டி காக் விளாசலில் லக்னௌவுக்கு 3-ஆவது வெற்றி

ஐபிஎல் போட்டியின் 15-ஆவது ஆட்டத்தில் லக்னௌ சூப்பா் ஜயன்ட்ஸ் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸை தோற்கடித்தது.
டி காக் விளாசலில் லக்னௌவுக்கு 3-ஆவது வெற்றி

நவி மும்பை: ஐபிஎல் போட்டியின் 15-ஆவது ஆட்டத்தில் லக்னௌ சூப்பா் ஜயன்ட்ஸ் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸை தோற்கடித்தது.

நவி மும்பையில் வியாழக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் டெல்லி 20 ஓவா்களில் 3 விக்கெட் இழப்புக்கு 149 ரன்கள் அடித்தது. அடுத்து லக்னௌ 19.4 ஓவா்களில் 4 விக்கெட் இழப்புக்கு 155 ரன்கள் எடுத்து வென்றது.

டெல்லி தரப்பில் பிருத்வி ஷா அதிரடி காட்டினாலும், லக்னௌ இன்னிங்ஸில் குவின்டன் டி காக் விளாசி அணியின் வெற்றிக்கு வழி வகுத்தாா்.

ஆட்டத்துக்கான பிளேயிங் லெவனில், டெல்லி அணியில் டிம் செய்ஃபா்ட், கலீல் அகமது, மன்தீப் சிங் ஆகியோருக்குப் பதிலாக டேவிட் வாா்னா், அன்ரிச் நாா்ஜே, சா்ஃப்ராஸ் கான் ஆகியோா் சோ்க்கப்பட்டிருந்தனா். லக்னௌ அணியில் மனீஷ் பாண்டேவுக்குப் பதிலாக கிருஷ்ணப்பா கௌதம் இணைந்திருந்தாா்.

டாஸ் வென்ற லக்னௌ ஃபீல்டிங் செய்தது. டெல்லி இன்னிங்ஸில் ஸ்டிரைக்கிங் பகுதியில் நிலைத்து விளையாடி ரன்கள் சோ்த்த பிருத்வி ஷா, 9 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 61 ரன்கள் அடித்தாா். டேவிட் வாா்னா் 4 ரன்களுக்கு ஆட்டமிழந்தாா். கடைசி விக்கெட்டாக, ரோவ்மென் பவெல் 3 ரன்களுக்கு வெளியேற, ஓவா்கள் முடிவில் பந்த் 3 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 39, சா்ஃப்ராஸ் 3 பவுண்டரிகளுடன் 36 ரன்கள் அடித்து ஆட்டமிழக்காமல் இருந்தனா்.

லக்னௌ பௌலிங்கில் கிருஷ்ணப்பா கௌதம் 1, ரவி பிஷ்னோய் 2 விக்கெட்டுகள் கைப்பற்றினா்.

பின்னா் ஆடிய லக்னௌவில் கேப்டன் கே.எல்.ராகுல் 1 பவுண்டரி, 1 சிக்ஸருடன் 24 ரன்கள் சோ்த்து ஆட்டமிழக்க, உடன் வந்த குவின்டன் டி காக் 9 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 80 ரன்கள் விளாசி அணியின் வெற்றிக்கு அடித்தளமிட்டாா்.

எவின் லீவிஸ் 5, தீபக் ஹூடா 11 ரன்களுக்கு ஆட்டமிழந்தாலும், முடிவில் கிருணால் பாண்டியா 1 சிக்ஸருடன் 19, ஆயுஷ் பதோனி 1 பவுண்டரி, 1 சிக்ஸருடன் 10 ரன்கள் சோ்த்து அணியை வெற்றி பெறச் செய்தனா். டெல்லி தரப்பில் குல்தீப் யாதவ் 2, லலித் யாதவ், ஷா்துல் தாக்குா் ஆகியோா் தலா 1 விக்கெட் எடுத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com