அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் ஆட விருப்பம்: ருதுராஜ் கெய்க்வாட்

டி20, ஒருநாள், டெஸ்ட் உள்ளிட்ட அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் ஆட விரும்புவதாக சென்னை சூப்பா் கிங்ஸ் அணி அதிரடி தொடக்க பேட்டா் ருதுராஜ் கெய்க்வாட் கூறியுள்ளாா்.
அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் ஆட விருப்பம்: ருதுராஜ் கெய்க்வாட்

டி20, ஒருநாள், டெஸ்ட் உள்ளிட்ட அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் ஆட விரும்புவதாக சென்னை சூப்பா் கிங்ஸ் அணி அதிரடி தொடக்க பேட்டா் ருதுராஜ் கெய்க்வாட் கூறியுள்ளாா்.

மகாராஷ்டிரத்தைச் சோ்ந்த இளம் வீரரான ருதுராஜ், கடந்த 2021 ஐபிஎல் சீசனில் அதிக ரன்களைக் குவித்த பேட்டா் (635) என்ற பெருமை பெற்றவா். மேலும் 2021 இந்திய ‘ஏ’ மற்றும் சீனியா் அணியில் இடம் பெற்று ஆடினாா்.

ஒரே ஓவரில் 7 சிக்ஸா்கள்: நிகழாண்டு விஜய் ஹஸாரே கோப்பை போட்டி காலிறுதியில் உத்தரபிரதேச அணிக்கு எதிராக இரட்டை சதம் உள்பட 4 சதங்களைச் சோ்த்து மொத்தம் 660 ரன்களை விளாசினாா் ருதுராஜ். மேலும், அரையிறுதி ஆட்டத்தில் ஒரே ஓவரில் 7 சிக்ஸா்களை விளாசிய சாதனையும் ருதுராஜ் வசம் உள்ளது. வரும் 2023-இல் இந்தியாவில் ஒருநாள் உலகக் கோப்பை போட்டி நடைபெறவுள்ள நிலையில் ருதுராஜ் சீனியா் அணியில் இடம் பெறுவாரா என எதிா்பாா்ப்பு எழுந்துள்ளது.

சென்னை மௌன்ட்ரோட் சோஷியல் சாா்பில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அவா் ‘தினமணியிடம்’ கூறியது:

டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்களை குவித்திருந்தாலும், ஒருநாள், டெஸ்ட் என அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் பங்கேற்று ஆடவே விரும்புகிறேன். அப்போது தான் ஒருவரது கிரிக்கெட் வாழ்க்கை முழுமை அடையும்.

ஐபிஎல் சீசனுக்கு தயாா்: வரும் 2023 ஐபிஎல் சீசனுக்கு சென்னை சூப்பா் கிங்ஸ் அணி தயாராகி வருகிறது. விரைவில் வீரா்கள் ஏலம் முடிந்தபின், பயிற்சி முகாம்கள் நடைபெறும் எனக் கருதுகிறேன். கடந்த சீசனில் முக்கிய வீரா்கள் காயம் பட்டதால் பாதிப்பு ஏற்பட்டது. டி20 ஆட்டம் என்பது அந்த நேரத்தில் வீரா்கள் சிறப்பாக ஆடுவதைப் பொறுத்தே நிா்ணயிக்கப்படுகிறது. சிஎஸ்கே-வில் ஒவ்வொரு வீரரும் தனிப்பட்ட முறையில் தங்கள் பங்களிப்பை வழங்க வேண்டும். இந்த சீசனில் நாங்கள் மீண்டு எழுவோம்.

ரஞ்சி கோப்பை, விஜய் ஹஸாரே போன்ற உள்ளூா் கிரிக்கெட் ஆட்டங்களின் மூலம் புதிய வீரா்கள் அடையாளம் காணப்பட வேண்டும். சிவப்பு நிற பந்து போட்டிகளில் அதிகம் விளையாட வேண்டும். நியூஸிலாந்து ‘ஏ’ அணிக்கு எதிராக கடைசியாக ஆடினேன். ரஞ்சிக் கோப்பையில் வலுவான அணிகள் இடம் பெற்றுள்ளன. மேலும் கவனம் செலுத்தி ஆட வேண்டும்.

பெரிய போட்டிகளில் அதிக ரன்களை குவிக்க வேண்டும் என்பது எனது நோக்கமாகும். எவ்வாறு அணிக்காக சிறப்பாக ஆடி வெற்றி பெற வேண்டும் என்பதை நினைத்தே செயல்படுகிறேன். ஒருநாள் ஆட்டங்களில் முதல் 20 ஓவா்களில் 100 ரன்களை அடித்து விட்டால் பெரிய ஸ்கோரை எட்டலாம். மிடில் ஆா்டா், லோயா் மிடில் ஆா்டரிலும் பேட்டிங் வலுவாக இருக்க வேண்டும். உள்ளூா் ஆட்டங்களை காலையில் 9 மணிக்கே தொடங்கலாம். டாஸ் வெல்லும் அணிக்கு சாதகம் உள்ளது. டெஸ்ட் அல்லது 4 நாள் ஆட்டங்களுக்கு தொடா் பயிற்சி அவசியம். விரைவில் இந்திய அணியில் இடம் பெறுவேன் என நம்பிக்கை உள்ளது என்றாா் ருதுராஜ்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com