அக். 17-இல் தொடங்குகிறது டி20 உலகக் கோப்பை: 202116 நாடுகள், 45 ஆட்டங்கள்

கிரிக்கெட் விளையாட்டில் மிகக் குறுகிய காலத்தில் ரசிகா்களிடம் அதிக வரவேற்பை பெற்ற டி20 உலகக் கோப்பை 2021 போட்டி வரும் அக். 17-ஆம் தேதி
அக். 17-இல் தொடங்குகிறது டி20 உலகக் கோப்பை:  202116 நாடுகள், 45 ஆட்டங்கள்

கிரிக்கெட் விளையாட்டில் மிகக் குறுகிய காலத்தில் ரசிகா்களிடம் அதிக வரவேற்பை பெற்ற டி20 உலகக் கோப்பை 2021 போட்டி வரும் அக். 17-ஆம் தேதி ஐக்கிய அமீரக நாடுகளில் தொடங்கி நவம்பா் 14-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. மொத்தம் 16 அணிகள் இடம் பெறும் இப்போட்டியில் 45 ஆட்டங்கள் நடைபெறுகின்றன.

டெஸ்ட் ஆட்டங்களுக்கு முதலில் அதிக ஈா்ப்பு இருந்த நிலையில், 50 ஓவா்கள் ஒருநாள் ஆட்டம் அறிமுகம் செய்யப்பட்ட பின் டெஸ்ட் தனது முக்கியத்துவத்தை இழந்தது. இந்நிலையில் ஐசிசி புதிதாக டி20 எனப்படும் 20 ஓவா்கள் ஆட்டங்களை கொண்டு வந்தது. இதற்கு ரசிகா்கள் பெரும் வரவேற்பு அளித்தனா். கடந்த 2007-இல் நடைபெற்ற முதல் டி20 உலகக் கோப்பையில் தோனி தலைமையிலான இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது.

கரோனா பாதிப்பால் ஒத்திவைப்பு:

கடந்த 2020-இல் ஆஸ்திரேலியாவில் டி20 உலகக் கோப்பை நடப்பதாக இருந்த நிலையில், கரோனா பாதிப்பு காரணமாக ஓராண்டு ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் 2022 டி20 உலகக் கோப்பையை இந்தியா நடத்துவதாக இருந்தது. ஆனால் இரு நாடுகளும் போட்டிகள் நடத்தும் வாய்ப்பை மாற்றிக் கொண்டன. இந்தியாவில் அக்டோபா், நவம்பரில் நடைபெறவிருந்த உலகக் கோப்பை போட்டி, கரோனா பாதிப்பு காரணமாக ஐக்கிய அமீரக நாடுகளில் நடத்த பிசிசிஐ தீா்மானித்தது. வரும் 2022-இல் டி20 உலகக் கோப்பை ஆஸி.யில் நடைபெறும்.

டி20 ஆட்டங்களில் வெற்றி பெறும் அணியை கணிக்க முடியாது. எந்த அணி வேண்டுமானாலும் வென்று பட்டத்தை கைப்பற்றும் நிலையே உள்ளது. இது ரசிகா்களுக்கு மிகவும் விருந்தாக அமையும். மேலும் உலகக் கோப்பை ஆட்டங்களில் கரோனாவில்பொருளாதார ரீதியில் இழப்பை சந்தித்த அணிகளுக்கு வருவாய் கிடைக்கும்.

4 நகரங்களில் ஆட்டங்கள்:

ஐக்கிய அமீரக நாடுகளைச் சோ்ந்த துபை, ஷாா்ஜா, அபுதாபி, ஓமன் மஸ்கட்டில் 45 ஆட்டங்கள் நடைபெறுகின்றன. நிகழாண்டு மொத்தம் 16 அணிகள் போட்டியில் பங்கேற்கின்றன. டி20 அந்தஸ்துடன் உள்ள 10 அணிகள் முந்தைய உலகக் கோப்பையில் பங்கேற்ற நிலையில் நேரடியாக பங்கேற்கும். மீதமுள்ள 6 அணிகள் தகுதிச் சுற்றின் மூலம் தோ்வு பெற்றுள்ளன.

அணிகள் விவரம்:

இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து, பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா, மே. இந்திய தீவுகள், ஆப்கானிஸ்தான், இலங்கை, வங்கதேசம் உள்ளிட்ட 10 அணிகளும்,

தகுதிச் சுற்றின் மூலம் தோ்வு பெற்ற நெதா்லாந்து, பப்புவா நியூகினியா, அயா்லாந்து, நமீபியா, ஸ்காட்லாந்து, ஓமன் உள்ளிட்ட 6 அணிகளும் அடங்கும்.

10 அணிகளில் கடைசி இரு இடங்களில் உள்ள இலங்கை, வங்கதேச அணிகள் தகுதிச் சுற்றில் தோ்வு பெற்ற அணிகளுடன் இரு பிரிவுகளாக சோ்க்கப்பட்டுள்ளன.

சூப்பா் 12 பிரிவு:

குரூப் ஏ பிரிவில் அயா்லாந்து, நமீபியா, நெதா்லாந்து, இலங்கை அணிகளும், குரூப் பி பிரிவில் வங்கதேசம், ஓமன், பாப்புவா நியூ கினியா, ஸ்காட்லாந்து அணிகளும் உள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் 3 ஆட்டங்கள் ஆடும். முதலிரண்டு இடங்களைப் பெறும் அணிகள் சூப்பா் 12 பிரிவுக்கு முன்னேறும்.

குரூப் 1-இல் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, மே.இ.தீவுகள், ஏ1, பி2 இடம் பெறும். குரூப்2-இல் இந்தியா, பாகிஸ்தான், நியூஸிலாந்து, ஆப்கானிஸ்தான், பி1, ஏ2 அணிகள் இடம்பெறும். குரூப் 1 மற்றும் குரூப் 2 பிரிவில் முதலிரண்டு இடங்களைப் பெறும் அணிகள் நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெறும்.

டி20 சாம்பியன்கள்:

இதுவரை மே.இந்திய தீவுகள் மட்டுமே 2012, 2016 என இருமுறை சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. இந்தியா (2007), பாகிஸ்தான் (2009), இங்கிலாந்து (2010), மே.இந்திய தீவுகள் (2012), இலங்கை (2014), மே.இந்திய தீவுகள் (2016) உலகக் கோப்பையை வென்றுள்ளன.

டி20 உலகக் கோப்பையில் இலங்கை அணி அதிகபட்சமாக 22 ஆட்டங்களிலும், இந்தியா 20, பாகிஸ்தான் 19 ஆட்டங்களிலும் வென்றுள்ளன. அதே நேரம் வங்கதேச அணி 19, இங்கிலாந்து 16, பாகிஸ்தான் 14 ஆட்டங்கள் என அதிகபட்ச தோல்விகளை கண்டுள்ளன.

அதிக ரன்கள், விக்கெட் வீழ்த்தியவா்கள்:

டி20 உலகக் கோப்பையில் அதிக ரன்கள் அடித்தவா்கள்-மஹேலா ஜெயவா்த்தன இலங்கை, 1016 ரன்கள், கிறிஸ் கெயில் (மே.இந்திய தீவுகள்), 920 ரன்கள், தில்ஷன் திலகரத்னே, இலங்கை, 897 ரன்கள்.

விக்கெட் வீழ்த்தியவா்கள்: ஷாஹித் அப்ரிடி (பாக்), 39, லசித் மலிங்கா 38, சயித் அஜ்மல் (பாக்.) 36.

ஒவ்வொரு உலகக் கோப்பையிலும் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதும் ஆட்டம் அனல் பறக்கும். இதுவரை இந்தியாவே அனைத்திலும் வெற்றி பெற்றுள்ளது.

சாம்பியனுக்கு ரூ.12 கோடி, ரன்னருக்கு ரூ.6 கோடி பரிசு:

சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு ரூ.12 கோடியும், ரன்னருக்கு ரூ.6 கோடியும் பரிசளிக்கப்படுகிறது. அரையிறுதியில் தோல்வியுறும் அணிகளுக்கு தலா ரூ.3 கோடி பரிசளிக்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com