நெஞ்சு வலி ஏற்பட்டபோது...: கலவர நிமிடங்களைப் பகிர்ந்து கொண்ட ரிக்கி பாண்டிங்

மருத்துவமனையிலிருந்து நலமுடன் திரும்பிய ஆஸி. முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங், வர்ணனையாளர் பணியை மீண்டும் தொடர்ந்துள்ளார்.
நெஞ்சு வலி ஏற்பட்டபோது...: கலவர நிமிடங்களைப் பகிர்ந்து கொண்ட ரிக்கி பாண்டிங்
Published on
Updated on
2 min read

மருத்துவமனையிலிருந்து நலமுடன் திரும்பிய ஆஸி. முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங், வர்ணனையாளர் பணியை மீண்டும் தொடர்ந்துள்ளார்.

ஆஸ்திரேலியா - மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் ஆட்டம் பெர்த் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. பெர்த் டெஸ்டை ஒளிபரப்பும் சேனல் செவன் தொலைக்காட்சிக்காக வர்ணனையாளராகப் பணியாற்றுகிறார் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங். 

நேற்றைய ஆட்டத்தில் உணவு இடைவேளையின்போது ரிக்கி பாண்டிங்குக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதால் உடனடியாக பெர்த் மைதானத்திலிருந்து மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். செவன் நெட்வொர்க்குக்காக 40 நிமிடம் வர்ணனை செய்த பாண்டிங், ஆஸி. முன்னாள் பயிற்சியாளர் ஜஸ்டின் லேங்கரின் உதவியுடன் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில் 24 மணி நேரத்தில் வர்ணனையாளர் பணிக்கு மீண்டும் திரும்பியுள்ளார் பாண்டிங். சேனல் செவன் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் தனக்கு நேர்ந்தது பற்றி பாண்டிங் கூறியதாவது:

நான் நேற்று பலரை பயமுறுத்தி விட்டேன். எனக்கும் அச்சமூட்டிய தருணம் தான் அது. வர்ணனை அறையில் இருந்தபோது நெஞ்சில் வலி ஏற்பட்டது. சில உடற்பயிற்சிகளைச் செய்து அதிலிருந்து விடுபட நினைத்தேன். வர்ணனை செய்துகொண்டிருக்கும்போது கவனம் திசை திரும்ப விரும்பவில்லை. ஆனால் பிறகு தலைசுற்ற ஆரம்பித்தது. அப்போது என்னுடன் வர்ணனை செய்துகொண்டிருந்த ஜஸ்டின் லேங்கரிடம் இதுபற்றி கூறினேன். சேனல் செவன் தொலைக்காட்சியின் உயர் அதிகாரி கிறிஸ் ஜோன்ஸ் இதைக் கேள்விப்பட்டார். உடனே இருவரும் என்னை அங்கிருந்து மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் ஏற்பாடுகளை மேற்கொண்டார்கள். 10, 15 நிமிடங்களில் நான் மருத்துவனையில் இருந்தேன். எனக்கு அற்புதமான சிகிச்சை கிடைத்தது. இன்று காலையில் நல்லவிதமாக உணர்ந்தேன். இது புதிய காலை.

என் வயதுடையவர்கள் தங்களுடைய உடல்நலன் பற்றி மற்றவர்களிடம் விவாதிப்பதில்லை. இது எனக்கு ஒரு பாடமாக இருந்தது. கடந்த ஒரு வருட காலத்தில் நமக்கு நெருக்கமாக இருந்தவர்கள் உடல்நலக் குறைவால் மறைந்ததைப் பார்த்தோம் என்றார். 

சமீபகாலமாக ஆஸ்திரேலிய முன்னாள் வீரர்கலான ஷேன் வார்ன், ராட் மார்ஷ், டீன் ஜோஸ் போன்றோர் உடல்நலக் குறைவால் மறைந்தார்கள். டேரன் லெஹ்மன், ரையன் காம்பெல் போன்ற முன்னாள் வீரர்களுக்கு மாரடைப்பு ஏற்பட்டது. இதனால் உடல்நலத்தில் அனைவரும் அக்கறை செலுத்த வேண்டும், மற்றவர்களிடம் மனம் விட்டுப் பேசவேண்டும் என ரிக்கி பாண்டிங் தனது கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

ஆஸ்திரேலிய அணிக்காக 168 டெஸ்டுகள், 375 ஒருநாள், 17 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார் ரிக்கி பாண்டிங். ஆஸ்திரேலிய அணி தொடர்ச்சியாக மூன்று 50 ஓவர் உலகக் கோப்பைகளை வென்றபோது அந்த அணியில் இடம்பெற்றிருந்தார். 2003, 2007 உலகக் கோப்பைகளில் ஆஸி. அணியின் கேப்டனாகச் செயல்பட்டார். 77 டெஸ்டுகளில் கேப்டனாக இருந்து 48 வெற்றிகளைப் பெற்றார். 2012-ல் ஓய்வு பெற்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com