டி20 உலகக் கோப்பையிலிருந்து பிரபல வங்கதேச வீரர் விலகல்
By DIN | Published On : 01st September 2021 01:59 PM | Last Updated : 01st September 2021 01:59 PM | அ+அ அ- |

பிரபல வங்கதேச வீரர் தமிம் இக்பால் டி20 உலகக் கோப்பைப் போட்டியிலிருந்து விலகியுள்ளார்.
டி20 உலகக் கோப்பை - ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் அக்டோபர் 17 முதல் நவம்பர் 14 வரை நடைபெறுகிறது. துபை, அபு தாபி, ஷார்ஜா, ஓமன் என நான்கு பகுதிகளில் டி20 உலகக் கோப்பை நடைபெறவுள்ளது. இந்தியாவில் நடத்தப்படவிருந்த டி20 உலகக் கோப்பை போட்டி, கரோனா சூழல் காரணமாக ஐக்கிய அரபு அமீரகத்துக்கு மாற்றப்பட்டுள்ளது.
இந்நிலையில் இப்போட்டியிலிருந்து பிரபல வங்கதேச வீரர் தமிம் இக்பால் விலகியுள்ளார்.
கடந்த ஏப்ரல் - மே மாதங்களில் இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் தமிம் இக்பாலுக்குக் காயம் ஏற்பட்டது. இதனால் ஜிம்பாப்வே, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடர்களில் தமிம் இக்பால் விளையாடவில்லை. நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரிலும் அவர் இடம்பெறவில்லை. 2019 முதல் மூன்று டி20 ஆட்டங்களில் மட்டுமே அவர் விளையாடியுள்ளார்.
டி20 உலகக் கோப்பையில் விளையாடாதது பற்றி தமிம் இக்பால் கூறியதாவது:
கடந்த 15, 20 டி20 ஆட்டங்களில் நான் விளையாடவில்லை. எனக்குப் பதிலாக யார் விளையாடியிருந்தாலும் அவர்களுடைய இடத்தை எடுத்துக்கொள்ள நான் விரும்பவில்லை. கிரிக்கெட் வாரியத்தின் தலைவர், தேர்வுக்குழுத் தலைவர் ஆகியோரிடம் இதுபற்றி பேசினேன். டி20 உலகக் கோப்பையில் நான் விளையாடக்கூடாது. எனவே என்னைத் தேர்வு செய்யவேண்டாம் எனக் கூறியுள்ளேன். நீண்ட நாளாக விளையாடாதது, காயம் ஏற்பட்டது போன்றவை இம்முடிவுக்கான காரணங்கள். எனினும் டி20 உலகக் கோப்பைக்கு முன்பு காயத்திலிருந்து நான் குணமாகிவிடுவேன். டி20 உலகக் கோப்பைப் போட்டியில் விளையாடாமல் போனாலும் டி20 கிரிக்கெட்டிலிருந்து நான் ஓய்வு பெறவில்லை என்று அறிவித்துள்ளார்.