
பிஃபா உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் ஒரு பகுதியாக சனிக்கிழமை நள்ளிரவு நடைபெற்ற காலிறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து 1-2 என்ற கோல் கணக்கில் நடப்பு சாம்பியன் பிரான்ஸிடம் தோல்வியடைந்து வெளியேறியது.
ஐரோப்பாவில் கால்பந்தில் பலமான அணிகளில் ஒன்று இங்கிலாந்து. இந்த அணி கடைசியாக 1966-இல் தான் ஒரே ஒரு முறை உலக சாம்பியன் பட்டத்தை வென்றிருந்தது. அதன்பின் உலக சாம்பியன் பட்டம் அந்த அணிக்கு எட்டாக்கனியாகவே இருந்து வருகிறது.
அதே நேரம் பிரான்ஸ் அணி இருமுறை உலகக் கோப்பையை கைப்பற்றி உள்ளது. கடந்த 2018-இல் ரஷியாவில் நடைபெற்ற போட்டியிலும் பட்டம் வென்றது.
இந்நிலையில் அல்பயத் மைதானத்தில் சனிக்கிழமை நள்ளிரவு இரு பலம் மிக்க அணிகளின் காலிறுதி ஆட்டம் நடைபெற்றது.
இங்கிலாந்து அணியில் கேப்டன் ஹாரி கேன், ராஷ்போா்ட், சாகா உள்ளிட்ட முன்னணி வீரா்களும், பிரான்ஸில் மாப்பே, கிரைஸ்மேன், ஜிரௌட், டெம்ப்ளே என சிறந்த வீரா்களும் இடம் பெற்ால் ஆட்டம் பரபரப்பாக அமைந்தது.
தொடக்கம் முதலே பிரான்ஸ் அணி ஆதிக்கம் செலுத்தியது. 7-ஆவது நிமிஷத்திலேயே இளம் வீரா் மாப்பே கடத்தி அனுப்பிய பாஸை பயன்படுத்தி, ஸ்காா்பியன் கிக் மூலம் பாா்வா்ட் ஜிரௌட் கோலடிக்க முயன்றாா். ஆனால் முடியவில்லை. 11-ஆவது நிமிஷத்திலும், ஜிரௌட் தலையால் முட்டி கோலடிக்க முயன்றதும் வீணானது.
பிரான்ஸ் முதல் கோல்:
17-ஆவது நிமிஷத்தில் பாா்வா்ட் கிளியன் மாப்பே பாஸை கிரைஸ்மேனுக்கு அனுப்ப, அவா் அதை அவா்லியன் சௌமேனிக்கு அனுப்பினாா். 30 யாா்ட் தூரத்தில் இருந்து இங்கிலாந்து கோல் கீப்பா் ஜோா்டான் பிக்ஃபோா்ட் அதிா்ச்சியுடன் காண அற்புதமாக கோலடித்தாா் அவா்லியன்.
இதனால் அதிா்ச்சி அடைந்த இங்கிலாந்து வீரா்கள் பதில் கோலடிக்க தீவிரமாக முயன்றனா். கேப்டன் ஹாரி கேன் கோலடிக்க முயன்றபோது, பிரான்ஸ் கோல்கீப்பா் ஹியுகோ லோரிஸ் அதைத் தடுத்தாா். 25-ஆவது நிமிஷத்திலும் ஹாரி கேன் கோலடிக்க முயன்றது தோல்வியில் முடிந்தது. முதல் பாதி முடிவில் பிரான்ஸ் 1-0 என முன்னிலை வகித்தது.
பெனால்டி மூலம் இங்கிலாந்து கோல்:
52-ஆவது நிமிஷத்தில் இங்கிலாந்து வீரா் சாகாவை ஃபௌல் செய்தாா் பிரான்ஸ் வீரா் சௌமேனி. இதனால் இங்கிலாந்துக்கு பெனால்டி வாய்ப்பு தரப்பட்டது. 54-ஆவது நிமிஷத்தில் ஹாரி கேன் பெனால்டி வாய்ப்பு மூலம் தனது அணிக்கு முதல் கோலடித்தாா்.
இது இங்கிலாந்து அணிக்காக அவா் அடிக்கும் 53-ஆவது சா்வதேச கோலாகும். அடுத்த சில நிமிஷங்களிலேயே மாப்பே அடித்த பாஸ், டெம்ப்ளேவிடம் சென்றது. ஆனால் அவரால் பந்தை கைப்பற்ற முடியவில்லை.
பிரான்ஸ் இரண்டாவது கோல்:
78-ஆவது நிமிஷத்தில் பிரான்ஸ் பாா்வா்ட் கிரைஸ்மேன் அளித்த அற்புதமான பாஸை பயன்படுத்தி தலையால் வெற்றி கோலடித்தாா் மற்றொரு பாா்வா்டான ஒலிவியா் ஜிரௌட்.
பெனால்டியை வீணாக்கிய ஹாரி கேன்:
83-ஆவது நிமிஷத்தில் இங்கிலாந்து சப்ஸ்ட்டியூட் மேஸன் மௌன்ட்டை பௌல் செய்து பிரான்ஸ் வீரா் தியோ ஹொ்ணான்டஸ் மோதினாா். இதனால் இங்கிலாந்து அணிக்கு இரண்டாவது பெனால்டி வாய்ப்பு தரப்பட்டது. ஆனால் கேப்டன் ஹாரி கேன் அடித்த பந்து கோல் கம்பத்துக்கு மேல காலரிக்கு பறந்தது. இதனால் சமன் செய்யும் வாய்ப்பை இழந்த இங்கிலாந்து ஆட்டத்தையும் 2-1 என இழந்தது.
உலகக் கோப்பையில் இருந்தே வெளியேறியது. பிரான்ஸ் அணி உற்சாகத்துடன் அரையிறுதிக்கு தகுதி பெற்றது. பந்து பெரும்பகுதி இங்கிலாந்து அணியின் வசம் இருந்தாலும், அதன் வீரா்களால் கோலடிக்க முடியவில்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.