சாதனையை முறியடிக்க முடியாமல் ஓய்வு பெற்ற ஜிம்பாப்வே வீரர்
By DIN | Published On : 14th September 2021 01:36 PM | Last Updated : 14th September 2021 01:36 PM | அ+அ அ- |

ஜிம்பாப்வே வீரர் பிரண்டன் டெய்லர், சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றுள்ளார்.
ஜிம்பாப்வே அணிக்காக 2004 முதல் விளையாட ஆரம்பித்த டெய்லர், 34 டெஸ்ட், 205 ஒருநாள், 45 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார். அயர்லாந்துக்கு எதிராகத் தனது கடைசி சர்வதேச ஆட்டத்தில் விளையாடியுள்ளார். இந்த ஆட்டத்தில் அயர்லாந்து அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. டெய்லர் 7 ரன்களில் ஆட்டமிழந்தார்.
ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்த ஜிம்பாப்வே வீரர், ஆண்டி ஃபிளவர். அவருடைய சாதனையை முறியடிக்க டெய்லருக்கு 110 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் அயர்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் 7 ரன்கள் மட்டும் எடுத்ததால் ஜிம்பாப்வே ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தார்கள். இதனால் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்த ஜிம்பாப்வே வீரர்களின் பட்டியலில் 2-ம் இடத்தில் அவர் உள்ளார். எனினும் ஒருநாள் கிரிக்கெட்டில் 11 சதங்கள் அடித்து, அதிக சதங்கள் அடித்த ஜிம்பாப்வே வீரர் என்கிற பெருமையை அவர் பெற்றுள்ளார்.
அதிக சர்வதேச ரன்கள் எடுத்த ஜிம்பாப்வே வீரர்களின் பட்டியலில் ஆண்டி ஃபிளவர், கிராண்ட் ஃபிளவருக்கு அடுத்ததாக 3-ம் இடத்தில் உள்ளார் டெய்லர். 318 இன்னிங்ஸில் 9938 ரன்கள் எடுத்துள்ளார். அதிக சர்வதேச சதங்கள் எடுத்த ஜிம்பாப்வே வீரர்களின் பட்டியலிலும் டெய்லருக்கே முதல் இடம். 17 சதங்கள். அதேபோல ஜிம்பாப்வே வீரர்களில் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்கள் அடித்ததும் டெய்லர் தான். 106 சிக்ஸர்கள்.