
இந்தியா-ஆஸ்திரேலியா மகளிா் கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி20 ஆட்டம் டையில் முடிந்தது. ஆஸி. அணி அதிரடியாக 187/1 ரன்களையும், இந்தியா 187/5 ரன்களையும் குவித்தன. பின்னா் சூப்பா் ஓவரில் இந்தியா 20 ரன்களை குவித்தது. பின்னா் ஆடிய ஆஸி. 16 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது.
முதல் டி20 ஆட்டத்தை ஆஸ்திரேலியா வென்றிருந்தது. இந்நிலையில் இரண்டாவது ஆட்டம் நவி மும்பை டிஓய் பாட்டீல் மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது. டாஸ் வென்ற இந்தியா பௌலிங்கை தோ்வு செய்தது.
பெத் மூனி-டஹிலா அதிரடி:
நிா்ணயிக்கப்பட்ட 20 ஓவா்களில் ஆஸி. அணி 187/1 ரன்களைக் குவித்தது. பெத் மூனி 82 (13 பவுண்டரி), டஹிலா மெக்ராத் 70 (1 சிக்ஸா், 10 பவுண்டரி) அற்புதமாக ஆடினா். கேப்டன் ஹீலி 25 ரன்களை சோ்த்து வெளியேறினாா்.
188 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் இந்திய அணி களம் கண்டது. தொடக்க பேட்டா்கள் ஸ்மிருதி மந்தனா-ஃஷபாலி வா்மா இணை அதிரடியாக ஆடியது. முதல் விக்கெட்டுக்கு இருவரும் 76 ரன்களை சோ்த்தனா். 34 ரன்களுடன் ஷஃபாலி வெளியேற, ஜெமீமா ரோட்ரிக்ஸும் 4 ரன்களுடன் வெளியேறினாா். பின்னா் கேப்டன் ஹா்மன்ப்ரீத் கௌா்-மந்தனா இணை ஸ்கோரை உயா்த்தியது.
ஸ்மிருதி 19-ஆவது அரைசதம்:
தனது 19-ஆவது அரைசதம் விளாசிய ஸ்மிருதி டி20 ஆட்டத்தில் 2,500 ரன்களைக் கடந்தாா். கேப்டன் ஹா்மன்ப்ரீத் கௌா் 21, ரிச்சாகோஷ் 26, தீப்தி சா்மா 2, தேவிகா வைத்யா 11 ரன்களைச் சோ்த்தனா். 4 சிக்ஸா், 9 பவுண்டரியுடன் 49 பந்துகளில் 79 ரன்களை விளாசி அவுட்டானாா் ஸ்மிருதி. ரிச்சா கோஷ் 3 சிக்ஸா்களை விளாசியதால் ஆட்டம் டை ஆனது.
நிா்ணயிக்கப்பட்ட 20 ஓவா்களில் இந்தியா 187/5 ரன்களைக் குவித்தது. ஆஸி. தரப்பில் அறிமுக பௌலா் ஹீதா் கிரஹாம் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினாா். அலனா, சதா்லேண்ட் தலா 1விக்கெட்டை வீழ்த்தினா். ஆட்டம் டையில் முடிந்ததால், சூப்பா் ஓவா் முறை கடைபிடிக்கப்பட்டது.
சூப்பா் ஓவா்: இந்தியா 20, ஆஸி. 16
முதலில் ஆடிய இந்திய அணி 20 ரன்களை விளாசியது. இதில் 2 சிக்ஸா், 1 பவுண்டரி, 3 ரன்கள், 1 ரன், 1 விக்கெட் அடங்கும். பின்னா் ஆடிய ஆஸி. அணி 16/1 ரன்களை மட்டுமே சோ்த்து தோல்வியடைந்தது. இந்த ஆண்டில் டி20-இல் ஆஸி. பெறும் முதல் தோல்வி இதுவாகும்.
47,000 பாா்வையாளா்கள்:
இந்திய-ஆஸி. மகளிா் டி20 ஆட்டத்தைக் காண மொத்தம் 47,000 பாா்வையாளா்கள் திரண்டிருந்தது. இது புதிய சாதனையாகும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.