சிட்னி டெஸ்டில் மீண்டும் சதமடித்த கவாஜா: இங்கிலாந்து அணிக்கு 388 ரன்கள் இலக்கு

ஆஸி. அணியில் மீண்டும் இடம்பிடித்த கவாஜா சிட்னி டெஸ்டில் 2-வது சதமடித்துள்ளார்.
சிட்னி டெஸ்டில் மீண்டும் சதமடித்த கவாஜா: இங்கிலாந்து அணிக்கு 388 ரன்கள் இலக்கு
Published on
Updated on
1 min read

ஆஸி. அணியில் மீண்டும் இடம்பிடித்த கவாஜா சிட்னி டெஸ்டில் 2-வது சதமடித்துள்ளார். இங்கிலாந்து அணி வெற்றி பெற 388 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 ஆட்டங்களைக் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இரு வருடங்களுக்கு ஒருமுறை நடைபெறும் ஆஷஸ் தொடர், இந்த வருடம் ஆஸ்திரேலியாவில் நடைபெறுகிறது. இங்கிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்டை வென்று 3-0 என்கிற முன்னிலையுடன் ஆஷஸ் தொடரைக் கைப்பற்றியுள்ளது ஆஸ்திரேலிய அணி. 

4-வது டெஸ்ட் சிட்னியில் புதன் அன்று தொடங்கியது. டாஸ் வென்ற ஆஸி. அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 134 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 416 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. கவாஜா 137, ஸ்மித் 67 ரன்கள் எடுத்தார்கள். இங்கிலாந்தின் ஸ்டூவர்ட் பிராட் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள். 

இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 79.1 ஓவர்களில் 294 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. ஜானி பேர்ஸ்டோ 113 ரன்களும் ஸ்டோக்ஸ் 66 ரன்களும் எடுத்தார்கள். ஸ்காட் போலண்ட் 4 விக்கெட்டுகளை எடுத்தார்.

இந்நிலையில் ஆஸ்திரேலிய அணி 2-வது இன்னிங்ஸில் 68.5 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 265 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்துள்ளது. முதல் இன்னிங்ஸில் சதமடித்த உஸ்மான் கவாஜா 101 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். கேம்ரூன் கிரீன் 74 ரன்கள் எடுத்தார். 

சிட்னி டெஸ்டில் இங்கிலாந்து அணி வெற்றி பெற 388 ரன்கள் இலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 

2019 ஆஷஸ் தொடருக்குப் பிறகு ஆஸி. அணியில் மீண்டும் இடம்பிடித்த 35 வயது கவாஜா, தன்னுடைய 45-வது டெஸ்டில் 9-வது மற்றும் 10-வது சதங்களை எடுத்துள்ளார். ஆஷஸ் தொடரில் நான்கு வருடங்களுக்குப் பிறகு சதமடித்துள்ளார். ஒன்றல்ல, இரண்டு.  டிராவிஸ் ஹெட்டுக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டதால் ஆஸி. அணியில் இடம்பிடித்த கவாஜா, இந்தச் சதங்களால் தனக்குத் தொடர்ந்து வாய்ப்புகள் வழங்கவேண்டிய நெருக்கடியை உருவாக்கியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com