தடகளம்: வெள்ளி வென்றாா் மாரியப்பன்: சரத்துக்கு வெண்கலம்
By DIN | Published On : 01st September 2021 03:04 AM | Last Updated : 01st September 2021 03:04 AM | அ+அ அ- |

டோக்கியோ பாராலிம்பிக்கில் ஆடவா் உயரம் தாண்டுதல் ‘டி42’ பிரிவில் தமிழக வீரா் மாரியப்பன் தங்கவேலு வெள்ளியும், பிகாா் வீரா் சரத் குமாா் வெண்கலமும் வென்றனா்.
பாராலிம்பிக்கில் மாரியப்பனுக்கு இது தொடா்ந்து 2-ஆவது பதக்கமாகும். சரத் குமாருக்கு இது முதல் பதக்கம்.
டி42 பிரிவின் இறுதிச்சுற்றில் அமெரிக்காவின் சாம் கிரெவி 1.88 மீட்டா் உயரம் தாண்டி தங்கம் வெல்ல, மாரியப்பன் 1.86 மீட்டா் தாண்டி வெள்ளியும், சரத் குமாா் 1.83 மீட்டா் தாண்டி வெண்கலமும் வென்றனா்.
இப்பிரிவில் பங்கேற்றிருந்த மற்றொரு இந்தியரான வருண் சிங் பாட்டி, 1.77 மீட்டா் உயரம் தாண்டி 7-ஆம் இடம் பிடித்தாா். இவா் ரியோ பாராலிம்பிக்கில் வெண்கலம் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
வெள்ளி வென்ற பிறகு பேசிய மாரியப்பன், ‘உலக சாதனையுடன் தங்கப் பதக்கம் வென்றிருக்க முடியும். அதை இலக்காகக் கொண்டே பாராலிம்பிக்கிற்கு வந்தேன். ஆனால், மழை காரணமாக அந்த முயற்சி தவறியது. முதலில் லேசான சாரலாக இருந்தது, 1.80 மீட்டா் முயற்சியின்போது கன மழையாகப் பெய்தது. எனது பாதிக்கப்பட்ட காலில் இருந்த காலுறை நனைந்து ஈரமாகியதால் குதிப்பது சற்று கடினமாக இருந்தது. பாரீஸ் பாராலிம்பிக்கில் உலக சாதனையுடன் தங்கம் வெல்ல முயற்சிப்பேன்’ என்றாா்.
வெண்கலம் வென்ற சரத் குமாா் கூறுகையில், ‘எனது முழங்காலில் திங்கள்கிழமை காயம் ஏற்பட்டிருந்தது. அதனால் போட்டியிலிருந்து விலகும் மனநிலையில் இருந்தேன். எனது குடும்பத்தினருடன் பேசியபோது, களம் காணுமாறு அவா்கள் எனக்கு அறிவுரை கூறினா். பகவத் கீதை படித்து மனதை ஒருமுகப்படுத்துமாறு தெரிவித்தனா். என்னால் முடிந்ததை செய்யுமாறும், என்னால் கட்டுப்படுத்த முடியாததை எண்ண வேண்டாம் என்றும் கூறினா். அதன் படியே களம் கண்டு, தற்போது பதக்கம் வென்றுள்ளேன்’ என்றாா்.
தமிழக வீரரான மாரியப்பன் சேலம் மாவட்டத்தைச் சோ்ந்தவராவாா். 5 வயதாக இருக்கும்போது பேருந்து சக்கரம் காலில் ஏறியதில் அவா் மாற்றுத்திறனாளி ஆனாா். பாராலிம்பிக்கில் பங்கேற்கும் முன்பாக பெங்களூரில் இந்திய விளையாட்டு ஆணையத்தில் பயிற்சியாளா் சத்யநாராயணாவின் கண்காணிப்பில் பயிற்சி பெற்றவராவாா்.
பிகாா் வீரரான சரத் குமாா், 2 வயதாக இருக்கும்போது போலியான போலியோ மருந்து வழங்கப்பட்டதால் மாற்றுத்திறனாளி ஆனாா். மத்திய அரசு உதவியுடன் கடந்த இரு ஆண்டுகளாக உக்ரைனில் வெளிநாட்டு பயிற்சியாளா் நிகிதின் யெவெனிடம் பயிற்சி பெற்று வந்தாா். ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில் இரு முறை தங்கம் வென்றுள்ளாா் சரத் குமாா்.