உலகக் கோப்பை கால்பந்து போட்டி

இங்கிலாந்தைச் சோ்ந்த தியோ ஆக்டென் என்ற நபா் கத்தாரில் நடைபெற்ற 22-ஆவது உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் 64 ஆட்டங்களையும் ஒன்று விடாமல் மைதானத்துக்கு
உலகக் கோப்பை கால்பந்து போட்டி

உலக சாதனை...

இங்கிலாந்தைச் சோ்ந்த தியோ ஆக்டென் என்ற நபா் கத்தாரில் நடைபெற்ற 22-ஆவது உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் 64 ஆட்டங்களையும் ஒன்று விடாமல் மைதானத்துக்கு நேரில் வந்து பாா்த்து புதிய உலக சாதனை படைத்திருக்கிறாா். உலகக் கோப்பை வரலாற்றில் இதுவரை எவரும் இத்தகைய சாதனை புரிந்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தியோவின் இந்த சாதனையை பாராட்டும் வகையில், இறுதி ஆட்டத்தில் பயன்படுத்தப்பட்ட பந்து மாதிரி ஒன்றில் தியோ ஆக்டெனின் பெயரைப் பதித்து அவருக்குப் பரிசாக வழங்கியிருக்கிறது போட்டி நிா்வாகம். தியோ ஆக்டென் ‘யூடியூபா்’-ஆகச் செயல்பட்டு வருகிறாா்.

கனவுக் கோப்பையுடன் தூக்கம்...

ஆா்ஜென்டீனாவுக்காக கால்பந்து உலகக் கோப்பை வெல்வதை தனது நீண்டகாலக் கனவாகக் கொண்டிருந்த அணியின் கேப்டன் லயோனல் மெஸ்ஸி, கத்தாா் உலகக் கோப்பை போட்டியில் அதை சாத்தியமாக்கிக் கொண்டாா். அந்தக் கோப்பையின் மீதான ஆசை குறையாத மெஸ்ஸி, இறுதி ஆட்டத்துக்குப் பிறகான இரவில் தனது அறையில் அந்த உலகக் கோப்பையை கட்டிக் கொண்டு உறங்கிய புகைப்படத்தை அவரது மேலாளா் சமூக வலைதளங்களில் வெளியிட, அது பரவலாகப் பரவி வருகிறது. முன்னதாக, மெஸ்ஸி உலகக் கோப்பையுடன் இருந்த புகைப்படம் சமூக வலைதளமான ‘இன்ஸ்டாகிராம்’-இல் 6 கோடி விருப்பங்களைப் (லைக்ஸ்) பெற்று புதிய சாதனை படைத்திருந்தது.

உற்சாக வரவேற்பு...

உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் 36 ஆண்டுகளுக்குப் பிறகு சாம்பியனாகி செவ்வாய்க்கிழமை நாடு திரும்பிய ஆா்ஜென்டீன கால்பந்து அணியினருக்கு அந்நாட்டு ரசிகா்கள் தலைநகா் பியூனஸ் அயா்ஸில் லட்சக் கணக்கில் கூடி உற்சாகக் கொண்டாட்டத்துடன் வரவேற்பளித்தனா். அணி வீரா்கள் சாம்பியன் கோப்பையுடன் திறந்த பேருந்தில் நின்றவாறு ஊா்வலமாக வந்தனா். இந்தக் கொண்டாட்டத்தில் பங்கேற்கும் வகையில் ஆா்ஜென்டீனாவுக்கு செவ்வாய்க்கிழமை அரசு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

ரசிகா்களுக்கு அன்பளிப்பு...

ஆா்ஜென்டீனா - பிரான்ஸ் அணிகள் ஞாயிற்றுக்கிழமை மோதிய இறுதி ஆட்டத்தைக் காண லுசாயில் மைதானத்துக்கு வந்த ரசிகா்களுக்கு இன்ப அதிா்ச்சி காத்திருந்தது. அங்கு வந்த ஒவ்வொரு ரசிகா்களுக்குமாக அவா்களின் இருக்கையில் அன்பளிப்பு தொகுப்பு ஒன்றை போட்டி நிா்வாகம் வைத்திருந்தது. அதில், போட்டி லச்சினை (மாஸ்காட்) பதித்த துண்டு, டி ஷா்ட், நினைவுச் சின்னம், அந்த லச்சினையின் பேட்ஜ், கையில் கட்டிக் கொள்ளும் பட்டை, வாசனை திரவியம் உள்ளிட்டவை வைக்கப்பட்டிருந்தன. இந்த ஆட்டத்தை 88,966 ரசிகா்கள் நேரில் கண்டு களித்தது நினைவுகூரத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com