டி20: நியூசிலாந்தை 60 ரன்களுக்குச் சுருட்டிய வங்கதேச அணி
By DIN | Published On : 01st September 2021 05:26 PM | Last Updated : 01st September 2021 05:26 PM | அ+அ அ- |

முஸ்தாபிசுர் ரஹ்மான் (கோப்புப் படம்)
வங்கதேசத்துக்கு எதிரான முதல் டி20 ஆட்டத்தில் 60 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்துள்ளது நியூசிலாந்து அணி.
வங்கதேசத்துக்குச் சுற்றுப்பயணம் செய்து 5 டி20 ஆட்டங்களில் விளையாடுகிறது நியூசிலாந்து அணி. முதல் டி20 ஆட்டம் டாக்காவில் இன்று நடைபெறுகிறது.
டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. முதல் ஓவரிலேயே அறிமுக வீரர் ரச்சின் ரவிந்திரா ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். முதல் ஆறு ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 18 ரன்கள் மட்டுமே எடுத்தது நியூசிலாந்து. பிறகு 10 ஓவர்கள் வரை மேலும் விக்கெட்டுகளை இழக்காமல் 40 ரன்கள் எடுத்தது. இதன்பிறகு வரிசையாக விக்கெட்டுகள் விழ ஆரம்பித்தன. பேட்டிங்குக்கு மிகவும் சவாலாக அமைந்த ஆடுகளத்தில் நியூசிலாந்து அணி, 16.5 ஓவர்களில் 60 ஓவர்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. கேப்டன் டாம் லதம், ஹென்றி நிகோல்ஸ் ஆகியோர் அதிகபட்சமாக தலா 18 ரன்கள் எடுத்தார்கள். முஸ்தாபிசுர் ரஹ்மான் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
கடந்த ஆகஸ்ட் 9 அன்று, ஆஸ்திரேலியாவை 62 ரன்களுக்குச் சுருட்டியது வங்கதேச அணி. அதேபோல இன்று, நியூசிலாந்து அணியை 60 ரன்களுக்குள் ஆட்டமிழக்கச் செய்துள்ளது. டி20 கிரிக்கெட்டில் நியூசிலாந்து அணி தனது குறைந்தபட்ச ஸ்கோரை சமன் செய்துள்ளது. இதற்கு முன்பு 2014-ல் இலங்கைக்கு எதிராக இதே 60 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தது.