பகலிரவு டெஸ்ட்: சதமடித்து சாதனை செய்த இந்தியாவின் ஸ்மிருதி மந்தனா

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பகலிரவு டெஸ்டில் இந்தியத் தொடக்க வீராங்கனை ஸ்மிருதி மந்தனா சதமடித்து சாதனை செய்துள்ளார்.
பகலிரவு டெஸ்ட்: சதமடித்து சாதனை செய்த இந்தியாவின் ஸ்மிருதி மந்தனா

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பகலிரவு டெஸ்டில் இந்தியத் தொடக்க வீராங்கனை ஸ்மிருதி மந்தனா சதமடித்து சாதனை செய்துள்ளார்.

இந்தியா - ஆஸ்திரேலியா மகளிா் அணிகள் மோதும் பகலிரவு டெஸ்ட் கிரிக்கெட் கோல்ட்கோஸ்டில் நேற்று தொடங்கியது. இந்திய மகளிர் அணி முதல்முறையாகப் பகலிரவு டெஸ்டில் பங்கேற்கிறது. மகளிர் கிரிக்கெட்டில் இது 2-வது பகலிரவு டெஸ்ட். 

டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி ஃபீல்டிங்கைத் தேர்வு செய்தது. இந்திய அணியில் மேக்னா சிங், யாஸ்திகா பாட்டியா டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு அறிமுகம் ஆகியுள்ளார்கள். 

இந்திய அணிக்கு மந்தனாவும் ஷஃபாலி வர்மாவும் சிறப்பான தொடக்கத்தை அளித்தார்கள். 51 பந்துகளில் அரை சதத்தைப் பூர்த்தி செய்தார் மந்தனா. 2013-க்குப் பிறகு மகளிர் டெஸ்ட் கிரிக்கெட்டில் எடுக்கப்பட்ட 39 அரை சதங்களில் குறைந்த பந்துகளில் அரை சதமெடுத்தவர் என்கிற பெருமை அவருக்குக் கிடைத்தது. 25 ஓவர்கள் வரை தொடக்கக் கூட்டணி நீடித்தது. ஷஃபாலி அளித்த மூன்று கேட்சுகளை ஆஸி. வீராங்கனைகள் தவறவிட்டார்கள். ஆனால் 26-வது ஓவரின் முதல் பந்தில் 31 ரன்களுக்கு ஆட்டமிழந்தார் ஷஃபாலி வர்மா. முதல் விக்கெட்டுக்கு மந்தனாவும் ஷஃபாலியும் 93 ரன்கள் சேர்த்தார்கள். 

முதல் நாளன்று மழை பெய்ததால் ஆட்டம் வெகுவாகப் பாதிக்கப்பட்டது. முதல் நாள் முடிவில் இந்திய மகளிர் அணி 44.1 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 132 ரன்கள் எடுத்தது. மந்தனா 80, பூனம் ராவத் 16 ரன்களுடன் களத்தில் இருந்தார்கள்.

இன்று ஆட்டம் தொடங்கிய பிறகு தனது சிறப்பான பேட்டிங்கைத் தொடர்ந்தார் மந்தனா. 170 பந்துகளில் தனது முதல் டெஸ்ட் சதத்தை எடுத்தார். ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் சதமடித்த முதல் இந்திய வீராங்கனை என்கிற சாதனையை அவர் படைத்தார். மேலும், வெளிநாடுகளில் சதமடித்த 5-வது இந்திய வீராங்கனை - மந்தனா. தொடர்ந்து நன்கு விளையாடி 126 ரன்கள் எடுத்தபோது ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அதிக ரன்கள் எடுத்த வீராங்கனை என்கிற பெருமையை அவர் அடைந்தார். பிறகு 127 ரன்களில் கார்ட்னர் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். மந்தனா - ராவத் கூட்டணி 2-வது விக்கெட்டுக்கு 102 ரன்கள் சேர்த்தது.

இந்திய மகளிர் அணி தனது முதல் இன்னிங்ஸில் 69 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 195 ரன்கள் எடுத்துள்ளது. பூனம் ராவத் 30 ரன்கள், மிதாலி ராஜ் ரன் எதுவும் எடுக்காமலும் களத்தில் உள்ளார்கள். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com