இந்திய கிரிக்கெட் 2022: தோல்விகளும் புதிய படிப்பினைகளும்!

இந்திய அணி இத்தனை தொடர்களில் விளையாடி, இத்தனை அனுபவங்களைப் பெற்றதா...
இந்திய கிரிக்கெட் 2022: தோல்விகளும் புதிய படிப்பினைகளும்!

இந்திய கிரிக்கெட் ரசிகர்களும் வீரர்களும் 2022-ம் ஆண்டை மறக்க மாட்டார்கள். புதிய கேப்டன் ரோஹித் சர்மாவின் தலைமையில் விளையாடிய இந்திய அணியில் ஏராளமான மாற்றங்கள் நடைபெற்றன. ஆசியக் கோப்பை, உலகக் கோப்பை தோல்வி எனப் பெரிய போட்டிகளில் தோற்றாலும் பல தொடர்களில் வெற்றியையும் அடைந்தது. அடுத்ததாக, 2023-ல் இன்னும் புதிய வீரர்கள், புதிய முடிவுகளுடன் களமிறங்கப் போகிறது. 

இந்தக் கட்டுரையைப் படித்து முடிக்கும்போது 2022-ல் இந்திய அணி இத்தனை தொடர்களில் விளையாடி, இத்தனை அனுபவங்களைப் பெற்றதா என உங்களுக்கு ஆச்சர்யம் ஏற்படும். 

தோல்வியுடன் தொடங்கிய புத்தாண்டுதென்னாப்பிரிக்காவுக்குச் சுற்றுப்பயணம் செய்த இந்திய அணி டெஸ்ட் தொடரை 1-2 எனவும் ஒருநாள் தொடரை 0-3 எனவும் தோற்று நாடு திரும்பியது. டெஸ்ட் தொடரில் தொடர் நாயகனாக கீகன் பீட்டர்சனும் ஒருநாள் தொடரில் குயிண்டன் டி காக் தொடர் நாயகனாகத் தேர்வானார்கள். இந்திய ஒருநாள் அணியின் கேப்டனாக கே.எல். ராகுல் செயல்பட்டார். இந்திய ரசிகர்கள் மறக்க நினைக்கும் தொடர் இது. இந்த வருடத்தில் தென்னாப்பிரிக்க பேட்டர்கள் தொடர்ச்சியாக மோசமாக விளையாடுவதைப் பார்க்கும்போது இவர்களை ஏன் இந்திய அணியால் வீழ்த்த முடியவில்லை என்கிற கேள்வியே எழுகிறது. 

டெஸ்ட் கேப்டன் பதவியை உதறிய விராட் கோலி

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் தோற்ற பிறகு டெஸ்ட் கேப்டன் பதவியிலிருந்து விலகினார் விராட் கோலி.

டி20 கேப்டன் பதவியிலிருந்து கோலி விலகினார். அதன் விளைவாக ஒருநாள் கேப்டன் பதவியிலிருந்து அவரை நீக்கியது பிசிசிஐ. யாரும் எதிர்பாராதவிதமாக டெஸ்ட் கேப்டன் பதவியிலிருந்தும் விலகி அதிர்ச்சியளித்தார் கோலி. 

டெஸ்ட் கிரிக்கெட்டின் மகத்தான கேப்டனாகப் புகழப்படும் விராட் கோலி, வெளிநாடுகளில் அதிக வெற்றிகளைப் பெற்றதால் கூடுதல் மதிப்பைப் பெற்றார். சேனா நாடுகள் (SENA - South Africa, England, New Zealand and Australia) என்றழைக்கப்படும் தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் அதிக வெற்றிகளைப் பெற்ற ஒரே ஆசிய கேப்டன் - விராட் கோலி. ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் தொடரை வென்ற முதல் ஆசிய கேப்டன் - விராட் கோலி. 

சேனா நாடுகளில் 7 வெற்றிகளைப் பெற்றுள்ளார் விராட் கோலி. இதர இந்திய கேப்டன்களில் தோனியும் பட்டோடியும் தலா 3 வெற்றிகளைப் பெற்றுள்ளார்கள். சேனா நாடுகளில் விளையாடிய 24 டெஸ்டுகளில் 7 வெற்றிகளும் 14 தோல்விகளும் 3 டிராக்களும் கோலிக்குக் கிடைத்துள்ளன. (சேனா நாடுகளில் 23 டெஸ்டில் விளையாடிய தோனிக்கு 3 வெற்றிகள் மட்டுமே கிடைத்தன. 14 தோல்விகள், 6 டிராக்கள்.) சேனா நாடுகளில் கோலிக்கு அடுத்ததாக அதிக வெற்றிகளைப் பெற்ற ஆசிய கேப்டன்கள் - வாசிம் அக்ரம், மியாண்டட். இருவருக்கும் தலா 4 வெற்றிகள் கிடைத்துள்ளன. 

* சேனா நாடுகளில் விராட் கோலி பெற்ற வெற்றிகள் 

இங்கிலாந்து - 10 டெஸ்டுகள் - 3 வெற்றிகள் - 6 தோல்விகள் - 1 டிரா
ஆஸ்திரேலியா - 7 டெஸ்டுகள் - 2 வெற்றிகள் - 3 தோல்விகள் - 2 டிரா
தென்னாப்பிரிக்கா - 5 டெஸ்டுகள் - 2 வெற்றிகள் - 3 தோல்விகள் 
நியூசிலாந்து - 2 டெஸ்டுகள் - 0 வெற்றி - 2 தோல்விகள்

வெளிநாடுகளில் அதிக டெஸ்ட் வெற்றிகளைப் பெற்ற இந்திய கேப்டன் விராட் கோலி - 16 வெற்றிகள். (அடுத்த இடத்தில் கங்குலி - 11 வெற்றிகள்). 2018-19-ல் ஆஸ்திரேலியாவில் கோலி தலைமையில் 2-1 என வென்றது இந்தியா. மேற்கிந்தியத் தீவுகள் அணியை 2-0 என இருமுறை தோற்கடித்தது. 2017-ல் இலங்கையை 3-0 என வென்றது. கடந்த வருடம் இங்கிலாந்தில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் 2-1 என முன்னிலை வகித்தது.


மேற்கிந்தியத் தீவுகள் அணியை வெறுங்கையுடன் திருப்பி அனுப்பிய இந்தியா

மே.இ. தீவுகள் அணி இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள், 3 டி20 ஆட்டங்களில் விளையாயது. ஒருநாள் தொடர் ஆமதாபாத்திலும் டி20 தொடர் கொல்கத்தாவிலும் நடைபெற்றன. டி20 தொடரில் தமிழகத்தைச் சேர்ந்த ஷாருக் கானும் சாய் கிஷோரும் இந்திய அணிக்குத் தேர்வானார்கள். எனினும் விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை. 

இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரை மே.இ. தீவுகள் அணி வென்றது. இங்கிலாந்துக்கு எதிராக விளையாடிய அதே மே.இ. தீவுகள் அணி வீரர்கள், இந்தியாவில் நடைபெற்ற டி20 தொடருக்கும் தேர்வானார்கள். 

இந்திய அணி மிகச்சிறப்பாக விளையாடி 3-0 என ஒருநாள் தொடரையும் டி20 தொடரையும் வென்றது. ஒருநாள் தொடரில், பிரசித் கிருஷ்ணா தொடர் நாயகனாக டி20 தொடரில் தொடர் நாயகனாக சூர்யகுமார் யாதவும் தேர்வானார்கள். மேலும் ஐசிசி டி20 தரவரிசையில் இங்கிலாந்துடன் இணைந்து முதல் இடத்தைப் பகிர்ந்துகொண்டது இந்திய அணி.

இந்திய டெஸ்ட் அணிக்குப் புதிய கேப்டன்

இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு ரோஹித் சர்மா, கேப்டனாக நியமிக்கப்பட்டார். இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்த இலங்கை அணி, 2 டெஸ்டுகள், 3 டி20 ஆட்டங்களில் விளையாடியது. விராட் கோலியின் விலகலையடுத்து இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக ரோஹித் சர்மா நியமிக்கப்பட்டார். 

வெறுங்கையுடன் திரும்பிய இலங்கைஜனவரி மாதத்தில் தோல்வியுடன் புதிய வருடத்தைத் தொடங்கினாலும் பிப்ரவரி, மார்ச் மாதங்களில் இந்திய அணிக்கு ஒரு தோல்வியும் ஏற்படவில்லை.

இலங்கைக்கு எதிரான டி20 தொடரை 3-0 என்றும் டெஸ்ட் தொடரை 2-0 என்றும் முழுமையாக வென்றது ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி. இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்டில் தனது 100-வது டெஸ்டை விளையாடினார் கோலி. டி20 தொடரில் ஷ்ரேயஸ் ஐயரும் டெஸ்ட் தொடரில் ரிஷப் பந்தும் தொடர் நாயகன் பட்டங்களை வென்றார்கள். இதற்கடுத்ததாக ஐபிஎல் போட்டிக்கு இந்திய வீரர்கள் தயாரானார்கள்.

சிஎஸ்கேவின் புதிய கேப்டனும் மீண்டும் பொறுப்பை ஏற்றுக் கொண்ட தோனியும்

2008 முதல் தோனியின் நிழலில் அவருடைய பேரும் புகழில் செழித்து வளர்ந்து வந்த சிஎஸ்கேவுக்கு 2022-ல் புதிய கேப்டன் கிடைத்தார். கேப்டன் பதவியிலிருந்து விலகி அந்தப் பொறுப்பை ஜடேஜாவிடம் வழங்கினார் தோனி. 

தோனி தலைமையில் சிஎஸ்கே அணி ஐபிஎல் கோப்பையை 4 முறையும் சாம்பியன்ஸ் லீக் கோப்பையை 2 முறையும் வென்றுள்ளது. ஐபிஎல் 2022 போட்டியில் கேப்டனாக அல்லாமல் வீரராக மட்டுமே விளையாட தோனி முடிவெடுத்தார். 

2012 முதல் சிஎஸ்கே அணியில் விளையாடும் ஜடேஜா, அந்த அணியின் 3-வது கேப்டன் என்கிற பெருமையைப் பெற்றார். 

விராட் கோலியை எப்படி இந்திய அணி கேப்டன் பதவிக்கு தோனி தயார் செய்தாரோ அதேபோல தான் ஜடேஜாவையும் இதற்கு ஏற்றாற்போல உருவாக்கினார். ஜடேஜாவுக்கு தோனியின் வழிகாட்டுதல் எப்போதும் இருக்கும் என்றார் அணியின் தலைமைச் செயல் அதிகாரி காசி விஸ்வநாதன்.

எனினும் புதிய கேப்டனுடன் குறுகிய காலமே பயணித்தது சிஎஸ்கே. முதல் 8 ஆட்டங்களில் 2 வெற்றிகளை மட்டும் சிஎஸ்கே பெற்றதால் திடீரென கேப்டன் பதவியிலிருந்து ஜடேஜா விலகினார். இந்த நெருக்கடியில் சிஎஸ்கே அணியின் கேப்டனாக தோனி மீண்டும் தேர்வானார். எனினும் 2022 ஐபிஎல் போட்டியில் சிஎஸ்கேவால் பிளேஆஃப் சுற்றுக்குத் தகுதி பெற முடியாமல் போனது. 2023 ஐபிஎல் போட்டியிலும் தோனியே கேப்டனாக நீடிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐபிஎல் கோப்பையை வென்ற புதிய அணி


ஐபிஎல் போட்டி மார்ச் 26-ல் தொடங்கி மே 29 அன்று நிறைவுபெற்றது. 

70 லீக் ஆட்டங்கள் மஹாராஷ்டிர மாநிலத்தின் மும்பை, புணேவில் நடைபெற்றன. 10 அணிகளும் தலா 14 ஆட்டங்களில் விளையாடின. 10 அணிகளும் இரு குழுக்களாகப் பிரிக்கப்பட்டன. ஒவ்வொரு அணியும் 5 அணிகளுடன் இருமுறையும் மீதமுள்ள 4 அணிகளுடன் ஒருமுறையும் விளையாடின. குரூப் ஏ-வில் மும்பை, கொல்கத்தா, ராஜஸ்தான், தில்லி, லக்னெள ஆகிய அணிகளும் குரூப் பி-வில் சென்னை, சன்ரைசர்ஸ், ஆர்சிபி, பஞ்சாப், குஜராத் ஆகிய அணிகளும் இடம்பெற்றன. சிஎஸ்கே அணி - மும்பை, சன்ரைசர்ஸ், ஆர்சிபி, பஞ்சாப், குஜராத் ஆகிய அணிகளுடன் இருமுறையும் மீதமுள்ள 4 அணிகளுடன் ஒருமுறையும் லீக் சுற்றில் விளையாடியது. 

2022 ஐபிஎல் போட்டியில் இரு அணிகள் புதிதாகச் சேர்க்கப்பட்டன. லக்னௌ, ஆமதாபாத் நகரங்களை அடிப்படையாகக் கொண்டு இரு புதிய அணிகள் இணைந்தன. 

ஐபிஎல் 2022 போட்டியை பாண்டியா தலைமையிலான குஜராத் வென்றது. இறுதிச்சுற்றில் ராஜஸ்தான் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. ஆட்ட நாயகனாக பாண்டியா தேர்வானார். ஜாஸ் பட்லர், தொடர் நாயகனாகத் தேர்வானார். சிஎஸ்கே அணி, புள்ளிகள் பட்டியலில் 9-வது இடத்தையும் மும்பை அணி 10-வது இடத்தையும் பிடித்தன. 

இந்தியாவுடன் சரிக்குச் சமமாகப் போட்டியிட்ட தென்னாப்பிரிக்க அணி

ஐபிஎல் போட்டி முடிவடைந்த பிறகு இந்தியாவுக்கு வந்த தென்னாப்பிரிக்க அணி 5 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்றது. ரிஷப் பந்த் தலைமையிலான இந்திய அணி டி20 தொடரை 2-2 என சமன் செய்தது. தொடர் நாயகனாக புவனேஸ்வர் குமார் தேர்வானார். 

முதல் இரு ஆட்டங்களிலும் வென்று தென்னாப்பிரிக்கா முன்னிலை வகித்தது. இந்திய அணி 3,4-வது டி2- ஆட்டங்களை வென்று தொடரைச் சமன் செய்தது. 5-வது டி20 ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது. 

இங்கிலாந்துச் சுற்றுப்பயணத்தில் முதலில் அயர்லாந்துடன் இரு டி20 ஆட்டங்களில் விளையாடி வெற்றி பெற்றது இந்திய அணி. 2-வது டி20யில் இந்திய நடுவரிசை வீரர் தீபக் ஹூடா சதமடித்து அசத்தினார். 

புதிய இங்கிலாந்து அணியிடம் டெஸ்டில் தோற்ற இந்தியாஇந்திய அணி இங்கிலாந்துக்குச் சுற்றுப்பயணம் செய்து ஒரு டெஸ்ட், 3 ஒருநாள், 3 டி20 ஆட்டங்களில் விளையாடியது. 

2021 செப்டம்பர் மாதத் தொடக்கத்தில் இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 4-வது டெஸ்ட் நடைபெற்றது. இந்திய அணி 157 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று டெஸ்ட் தொடரில் 2-1 என முன்னிலை பெற்றது. திட்டமிட்டபடி 5-வது டெஸ்ட் நடைபெறவில்லை.

5-வது டெஸ்ட், மான்செஸ்டரில் நடைபெறுவதாக இருந்தது. இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, பந்துவீச்சுப் பயிற்சியாளர் பரத் அருண், ஃபீல்டிங் பயிற்சியாளர் ஸ்ரீதர் ஆகியோர் கரோனாவால் பாதிக்கப்பட்டுத் தனிமைப்படுத்தப்பட்டார்கள். அடுத்தக்கட்டமாக இந்திய அணியின் ஜூனியர் பிசியோதெரபிஸ்ட் யோகேஷ் பார்மருக்கு கரோனா தொற்று உறுதியானது. இதனால் மைதானத்தில் களமிறங்க இந்திய வீரர்கள் தயக்கம் காட்டினார்கள். இதையடுத்து மான்செஸ்டரில் நடைபெறுவதாக இருந்த 5-வது டெஸ்ட் ரத்தானது. இந்த டெஸ்ட் தான் பிர்மிங்கமில் இந்த வருடம் ஜூலை 1 அன்று தொடங்கியது, புதிய கேப்டன், புதிய அணியுடன். 

4-வது டெஸ்டில் ஜோ ரூட் கேப்டனாக இருந்தார். 5-வது டெஸ்டில் அவர் வீரர் மட்டும் தான். இங்கிலாந்தின் புதிய கேப்டன், கடந்தமுறை விளையாடாத பென் ஸ்டோக்ஸ். புதிய பயிற்சியாளர் - மெக்கல்லம். 4-வது டெஸ்டில் விளையாடிய 4 பேர் மட்டுமே 5-வது டெஸ்டில் இடம்பெற்றார்கள். ஜோ ரூட், போப், பேர்ஸ்டோ, ஆண்டர்சன். 4-வது டெஸ்டில் விளையாடிய 7 பேர் 5-வது டெஸ்டில் இல்லை. பர்ன்ஸ், ஹமீது, மலான், மொயீன் அலி, கிறிஸ் வோக்ஸ், கிரைக் ஓவர்டன், ஆலி ராபின்சன் ஆகிய 7 வீரர்களும் 5-வது டெஸ்டில் விளையாடவில்லை. அந்தளவுக்கு இங்கிலாந்து அணியில் மாற்றம் ஏற்பட்டிருந்தது. 4-வது டெஸ்டில் இடம்பெறாத ஸாக் கிராவ்லி, அலெக்ஸ் லீஸ், பென் ஸ்டோக்ஸ், சாம் பில்லிங்ஸ், மேத்யூ பாட்ஸ், ஸ்டூவர்ட் பிராட், ஜேக் லீச் ஆகியோர் 5-வது டெஸ்டில் இடம்பெற்றார்கள். 

ரோஹித் சர்மா கரோனாவால் பாதிக்கப்பட்டதால் பும்ரா இந்திய அணியின் கேப்டனாகச் செயல்பட்டார். 

இந்திய ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த இந்த 5-வது டெஸ்டில் இங்கிலாந்து அணி அபாரமாக விளையாடி 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்று தொடரை சமன் செய்தது. இங்கிலாந்து அணி வெற்றி பெற்று தொடரை சமன் செய்ய 378 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஜோ ரூட், பேர்ஸ்டோ அதிரடியாக விளையாடி இங்கிலாந்து அணிக்கு மறக்க முடியாத வெற்றியை வழங்கினார்கள். 76.4 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 378 ரன்கள் எடுத்து மகத்தான வெற்றியை அடைந்தது இங்கிலாந்து அணி. ஜோ ரூட் 142, பேர்ஸ்டோ 114 ரன்களுடன் கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்கள். இதனால் டெஸ்ட் தொடர் 2-2 என சமன் ஆனது. 2007-க்குப் பிறகு இங்கிலாந்தில் டெஸ்ட் தொடரை வெல்லும் வாய்ப்பு இந்திய அணிக்குக் கிடைத்தது. ஆனால் ஜோ ரூட்டும் பேர்ஸ்டோவும் மிகச் சிறப்பாக விளையாடி இங்கிலாந்து அணி 5-வது டெஸ்டை வெல்ல உதவினார்கள். 

டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியாவுக்கு எதிராக 4-வது இன்னிங்ஸில் அதிக ரன்களை எடுத்து வெற்றி பெற்ற அணி என்கிற புதிய சாதனையை இங்கிலாந்து அணி படைத்தது. பேசாமல் கடந்த வருடமே இந்த டெஸ்டை விளையாடியிருக்கலாம் என்கிற ஆதங்கம் இந்திய ரசிகர்களுக்கு ஏற்பட்டது. 

அதன்பிறகு நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரை 2-1 எனவும் ஒருநாள் தொடரை 2-1 எனவும் வென்று அசத்தியது இந்திய அணி. டி20 தொடரில் புவனேஸ்வர் குமாரும் ஒருநாள் தொடரில் பாண்டியாவும் தொடர் நாயகன் பட்டங்களை வென்றார்கள். கடைசி ஒருநாள் ஆட்டத்தில் ரிஷப் பந்த் 113 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 125 ரன்கள் எடுத்தார். அதேபோல கடைசி டி20 ஆட்டத்தில் சூர்யகுமார் யாதவ் 55 பந்துகளில் 6 சிக்ஸர்கள், 14 பவுண்டரிகளுடன் 117 ரன்கள் எடுத்து அசத்தினார். 

2015 உலகக் கோப்பைப் போட்டிக்குப் பிறகு வெள்ளைப் பந்து கிரிக்கெட் தொடர்களில் இயன் மார்கன் தலைமையிலான இங்கிலாந்து அணி பெரிய சக்தியாக உருவெடுத்துள்ளது. இந்தக் காலகட்டத்தில் தான் இந்திய அணி, இங்கிலாந்துக்கு எதிராக விளையாடிய வெள்ளைப் பந்துத் தொடர்களில் ஒரு தொடர் தவிர அனைத்திலும் வெற்றியடைந்துள்ளது. 

இந்தியா - இங்கிலாந்து வெள்ளைப் பந்துத் தொடர்கள் (2015 முதல்):

2017 ஒருநாள் தொடர் - இந்தியா வெற்றி 
2017 டி20 தொடர் - இந்தியா வெற்றி 
2018 ஒருநாள் தொடர் - இங்கிலாந்து வெற்றி
2018 டி20 தொடர் - இந்தியா வெற்றி 
2021 ஒருநாள் தொடர் - இந்தியா வெற்றி 
2021 டி20 தொடர் -இந்தியா வெற்றி 
2022 ஒருநாள் தொடர் - இந்தியா வெற்றி 
2022 டி20 தொடர் - இந்தியா வெற்றி 

இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடிய இங்கிலாந்து ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் ஒருநாள் ஆட்டத்துக்குப் பிறகு சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இந்தியாவுக்கு எதிராக நடைபெற்ற ஒருநாள் தொடரில் 0, 21, 27 என ரன்கள் எடுத்தார். பந்துவீச்சில் ஒரு விக்கெட்டும் எடுக்கவில்லை. 


மே.இ. தீவுகள், ஜிம்பாப்வேயில் ஆதிக்கம் செலுத்திய இந்தியாஇங்கிலாந்துச் சுற்றுப்பயணத்துக்கு அடுத்ததாக இந்திய அணி மேற்கிந்தியத் தீவுகளுக்குச் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள், 5 டி20 ஆட்டங்களில் விளையாடியது. ஒருநாள் தொடரில் ஷிகர் தவன் தலைமையிலான 16 பேர் கொண்ட இந்திய அணி பங்கேற்றது. ரோஹித் சர்மா, கோலி, பாண்டியா, பும்ரா, பந்த், ஷமி ஆகியோர் ஓய்வு காரணமாக ஒருநாள் தொடரில் இடம்பெறவில்லை. காயம் காரணமாக கே.எல். ராகுலும் அணியில் இல்லை. 

டி20 தொடரை இந்திய அணி 4-1 என வென்றது. வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங் தொடர் நாயகனாகத் தேர்வானார். 7 விக்கெட்டுகள் எடுத்தார். எகானமி - 6.26.

ஒருநாள் தொடரை 3-0 என முழுமையாக வென்றது இந்திய அணி. தொடர் நாயகன் விருதை ஷுப்மன் கில் வென்றார். மேற்கிந்தியத் தீவுகள் சுற்றுப்பயணத்தில் விளையாடிய 8 ஆட்டங்களில் 7-ல் வென்றது இந்திய அணி.

அடுத்ததாக ஜிம்பாப்வே சுற்றுப்பயணம். கே.எல். ராகுல் தலைமையிலான இந்திய அணி இத்தொடரில் பங்கேற்றது. ஜிம்பாப்வேக்கு எதிரான ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கில் முழுமையாகக் கைப்பற்றியது இந்தியா. 3-வது ஒருநாள் ஆட்டத்தில் 22 வயது ஷுப்மன் கில், 130 ரன்கள் எடுத்தார். 97 பந்துகளில் 1 சிக்ஸர், 15 பவுண்டரிகள் அடித்தார். இது அவருடைய முதல் ஒருநாள் சதம். ஜிம்பாப்வே நாட்டில் அதிக ஒருநாள் ரன்களை எடுத்த இந்திய வீரர் என்கிற பெருமையைப் பெற்றார். 

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான ஒருநாள் தொடரில் அதிக ரன்கள் (205) எடுத்த ஷுப்மன் கில், ஜிம்பாப்வே ஒருநாள் தொடரிலும் அதிக ரன்கள் (245) எடுத்து அசத்தினார். இரு தொடர்களிலும் தொடர் நாயகன் விருதுகளை வென்றார். 

ஆசியக் கோப்பை தோல்வியும் கோலியின் சதமும் ஆசிய கிரிக்கெட் கவுன்சில், ஆசியக் கோப்பைப் போட்டியை 1984 முதல் நடத்தி வருகிறது. 50 ஓவர், டி20 என இரு வகைகளிலும் இப்போட்டி நடைபெறும். இந்திய அணி ஆசியக் கோப்பை ஏழு முறை வென்றுள்ளது. 2022 ஆசியக் கோப்பைப் போட்டி இலங்கையில் நடைபெறுவதாக இருந்தது. இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியைத் தொடா்ந்து 2022 ஆசியக் கோப்பை டி20 போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றது. 

யாரும் எதிர்பாராத வகையில் 2022 ஆசியக் கோப்பைப் போட்டியை இலங்கை அணி வென்றது. இறுதிச்சுற்றில் பாகிஸ்தானை 23 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இதன்மூலம் 6-வது முறையாக ஆசியக் கோப்பையை வென்றது. ஆட்ட நாயகன் விருது ராஜபக்சவுக்கும் தொடர் நாயகன் விருது ஹசரங்காவுக்கும் வழங்கப்பட்டன. 

இந்தப் போட்டியில் இந்தியாவின் விராட் கோலி 1 சதம், 2 அரை சதங்களுடன் 5 ஆட்டங்களில் 276 ரன்கள் எடுத்தார். ஸ்டிரைக் ரேட் - 147.59. அதிக விக்கெட்டுகள் எடுத்த வீரர்களில் இந்தியாவின் புவனேஸ்வர் குமார் 11 விக்கெட்டுகளுடன் முதலிடம் பிடித்தார். 

இந்தப் போட்டியில் முதல் ஆட்டத்தில் பாகிஸ்தானை வீழ்த்திய இந்திய அணி, சூப்பர் 4 சுற்றில் பாகிஸ்தானுடன் தோற்றது. லீக் சுற்று ஆட்டங்களின் முடிவில் இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், இலங்கை ஆகிய 4 அணிகளும் குரூப் 4 சுற்றுக்குத் தகுதியடைந்தன. முதலில் பாகிஸ்தானிடம் அடுத்ததாக இலங்கையிடம் என சூப்பர் 4 சுற்றில் விளையாடிய முதல் இரு ஆட்டங்களிலும் இந்திய அணி தோற்றது. ஷார்ஜாவில் நடைபெற்ற பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் இடையிலான பரபரப்பான டி20 ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி 1 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. இதனால் இந்திய அணியால் இறுதிச்சுற்றுக்குத் தகுதி பெற முடியாமல் போனது. 

இந்தப் போட்டியில் ஒரே ஆறுதல், விராட் கோலி சதம் எடுத்தது தான். இரண்டரை  ஆண்டுகளுக்குப் பிறகு சர்வதேச கிரிக்கெட்டில் மீண்டும் சதம் எடுத்தார் விராட் கோலி, ஆப்கானிஸ்தானுக்கு எதிராக. இது அவருடைய 71-வது சர்வதேச சதம். சர்வதேச கிரிக்கெட்டில் இன்னிங்ஸின் அடிப்படையில் வேகமாக 71 சதங்கள் எடுத்தவர் கோலி. அதேபோல வேகமாக 24,000 சர்வதேச ரன்கள் எடுத்தவரும் கோலி தான். 

கடந்த 2014 முதல் 2019 வரை ஒரு வருடம் தவிர அனைத்து வருடங்களிலும் குறைந்தது 7 சதங்கள் எடுத்தவர் கோலி. ஆனால் 2020, 2021 ஆகிய இரு ஆண்டுகளிலும் அவர் ஒரு சதம் கூட எடுக்கவில்லை. 2022-ல் தனது முதல் டி20 சதத்தை எடுத்தார். 

இந்தியாவில் டி20 தொடரில் தோற்ற ஆஸ்திரேலியாஆசியக் கோப்பைப் போட்டியில் இறுதிச்சுற்றுக்குத் தகுதி பெறாத இந்திய அணி அடுத்ததாக ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு எதிராக சொந்த மண்ணில் தலா 3 டி20 ஆட்டங்களில் விளையாடியது. அதன்பிறகு டி20 உலகக் கோப்பைப் போட்டியில் பங்கேற்றது.  

ஆஸ்திரேலிய அணி இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்து மூன்று டி20 ஆட்டங்களில் விளையாடியது. ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி பங்கேற்றது. ஆரோன் ஃபிஞ்ச் தலைமையிலான அணியில் மிட்செல் ஸ்டார்க், மிட்செல் மார்ஷ், மார்கஸ் ஸ்டாய்னிஸ் ஆகிய முக்கிய வீரர்களுக்குச் சிறு காயங்கள் காரணமாக ஓய்வளிக்கப்பட்டது. டேவிட் வார்னருக்கும் ஓய்வளிக்கப்பட்ட நிலையில் கேம்ரூன் க்ரீன், அறிமுக வீரர் டிம் டேவிட் ஆகியோர் அணியில் இடம்பெற்றார்கள். 

டி20 தொடரை 2-1 என இந்திய அணி வென்றது. தொடர் நாயகனாக அக்‌ஷர் படேல் தேர்வானார்

இந்தியாவில் ஒருநாள், டி20 தொடரில் தோற்ற தென்னாப்பிரிக்கா

தென்னாப்பிரிக்க அணி இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்து 3 டி20, 3 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடியது. 

டி20 உலகக் கோப்பைப் போட்டிக்கு அறிவிக்கப்பட்ட தென்னாப்பிரிக்க இந்தியாவுக்கு எதிரான டி20 தொடரிலும் விளையாடியது. 

டி20 தொடரை 2-1 என வென்றது இந்திய அணி. சூர்யகுமார் யாதவ் தொடர் நாயகனாகத் தேர்வானார். சொந்த மண்ணில் முதல்முறையாக தென்னாப்பிரிக்காவை டி20 தொடரில் வீழ்த்தியது இந்திய அணி. டி20 தொடரில் 0,0,3 என மோசமாக விளையாடி விமர்சனங்களுக்கு ஆளானார் தென்னாப்பிரிக்க கேப்டன் பவுமா. 

டி20 தொடர் போல ஒருநாள் தொடரையும் 2-1 எனக் கைப்பற்றியது இந்தியா. தொடர் நாயகனாக சிராஜ் தேர்வானார். 3-வது ஒருநாள் ஆட்டத்தில் 27.1 ஓவர்களில் 99 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது தென்னாப்பிரிக்கா. இதன்மூலம் ஒருநாள் கிரிக்கெட்டில் இந்தியாவுக்கு எதிராகக் குறைந்த ரன்களை எடுத்தது தென்னாப்பிரிக்கா. எளிதான இலக்கை 19.1 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 105 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது இந்திய அணி.

ஆஸ்திரேலியாவில் டி20 உலகக் கோப்பை2022 அக்டோபர் 16 முதல் நவம்பர் 13 வரை 2022 டி20 உலகக் கோப்பைப் போட்டி ஆஸ்திரேலியாவில் நடைபெற்றது. மொத்தமாக 45 ஆட்டங்கள் அடிலெய்ட், பிரிஸ்பேன், கீலாங், ஹோபர்ட், மெல்போர்ன், பெர்த், சிட்னி நகரங்களில் நடைபெற்றன. இறுதிச்சுற்று ஆட்டம் மெல்போர்ன் மைதானத்தில் நடைபெற்றது.

டி20 உலகக் கோப்பைப் போட்டியின் பிரதான சுற்றுக்கு ஆஸ்திரேலியா, இந்தியா, நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான், வங்கதேசம், இங்கிலாந்து, பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா ஆகிய 8 நாடுகளும் நேரடியாகத் தகுதி பெற்றன. 

டி20 உலகக் கோப்பைப் போட்டியில் விளையாடிய ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியில் அஸ்வின், தினேஷ் கார்த்திக் ஆகிய இரு தமிழக வீரர்கள் இடம்பெற்றார்கள். 

இந்திய அணி:

ரோஹித் சர்மா (கேப்டன்), கே.எல். ராகுல் (துணை கேப்டன்), விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா, ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), பாண்டியா, ஆர். அஸ்வின், சஹால், அக்‌ஷர் படேல், பும்ரா, புவனேஸ்வர் குமார், ஹர்ஷல் படேல், அர்ஷ்தீப் சிங்.

மாற்று வீரர்கள்: முகமது ஷமி, ஷ்ரேயஸ் ஐயர், ரவி பிஸ்னோய், தீபக் சஹார். 

டி20 உலகக் கோப்பை அணியில் இடம்பெற்றதன் மூலம் ரோஹித் சர்மா ஒரு சாதனையை நிகழ்த்தினார். 2007, 2009, 2010, 2012, 2014, 2016, 2021, 2022 என அனைத்து டி20 உலகக் கோப்பைப் போட்டிகளுக்கான இந்திய அணிகளிலும் ரோஹித் சர்மா இடம்பெற்றார். இந்தப் பெருமை வேறு எந்த இந்திய வீரருக்கும் கிடையாது. இந்தமுறை முதல்முறையாக இந்திய அணியின் கேப்டனாக டி20 உலகக் கோப்பைப் போட்டியில் விளையாடினார். 2007 டி20 உலகக் கோப்பைப் போட்டியில் தான் சர்வதேச டி20  கிரிக்கெட்டுக்கு ரோஹித் சர்மா அறிமுகமானார். விராட் கோலி 2010 முதல் தான் இந்திய அணிக்காக டி20 கிரிக்கெட்டில் விளையாடி வருகிறார். ஆனால் 2012-ல் தான் முதல்முறையாக டி20 உலகக் கோப்பையில் விளையாடினார்.

டி20 உலகக் கோப்பையில் அரையிறுதியில் தோற்ற இந்திய அணிடி20 உலகக் கோப்பையில் அரையிறுதியில் இங்கிலாந்திடம் தோற்று போட்டியிலிருந்து வெளியேறியது இந்திய அணி.

உலகக் கோப்பையை வெல்ல முடியாமல் போனாலும் அக்டோபர் 23 அன்று மெல்போர்னில் நடைபெற்ற இந்தியா - பாகிஸ்தான் ஆட்டத்தை யாரால் மறக்க முடியும்? பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது இந்திய அணி. முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 159 ரன்கள் எடுத்தது. இந்திய அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் வித்தியாசத்தில் 160 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. கோலி 82 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். 19-வது ஓவரின் கடைசி இரு பந்துகளில் கோலி அடித்த இரு சிக்ஸர்களை இந்திய ரசிகர்களால் எப்போதும் மறக்க முடியாது. அதுவும் 19.5 பந்தில் நேராக கோலி அடித்த சிக்ஸருக்கு வரலாற்றில் இடமுண்டு.

லீக் சுற்றில் இந்திய அணி தென்னாப்பிரிக்காவிடம் தோற்றது. பிறகு அரையிறுதியில் இங்கிலாந்திடம் தோற்றது.

அடிலெய்டில் நடைபெற்ற அரையிறுதியில் இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதின. இந்திய அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 168 ரன்கள் எடுத்தது. பாண்டியா 63, கோலி 50 ரன்கள் எடுத்தார்கள். பாண்டியாவின் அபாரமான ஆட்டத்தால் இந்திய அணி கடைசி 5 ஓவர்களில் 68 ரன்கள் எடுத்தது. ஜோர்டன் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இங்கிலாந்து அணி 16 ஓவர்களிலேயே விக்கெட் இழப்பின்றி 170 ரன்கள் எடுத்து 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி இறுதிச்சுற்றுக்கு முன்னேறியது. அலெக்ஸ் ஹேல்ஸ் 86, பட்லர் 80 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்கள்.

2011 உலகக் கோப்பைப் போட்டியை வென்ற இந்திய அணி அதன்பிறகு பங்கேற்ற உலகக் கோப்பைப் போட்டிகளை வெல்ல முடியாமல் முக்கியமான கட்டங்களில் தொடர்ந்து தோல்வியடைந்து வருகிறது. 

2011 உலகக் கோப்பை வெற்றிக்குப் பிறகு இந்திய அணி எப்படி விளையாடியுள்ளது?

2012 டி20 உலகக் கோப்பை: அரையிறுதிக்குத் தகுதி பெறவில்லை
2014 டி20 உலகக் கோப்பை: இறுதிச்சுற்றில் தோல்வி
2015 ஒருநாள் உலகக் கோப்பை: அரையிறுதியில் தோல்வி
2016 டி20 உலகக் கோப்பை: அரையிறுதியில் தோல்வி
2019 ஒருநாள் உலகக் கோப்பை: அரையிறுதியில் தோல்வி
2021 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: இறுதிச்சுற்றில் தோல்வி
2021 டி20 உலகக் கோப்பை: அரையிறுதிக்குத் தகுதி பெறவில்லை
2022 டி20 உலகக் கோப்பை: அரையிறுதியில் தோல்வி

நியூசிலாந்தில் கிடைத்த வெற்றியும் தோல்வியும்டி20 உலகக் கோப்பைப் போட்டிக்குப் பிறகு இந்திய அணி நியூசிலாந்துக்குச் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள், 3 டி20 ஆட்டங்களில் விளையாடியது.

டி20 தொடருக்கு பாண்டியா தலைமையிலான இந்திய அணியும் ஒருநாள் தொடருக்கு ஷிகர் தவன் தலைமையிலான இந்திய அணியும் பங்கேற்றன. ரோஹித் சர்மா, கோலி, ராகுல் ஆகியோருக்கு இத்தொடரிலிருந்து ஓய்வு அளிக்கப்பட்டது. இரு அணிகளுக்கும் ரிஷப் பந்த் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டார். டி20 உலகக் கோப்பைப் போட்டியில் அணியில் இடம்பெற்ற 8 வீரர்கள் டி20 தொடரில் இடம்பெற்றார்கள். அஸ்வின், தினேஷ் கார்த்திக் ஆகிய இருவரும் இந்திய அணியில் இடம்பெறவில்லை. பலரும் எதிர்பார்த்த பிருத்வி ஷாவுக்கும் வாய்ப்பளிக்கப்படவில்லை. அதேபோல டி20 உலகக் கோப்பையில் மாற்று வீரராக இடம்பெற்ற பிஸ்னோய் இத்தொடரில் சேர்க்கப்படவில்லை.

பாண்டியா தலைமையிலான இந்திய அணி, டி20 தொடரை 1-0 என வென்றது. தொடர் நாயகனாக சூர்யகுமார் யாதவ் தேர்வானார். முதல் ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது. 2-வது டி20யை இந்தியா வென்றது. 3-வது டி20 ஆட்டம் டை ஆன காரணத்தால் டி20 தொடரை 1-0 என இந்திய அணி வென்றது. இந்த டி20 தொடரில் சஞ்சு சாம்சன், ஷுப்மன் கில், குல்தீப் யாதவ், உம்ரான் மாலிக் போன்ற வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை. முக்கியமாக சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு வழங்கப்படாததற்குச் சமூகவலைத்தளங்களில் பலரும் கண்டனம் தெரிவித்தார்கள்.

ஒருநாள் தொடரில் முதல் ஒருநாள் ஆட்டத்தில் நியூசிலாந்து வென்றது. 2-வது ஒருநாள் ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது. 3-வது ஒருநாள் ஆட்டம் முழுமையாக நடைபெறாத காரணத்தால் ஒருநாள் தொடரை 1-0 என வென்றது நியூசிலாந்து அணி. 3-வது ஒருநாள் ஆட்டத்தில் இந்திய அணி 47.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 219 ரன்கள் எடுத்தது. 64 பந்துகளை எதிர்கொண்டு 1 சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 51 ரன்கள் எடுத்து இந்திய அணியின் தூணாக இருந்தார் வாஷிங்டன் சுந்தர். 18 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு நியூசிலாந்து அணி 104 ரன்கள் எடுத்திருந்தபோது மழை பெய்ய ஆரம்பித்தது. டிஎல்எஸ் முறைப்படி முடிவை அறிவிக்க வேண்டுமென்றால் 20 ஓவர்கள் வீசி முடிக்கப்பட்டிருக்க வேண்டும். வெற்றி பெறும் நிலையில் இருந்த நியூசிலாந்து அணியால் 2 ஓவர்களுக்குத் தொடர்ந்து விளையாட முடியாத காரணத்தால் வெற்றியை ருசிக்க முடியாமல் போனது. எனினும் நியூசிலாந்து அணி ஒருநாள் தொடரை 1-0 என வென்றது. தொடர் நாயகனாக டாம் லதம் தேர்வானார். 

வங்கதேசத்தில் முழுமையான வெற்றி. ஆனால்...வங்கதேசத்துக்குச் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள், 2 டெஸ்டுகளில் இந்திய அணி விளையாடியது. 

முதல் இரு ஒருநாள் ஆட்டங்களையும் வென்று ஒருநாள் தொடரை 2-1 எனக் கைப்பற்றியது வங்கதேசம். ஒருநாள் தொடரில் தோற்றாலும் 3-வது ஒருநாள் ஆட்டம் இந்திய அணிக்கும் முக்கியமாக இஷான் கிஷனுக்கும் மறக்க முடியாததாக அமைந்தது. 24 வயது இஷான் கிஷன், 131 பந்துகளில் 10 சிக்ஸர்கள், 24 பவுண்டரிகளுடன் 210 ரன்கள் எடுத்து சாதனை படைத்தார். 126 பந்துகளில் இரட்டைச் சதமெடுத்த இஷான் கிஷன், ஒருநாள் கிரிக்கெட்டில் குறைந்த பந்துகளில் இரட்டைச் சதமெடுத்த வீரர் என்கிற உலக சாதனையை நிகழ்த்தினார். மேலும் தனது முதல் ஒருநாள் சதத்தையே இரட்டைச் சதமாக மாற்றிய முதல் வீரரும் இஷான் கிஷன் தான். இதுதவிர இரட்டைச் சதமெடுத்த இளம் வீரர் என்கிற மற்றொரு சாதனையையும் நிகழ்த்தினார். இதே ஆட்டத்தில் விராட் கோலியும் சதமடித்து ரசிகர்களைக் குஷிப்படுத்தினார். 

2-வது ஒருநாள் ஆட்டத்தில் கேட்ச் பிடிக்க முயன்றபோது ரோஹித் சர்மாவின் விரலில் காயம் ஏற்பட்டது. இக்காயம் காரணமாக ரோஹித் சர்மா டெஸ்ட் தொடரில் இடம்பெறவில்லை. பும்ரா, ஷமி, ஜடேஜா ஆகியோரும் காயம் காரணமாக டெஸ்ட் தொடரில் இடம்பெறவில்லை. இதனால் கே.எல். ராகுல் இந்திய அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார். உனாட்கட், அபிமன்யு ஈஸ்வரன், செளரப் குமார் ஆகியோர் இந்திய அணியில் சேர்க்கப்பட்டார்கள்.

முதல் டெஸ்டை 188 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்திய அணி, 2-வது டெஸ்டை மிகவும் பரபரப்பான முறையில் அஸ்வின் - ஷ்ரேயஸ் ஐயரின் உதவியுடன் வென்று டெஸ்ட் தொடரை 2-0 என முழுமையாகக் கைப்பற்றியது. கடைசி டெஸ்டில் 145 ரன்கள் இலக்கை எதிர்கொள்ள இந்திய அணி மிகவும் சிரமப்பட்டபோது அஸ்வினும் ஸ்ரேயஸ் ஐயரும் திறமையாகச் சூழலைக் கையாண்டார்கள். 7 விக்கெட் இழப்புக்கு 74 ரன்கள் என்கிற நிலையில் ஸ்ரேயஸ் ஐயர் 29, அஸ்வின் 42 ரன்களுடன் கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்து இந்திய அணியைக் கரை சேர்த்தார்கள். ஆட்ட நாயகன் விருதை வென்றார் அஸ்வின். தொடர் நாயகன் விருது புஜாராவுக்கு வழங்கப்பட்டது. 

2-வது டெஸ்டில் இந்திய அணியின் முதல் இன்னிங்ஸில் வங்கதேச ஃபீல்டர்கள் நான்கு கேட்சுகளைத் தவறவிட்டார்கள். 2-வது இன்னிங்ஸில் முக்கியமான கட்டத்தில் அஸ்வின் அளித்த கேட்சை மொமினுல் ஹக் தவறவிட்டார். இந்த வாய்ப்புகளை வங்கதேச அணி சரியாகப் பயன்படுத்தியிருந்தால் முதல்முறையாக இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் வெற்றியை அடைந்திருக்கும். 

2022-ல் ஒரு சதமும் அடிக்காத ரோஹித் சர்மா!இந்திய கேப்டன் ரோஹித் சர்மா 2022-ல் ஒரு சதமும் அடிக்காமல் ஏமாற்றியுள்ளார்.

2013-க்குப் பிறகு முதல்முறையாக அவருக்கு இந்நிலை ஏற்பட்டுள்ளது. வங்கதேசத்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் காயம் காரணமாக ரோஹித் சர்மா பங்கேற்கவில்லை. இதையடுத்து 2022-ம் ஆண்டை ஒரு சதமும் அடிக்காமல் முடித்துள்ளார். 

காயம் மற்றும் ஓய்வு காரணமாக இந்த வருடம் பல ஆட்டங்களில் ரோஹித் சர்மா பங்கேற்கவில்லை. இங்கிலாந்தில் நடைபெற்ற டெஸ்டிலும் வங்கதேச டெஸ்ட் தொடரிலும் பும்ராவும் கே.எல். ராகுலும் கேப்டன்களாகச் செயல்பட்டார்கள். 

35 வயது ரோஹித் சர்மா இந்த வருடம் 2 டெஸ்டுகளில் மட்டும் விளையாடி 90 ரன்கள் எடுத்தார். மார்ச் மாதம் இலங்கைக்கு எதிராக இரு டெஸ்டுகளில் விளையாடினார். அவ்வளவுதான். 

2022-ல் 8 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடி 3 அரை சதங்களுடன் 249 ரன்கள் எடுத்தார். 

டி20 உலகக் கோப்பை காரணமாக இந்த வருடம் 29 டி20 ஆட்டங்களில் விளையாடி 3 அரை சதங்களுடன் 656 ரன்கள் எடுத்தார். 

2 வருடங்களுக்கும் மேலாக சதமடிக்காமல் இருந்த விராட் கோலி இந்த வருடம் இரு சதங்கள் எடுத்துவிட்டார். எனினும் ரோஹித் சர்மாவுக்கு அந்நிலை ஏற்படவில்லை. ஒருநாள் கிரிக்கெட்டில் கிட்டத்தட்ட மூன்று வருடங்களாக சதமடிக்காமல் உள்ளார். கடைசியாக ஜனவரி 2020-ல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சதமடித்தார். டி20 கிரிக்கெட்டில் கடைசியாக நவம்பர் 2018-ல் சதமடித்தார். டெஸ்டில் கடந்த வருடம் சென்னையில் இங்கிலாந்துக்கு எதிராகச் சதமடித்தார். 

2022-ல் இந்திய அணி

டெஸ்டுகள் - 7, வெற்றிகள் - 4, தோல்விகள் - 3
ஒருநாள் - 24, வெற்றிகள் - 14 தோல்விகள் - 8, முடிவில்லை - 2      
டி20 - 40, வெற்றிகள் - 28, தோல்விகள் - 10, சமன் - 1, முடிவில்லை - 1

2022-ல் அதிக ரன்கள் எடுத்த இந்திய வீரர்!

2022-ல் சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்த வீரர் என்கிற பெருமையைப் பெற்றுள்ளார் ஷ்ரேயஸ் ஐயர்.

28 வயது ஷ்ரேயஸ் ஐயர், இந்திய அணிக்காக 7 டெஸ்டுகள், 39 ஒருநாள், 49 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார். வங்கதேசத்துகு எதிரான டெஸ்ட் தொடரில் 86(192), 87(105) & 29*(46) என மிகச்சிறப்பாக விளையாடி இந்திய அணி 2-0 என முழுமையாக வெல்ல உதவினார்.

2022-ல் சர்வதேச கிரிக்கெட்டில் 1609 ரன்கள் எடுத்து அதிக ரன்கள் எடுத்த இந்திய வீரர் என்கிற பெருமையைப் பெற்றுள்ளார் ஷ்ரேயஸ் ஐயர். டெஸ்டுகளில் 422 ரன்களும் ஒருநாள் கிரிக்கெட்டில் 724 ரன்களும் டி20யில் 463 ரன்களும் எடுத்துள்ளார். 

2011 முதல் ஒவ்வொரு வருடமும் சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்த இந்திய வீரர்கள்:

2011: கோலி (1644)
2012: கோலி (2186)
2013: கோலி (1913)
2014: கோலி (2286)
2015: ரஹானே (1352)
2016: கோலி (2595)
2017: கோலி (2818)
2018: கோலி (2735)
2019: கோலி (2455)
2020: ராகுல் (847)
2021: ரோஹித் சர்மா (1420)
2022: ஷ்ரேயஸ் ஐயர் (1609)


2022-ல் இந்திய வீரர்கள் அடித்த சதங்கள்

20220-ல் ரிஷப் பந்த் 3 சதங்கள் அடித்து அதிக சதங்கள் அடித்த வீரர்களின் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார்.

2022-ல் சர்வதேச கிரிக்கெட்டில் அதிக சதங்கள் அடித்த இந்தியர்கள் 

ரிஷப் பந்த் - 3 
கோலி - 2 
ஷுப்மன் கில் - 2 
ஜடேஜா - 2 
சூர்யகுமார் யாதவ் - 2

2022-ல் விராட் கோலி எப்படி விளையாடினார்?2020, 2021 வருடங்களுடன் ஒப்பிடும்போது 2022-ம் வருடம் விராட் கோலிக்கு ஓரளவு நல்லவிதமாகவே அமைந்தது. டி20, ஒருநாள் ஆட்டங்களில் சதமடித்தார். 

டெஸ்டுகள் - 6, ரன்கள் - 265, 1 அரை சதம்
ஒருநாள் - 11, ரன்கள் - 302, 1 சதம், 1 அரை சதம்
டி20 - 20, ரன்கள் - 781, 1 சதம், 8 அரை சதங்கள்

கடந்த அக்டோபர் 23 அன்று மெல்போர்னில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை ஆட்டத்தில் இந்தியாவும் பாகிஸ்தானும் மோதின. பரபரப்பாக நடைபெற்ற ஆட்டத்தில் 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது இந்திய அணி. முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 159 ரன்கள் எடுத்தது. இந்திய அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் வித்தியாசத்தில் 160 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. கோலி 82 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். 19-வது ஓவரின் கடைசி இரு பந்துகளில் கோலி அடித்த இரு சிக்ஸர்களை இந்திய ரசிகர்களால் எப்போதும் மறக்க முடியாது. அதுவும் 19.5 பந்தில் நேராக கோலி அடித்த சிக்ஸருக்கு வரலாற்றில் இடமுண்டு.

2022 டி20 உலகக் கோப்பைப் போட்டியில் விராட் கோலி 296 ரன்கள் எடுத்து, அதிக ரன்கள் எடுத்த வீரர் என்கிற பெருமையைப் பெற்றார். 

2014 டி20 உலகக் கோப்பைப் போட்டியில் விராட் கோலி 6 இன்னிங்ஸில் 319 ரன்கள் எடுத்தார். 2009-ல் இலங்கையின் தில்ஷன் எடுத்த 317 ரன்களைக் கடந்து டி20 உலகக் கோப்பையில் அதிகபட்ச ரன்களை எடுத்த வீரர் என்கிற சாதனையைப் படைத்தார் கோலி. இன்றுவரை, 2022 டி20 உலகக் கோப்பைப் போட்டியில் எந்த வீரராலும் கோலியின் சாதனையைத் தாண்ட முடியவில்லை. கோலி தனது சாதனையைத் தக்கவைத்துக்கொண்டுள்ளார்.  

டி20 உலகக் கோப்பை: அதிக ரன்கள்:

319 ரன்கள் - விராட் கோலி (2014)
317 ரன்கள்: தில்ஷன் (2009)
303 ரன்கள்: பாபர் ஆஸம் (2021)
302 ரன்கள்: ஜெயவர்தனே (2010)

மேலும், சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 4000 ரன்களைக் கடந்த முதல் வீரர் என்கிற சாதனையை உலகக் கோப்பைப் போட்டியில் நிகழ்த்தினார் கோலி. 115 ஆட்டங்களில் 4008 ரன்கள் எடுத்துள்ளார். 1 சதம், 37 அரை சதங்கள். கோலியை விடவும் அதிக டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ள (148) ரோஹித் சர்மா, 3853 ரன்களுடன் 2-ம் இடத்தில் உள்ளார். 

சர்வதேச டி20: அதிக ரன்கள்:

கோலி - 4008 ரன்கள்
ரோஹித் சர்மா - 3853 ரன்கள்
மார்டின் கப்தில் - 3531 ரன்கள்
பாபர் ஆஸம் - 3355 ரன்கள்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.