3-ம் நாள் தேநீர் இடைவேளை: ரோஹித், புஜாராவால் இந்தியா ஆதிக்கம்
By DIN | Published On : 04th September 2021 08:20 PM | Last Updated : 04th September 2021 08:20 PM | அ+அ அ- |

இங்கிலாந்துடனான 4-வது டெஸ்ட் ஆட்டத்தின் 3-ம் நாள் தேநீர் இடைவேளையில் இந்திய அணி 1 விக்கெட் இழப்புக்கு 199 ரன்கள் எடுத்து இரண்டாவது இன்னிங்ஸில் 100 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது.
இங்கிலாந்து, இந்தியா அணிகளுக்கிடையிலான 4-வது டெஸ்ட் ஆட்டம் லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 191 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. தொடர்ந்து முதல் இன்னிங்ஸை ஆடிய இங்கிலாந்து 290 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
இதையடுத்து, 99 ரன்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய அணிக்கு ரோஹித் சர்மா மற்றும் கேஎல் ராகுல் அற்புதமான தொடக்கத்தைத் தந்தனர். முதல் விக்கெட்டுக்கு 83 ரன்கள் சேர்த்த நிலையில் ராகுல் 46 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
இதையடுத்து, ரோஹித்துடன் இணைந்த சேத்தேஷ்வர் புஜாரா துரிதமாக ரன்கள் சேர்த்து இங்கிலாந்துக்கு நெருக்கடி தந்தார். இதனால், தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இந்திய அணியும் முன்னிலைப் பெற்றது. புஜாரா அரைசதத்தை நெருங்க ரோஹித் சதத்தை நெருங்கினார்.
இதையும் படிக்க | அந்நிய மண்ணில் முதல் சதம்: சிக்ஸர் மூலம் எட்டிய ரோஹித்!
94 ரன்கள் எடுத்திருந்தபோது மொயீன் அலி சுழலில் சிக்ஸரைப் பறக்கவிட்ட ரோஹித் சர்மா அந்நிய மண்ணில் தனது முதல் சதத்தை எட்டினார். இதற்கு முன்பு டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர் அடித்த 7 சதங்களும் இந்திய மண்ணில் அடித்தவை.
ராகுல் ஆட்டமிழந்தவுடன் தடுமாற்றம் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் புஜாராவின் பதிலடி ஆட்டத்தால் இந்திய அணியே ஆதிக்கத்தைத் தொடர்ந்தது. இந்த இணை இரண்டாவது விக்கெட்டுக்கு 100 ரன்களைத் தாண்டியது. உணவு இடைவேளைக்குப் பிறகு மட்டும் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 91 ரன்கள் சேர்த்தது.
3-ம் நாள் தேநீர் இடைவேளையில் இந்திய அணி 1 விக்கெட் இழப்புக்கு 199 ரன்கள் எடுத்துள்ளது. ரோஹித் 103 ரன்களுடனும், புஜாரா 48 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் உள்ளனர்.
இதன்மூலம், இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணி 100 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது.
முக்கிய செய்திகளை உடனுக்குடன் பெற... 'தினமணி'யின் வாட்ஸ்ஆப் செய்திச் சேவையில் இணைந்திருங்கள்...
தினமணி channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029Va60JxGFcowBIEtwvB0G