மகளின் படத்தை வெளியிட வேண்டாம்: விராட் கோலி வேண்டுகோள்

கேமரா எங்களைப் படம் பிடிக்கும் என நாங்கள் எதிர்பார்க்கவில்லை...
மகளின் படத்தை வெளியிட வேண்டாம்: விராட் கோலி வேண்டுகோள்
Published on
Updated on
1 min read

தனது மகளின் புகைப்படத்தை வெளியிட வேண்டாம் என இந்திய வீரர் விராட் கோலி வேண்டுகோள் விடுத்துள்ளார். 

இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 3-வது ஒருநாள் ஆட்டம் கேப் டவுனில் நேற்று நடைபெற்றது. முதலில் விளையாடிய தென்னாப்பிரிக்க அணி 49.5 ஓவர்களில் 287 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. பிறகு விளையாடிய இந்திய அணி, 49.2 ஓவர்களில் 283 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 4 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றதோடு, ஒருநாள் தொடரை 0-3 என இழந்தது. குயிண்டன் டி காக் ஆட்ட நாயகனாகவும் தொடர் நாயகனாகவும் தேர்வானார்.

இந்த ஆட்டத்தில் விராட் கோலி அரை சதமெடுத்தார். அப்போது மைதானத்தில் குழந்தையுடன் இருந்த மனைவி அனுஷ்கா சர்மாவை நோக்கி இந்த அரை சதத்தை குழந்தைக்கு அர்ப்பணிப்பதாக சைகை செய்தார். அப்போது கேமரா அனுஷ்கா சர்மா பக்கம் திரும்பியது. அவர் கையில் குழந்தை இருந்ததைப் பார்த்த ரசிகர்கள் ஆச்சர்யப்பட்டார்கள். காரணம், இதுவரை தனது மகளின் புகைப்படத்தை கோலி வெளியிட்டதில்லை. வாமிகாவின் முகம் தெரியாதவாறு எடுக்கப்பட்ட புகைப்படங்களை மட்டுமே இருவரும் சமூகவலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார்கள். இந்நிலையில் தொலைக்காட்சி நேரலை ஒளிபரப்பில் அக்குழந்தையை முதல்முதலாகப் பார்க்கும் வாய்ப்பு ரசிகர்களுக்குக் கிடைத்தது.

இதன்பிறகு கோலி குழந்தையின் புகைப்படத்தை சமூகவலைத்தளங்களில் ரசிகர்கள் பகிர்ந்தார்கள். இதை எதிர்பாராத விராட் கோலி, தனது இன்ஸ்டகிராம் ஸ்டோரி பக்கத்தில் ஓர் வேண்டுகோள் விடுத்துள்ளார். அவர் கூறியதாவது:

எங்களுடைய மகளின் புகைப்படம் நேற்று மைதானத்தில் எடுக்கப்பட்டு பலராலும் பகிரப்பட்டதை உணர்ந்துள்ளோம். கேமரா எங்களைப் படம் பிடிக்கும் என நாங்கள் எதிர்பார்க்கவில்லை என்பதைத் தெரியப்படுத்துகிறோம். இது தொடர்பான எங்களுடைய நிலைப்பாடும் கோரிக்கையும் அப்படியேதான் உள்ளன. வாமிகாவை யாரும் படம்பிடிக்க வேண்டாம், அவருடைய படங்களை வெளியிடவேண்டாம் என முன்பு என்ன காரணங்களுக்காகக் கோரிக்கை விடுத்தேனோ அதையே மீண்டும் தெரிவிக்கிறேன். நன்றி எனக் கூறியுள்ளார்.

விராட் கோலியும் பிரபல பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவும் 2017-ல் திருமணம் செய்துகொண்டார்கள். 2021, ஜனவரி 11 அன்று மகள் வாமிகா பிறந்தாள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com