

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடருக்கான வழிகாட்டு நெறிமுறைகளை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.
பெருந்தொற்று காரணமாக இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு நடத்தப்படும் ரஞ்சி கோப்பை இந்த முறை ஐபிஎல்-க்கு முன், ஐபிஎல்-க்கு பின் என இரண்டு கட்டங்களாக நடத்தப்படும் என பிசிசிஐ ஏற்கெனவே அறிவித்தது. இந்த நிலையில், இதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் இன்று (செவ்வாய்க்கிழமை) வெளியிடப்பட்டுள்ளன.
இதன்படி, ஒவ்வொரு அணியும் குறைந்தபட்சம் 20 வீரர்கள் உள்பட மொத்தம் 30 உறுப்பினர்களை வைத்துக்கொள்ளலாம். ஆட்டத்தின் கட்டணத்துக்கு 20 வீரர்களும் தகுதியுடையவர்கள். கரோனா காரணமாக ஒவ்வொரு அணிக்கும் தலா இரண்டு தயார் நிலை வீரர்கள் அனுமதிக்கப்படுவர்.
இதையும் படிக்க | தவான், ஷ்ரேயஸ் தொற்றிலிருந்து குணம்: ருதுராஜ்?
அனைத்து அணிகளும் பிப்ரவரி 10-க்குள் போட்டி நடைபெறும் இடத்தில் கூடவேண்டும். இதன்பிறகு, வீரர்கள் 5 நாள்கள் கட்டாயம் தனிமைப்படுத்தப்படுவார்கள். 2-வது மற்றும் 5-வது நாளில் ஆர்டி பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படும். இதன்பிறகு, பிப்ரவரி 15 மற்றும் 16 ஆகிய தேதிகள் பயிற்சிகள் மேற்கொள்ளலாம்.
காலிறுதிக்கு முந்தைய நிலை வரையிலான ஆட்டங்கள் மார்ச் 11-இல் தொடங்கி முதல் கட்டமாக நடைபெறும். காலிறுதி, அரையிறுதி மற்றும் இறுதி ஆட்டங்கள் இரண்டாம் கட்ட ஆட்டங்களாக மே 30-இல் தொடங்கும்.
கரோனா சூழல்களை எதிர்கொள்ள ஒவ்வொரு அணியும் மருத்துவர்களை வைத்துக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.
ரஞ்சி கோப்பை ஆட்டங்கள் ராஜ்காட், கட்டாக், ஆமதாபாத், சென்னை, திருவனந்தபுரம், தில்லி, ஹரியாணா, குவாஹட்டி மற்றும் கொல்கத்தா ஆகிய 9 இடங்களில் நடைபெறுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.