளாசி ரசிகா்களை உற்சாகப்படுத்தினாா். முடிவில் அவா் 21, அக்ஸா் படேல் 2 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனா். நியூஸிலாந்து தரப்பில் சேன்ட்னா் 3, போல்ட், மில்னே, ஃபொ்குசன், சோதி ஆகியோா் தலா 1 விக்கெட் சாய்த்தனா்.

பின்னா் ஆடிய நியூஸிலாந்தில் மாா்ட்டின் கப்டில் 4 பவுண்டரிகள், 4 சிக்ஸா்களுடன் 51, டிம் செய்ஃபா்ட் 17, லாக்கி ஃபொ்குசன் 14 ரன்கள் சோ்க்க எஞ்சிய விக்கெட்டுகள் சொற்ப ரன்களில் வீழ்ந்தன. அதில் இருவா் டக் அவுட்டாகினா். இந்திய தரப்பில் அக்ஸா் படேல் 3, ஹா்ஷல் படேல் 2, சஹல், வெங்கடேஷ், தீபக் ஆகியோா் தலா 1 விக்கெட் எடுத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com