இன்னொரு சாதனை: முட்டையைத் தோற்கடித்த மெஸ்ஸி!

வித்தியாசமான இந்த சவாலுக்கு ஆதரவளித்தார்கள் மக்கள்.
இன்னொரு சாதனை: முட்டையைத் தோற்கடித்த மெஸ்ஸி!

இன்ஸ்டகிராம் தளத்தில் அதிக லைக்ஸ் வாங்கிய பதிவை வெளியிட்டவர் என்கிற புதிய பெருமையை அடைந்துள்ளார் பிரபல கால்பந்து வீரர் மெஸ்ஸி.

கத்தாரில் நடைபெற்ற கால்பந்து உலகக் கோப்பையை ஆர்ஜென்டீனா அணி வென்றது. இறுதிச்சுற்றில் பிரான்ஸை 4-2 என பெனால்டியில் தோற்கடித்து சாம்பியன் ஆனது. கூடுதல் நேரத்துக்குப் பிறகு இரு அணிகளும் 3-3 என சமநிலையில் இருந்தன. 

1978, 1986-க்குப் பிறகு ஆர்ஜென்டீனா அணி வென்ற 3-வது உலகக் கோப்பை இது. மெஸ்ஸி முதல்முறையாக உலகக் கோப்பையை ஏந்திய தருணமும் இம்முறைதான் அமைந்தது. 1962-க்குப் பிறகு அடுத்தடுத்து உலகக் கோப்பைகளை வென்ற அணி என்கிற பெருமையைப் பெறுவதற்காக பிரான்ஸ் கடுமையாக முயன்றது. இறுதியில் பெனால்டியில் தோற்றுப் போனது. உலகக் கோப்பைப் போட்டியின் இறுதிச்சுற்றில் ஹாட்ரிக் கோல்களை அடித்த 2-வது வீரர் என்கிற பெருமையை அடைந்தார் பிரான்ஸின் எம்பாப்பே. பரிசளிப்பு விழாவில் தங்கக் காலணி விருது எம்பாப்பேவுக்கு வழங்கப்பட்டது. போட்டியின் சிறந்த வீரராக மெஸ்ஸி தேர்வானார்.

இந்த உலகக் கோப்பைப் போட்டி அவருடைய கனவை நிறைவேற்றியதுடன் பலவிதங்களிலும் மெஸ்ஸிக்குப் பெருமை சேர்த்துள்ளது. உலகக் கோப்பையில் சிறந்த வீரருக்கான விருது இருமுறை வென்றுள்ளார் மெஸ்ஸி. இதற்கு முன்பு 2014-ல் ஆர்ஜென்டீனா 2-வது இடம் பிடித்தபோது இதே விருது அவருக்கு வழங்கப்பட்டது. உலகக் கோப்பையில் குரூப் நிலை, காலிறுதிக்கு முந்தைய சுற்று, காலிறுதி, அரையிறுதி, இறுதிச்சுற்று என ஒரு போட்டியில் அனைத்து கட்டங்களிலும் கோலடித்த ஒரே வீரர் மெஸ்ஸி. ஒரு உலகக் கோப்பையில் 5+ கோல்கள் அடித்து, கோல் அடிப்பதற்கான வாய்ப்புகளை 20+ முறை உருவாக்கிய இரு வீரர்கள், 1986-ல் மரடோனா, 2022-ல் மெஸ்ஸி. ஒரு உலகக் கோப்பையில் 5 முறை சிறந்த வீரர் விருதை வென்ற ஒரே வீரர் மெஸ்ஸி. உலகக் கோப்பைப் போட்டிகளில் அதிக ஆட்டங்களில் விளையாடியவர் மெஸ்ஸி - 26 ஆட்டங்கள். 

இந்நிலையில் இன்ஸ்டகிராம் தளத்தில் அதிக லைக்ஸ் வாங்கிய பதிவை வெளியிட்டவர் என்கிற புதிய சாதனையையும் மெஸ்ஸி நிகழ்த்தியுள்ளார். உலகக் கோப்பையைக் கையில் ஏந்திய தருணத்தின் புகைப்படங்களை இன்ஸ்டகிராமில் வெளியிட்டார் மெஸ்ஸி. அந்தப் பதிவுக்கு இதுவரை 6.81 கோடி பேர் லைக்ஸ் செய்துள்ளார்கள். இந்த எண்ணிக்கை மேலும் உயர்ந்து கொண்டிருக்கிறது. இதையடுத்து இன்ஸ்டகிராம் தளத்தில் அதிக லைக்ஸ் வாங்கிய பதிவை வெளியிட்டவர் என்கிற பெருமையை மெஸ்ஸி அடைந்துள்ளார். 

இதற்கு முன்பு இன்ஸ்டகிராமில் அதிக லைக்ஸ் வாங்கியது யார் தெரியுமா? உண்மையில் எது தெரியுமா என்று தான் கேட்க வேண்டும். பிரபலங்களின் பதிவுகளுக்கு மட்டுமல்லாமல் இதர விஷயங்களுக்கும் அதிக லைக்ஸ் கிடைக்க வேண்டும் என்பதற்காக வேர்ல்ட் ரெக்கார்ட் எக் என்கிற இன்ஸ்டகிராம் கணக்கிலிருந்து ஒரு முட்டைப் படம் 2019 ஜனவரியில் பதிவிடப்பட்டது. அந்தக் கணக்கில் ஒரு முட்டைப் படத்தை விடவும் வேறு எந்தப் பதிவுகளும் கிடையாது. வித்தியாசமான இந்த சவாலுக்கு ஆதரவளித்தார்கள் மக்கள். இதனால் இதுவரை 5.76 கோடி லைக்ஸ் கிடைத்து அதிக லைக்ஸ் வாங்கிய பதிவில் முதலிடம் பிடித்தது. தற்போது அந்த முட்டையைப் பின்னுக்குத் தள்ளி அதிக லைக்ஸ் வாங்கியுள்ளார் மெஸ்ஸி. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com