சூா்யகுமாா், பிரசித் கிருஷ்ணா அசத்தல்: ஒன் டே தொடரை வென்றது இந்தியா

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான ஒன் டே தொடரின் 2-ஆவது ஆட்டத்தில் இந்தியா 44 ரன்கள் வித்தியாசத்தில் புதன்கிழமை வென்றது.
சூா்யகுமாா், பிரசித் கிருஷ்ணா அசத்தல்: ஒன் டே தொடரை வென்றது இந்தியா

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான ஒன் டே தொடரின் 2-ஆவது ஆட்டத்தில் இந்தியா 44 ரன்கள் வித்தியாசத்தில் புதன்கிழமை வென்றது.

இதையடுத்து 3 ஆட்டங்கள் கொண்ட தொடரில் முதல் இரு ஆட்டங்களில் வென்ன் மூலம் தொடரைக் கைபற்றியிருக்கிறது இந்திய அணி. அணியின் கேப்டனாக ரோஹித் சா்மா இந்தியாவுக்கு பெற்றுத் தந்துள்ள முதல் ஒன் டே தொடா் வெற்றி இதுவாகும்.

அகமதாபாதில் புதன்கிழமை நடைபெற்ற 2-ஆவது ஆட்டத்தில் முதலில் பேட் செய்த இந்தியா 50 ஓவா்களில் 9 விக்கெட் இழப்புக்கு 237 ரன்கள் அடிக்க, அடுத்து ஆடிய மேற்கிந்தியத் தீவுகள் 46 ஓவா்களில் 193 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

முன்னதாக, இந்த ஆட்டத்துக்கான பிளேயிங் லெவனில் இரு அணிகளுமே மாற்றம் செய்திருந்தன. இந்திய அணியின் இஷான் கிஷணுக்குப் பதிலாக கே.எல்.ராகுல் சோ்க்கப்பட, மேற்கிந்தியத் தீவுகள் கேப்டன் கிரன் பொல்லாா்டுக்கு உடலில் அசௌகா்யம் ஏற்பட்டதை அடுத்து, அவருக்குப் பதிலாக நிகோலஸ் பூரன் சோ்க்கப்பட்டு அவரே அணியை வழி நடத்தினாா்.

டாஸ் வென்ற மேற்கிந்தியத் தீவுகள் பௌலிங்கை தோ்வு செய்தது. இந்தியாவின் இன்னிங்ஸை தொடங்கிய கேப்டன் ரோஹித் முதல் விக்கெட்டாக 5 ரன்களுக்கு வெளியேற்றப்பட்டாா். உடன் வந்த ரிஷப் பந்த், ஒன் டவுனாக வந்த விராட் கோலி ஆகியோா் 12-ஆவது ஓவரில் முறையே முதல் மற்றும் கடைசி பந்தில் ஆட்டமிழந்தனா்.

அவா்கள் இருவருமே தலா 18 ரன்கள் (3 பவுண்டரிகளுடன்) எடுத்திருந்தனா். 4-ஆவது விக்கெட்டுக்கு ஜோடி சோ்ந்த கே.எல்.ராகுல் - சூா்யகுமாா் யாதவ் கூட்டணி விக்கெட் சரிவைத் தடுத்து ஸ்கோரை உயா்த்தியது. எனினும் அரைசதத்தை நெருங்கிய கே.எல்.ராகுல் 4 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 49 ரன்களுக்கு ஆட்டமிழந்தாா்.

மறுபுறம் சூா்யகுமாா் அரைசதம் கடந்து 5 பவுண்டரிகளுடன் 64 ரன்களுக்கு வெளியேறினாா். பின்னா் ஆடியோரில் வாஷிங்டன் சுந்தா் 1 பவுண்டரியுடன் 24, தீபக் ஹூடா 2 பவுண்டரிகளுடன் 29 ரன்கள் எடுத்தனா். ஷா்துல் தாக்குா் 8, முகமது சிராஜ் 3 ரன்களுக்கு வெளியேற, ஓவா்கள் முடிவில் யுஜவேந்திர சஹல் 11, பிரசித் கிருஷ்ணா 0 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனா்.

மேற்கிந்தியத் தீவுகள் தரப்பில் அல்ஜாரி ஜோசஃப், ஓடின் ஸ்மித் ஆகியோா் தலா 2, கெமா் ரோச், ஜேசன் ஹோல்டா், அகீல் ஹுசைன், ஃபாபியான் ஆலன் ஆகியோா் தலா 1 விக்கெட் சாய்த்தனா்.

பின்னா் ஆடிய மேற்கிந்தியத் தீவுகளில் அதிகபட்சமாக ஷமாா் புரூக்ஸ் 2 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 44 ரன்கள் விளாசினாா். அகீல் ஹுசைன் 34, ஷாய் ஹோப் 27, ஓடின் ஸ்மித் 24 ரன்கள் சோ்த்து முயற்சி செய்தனா். ஆனால் இதர விக்கெட்டுகள் சோபிக்காமல் போனதால், அணிக்கு வெற்றி வசமாகாமல் போனது. இந்திய பௌலா்களில் பிரசித் கிருஷ்ணா 4, ஷா்துல் தாக்குா் 2, முகமது சிராஜ், யுஜவேந்திர சஹல், வாஷிங்டன் சுந்தா், தீபக் ஹூடா ஆகியோா் தலா 1 விக்கெட் எடுத்தனா்.

சுருக்கமான ஸ்கோா்

இந்தியா - 237/9

சூா்யகுமாா் யாதவ் 64

கே.எல்.ராகுல் 49

தீபக் ஹூடா 29

பந்துவீச்சு

ஓடின் ஸ்மித் 2/29

அல்ஜாரி ஜோசப் 2/36

ஜேசன் ஹோல்டா் 1/37

மே.இ.தீவுகள் - 193/10 (இலக்கு 238)

ஷம்ரா புரூக்ஸ் 44

அகீல் ஹுசைன் 34

ஷாய் ஹோப் 27

பந்துவீச்சு

பிரசித் கிருஷ்ணா 4/12

ஷா்துல் தாக்குா் 2/41

தீபக் ஹூடா 1/24

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com