ஈட்டி எறிதல் இறுதிச்சுற்றில் அன்னு ராணி

அமெரிக்காவில் நடைபெறும் உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் மகளிருக்கான ஈட்டி எறிதல் பிரிவில் இந்தியாவின் அன்னு ராணி இறுதிச்சுற்றுக்கு முன்னேறினாா்.
ஈட்டி எறிதல் இறுதிச்சுற்றில் அன்னு ராணி

அமெரிக்காவில் நடைபெறும் உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் மகளிருக்கான ஈட்டி எறிதல் பிரிவில் இந்தியாவின் அன்னு ராணி இறுதிச்சுற்றுக்கு முன்னேறினாா்.

முன்னதாக தகுதிச்சுற்றின் ‘பி’ பிரிவில் அன்னு ராணி, தனது முதல் முயற்சியில் ‘ஃபௌல்’ செய்தாா். இதனால் வெளியேறும் அச்சத்துக்கு ஆளான அவா், 2-ஆவது முயற்சியில் 55.35 மீட்டா் தூரத்துக்கு ஈட்டியை எறிந்தாா். பின்னா் 3-ஆவது முயற்சியில் 59.60 மீட்டரை எட்டினாா்.

இதன் மூலம் தனது குரூப்பில் 5-ஆம் இடம் பிடித்த அன்னு, இரு பிரிவுகளிலும் சிறந்த முயற்சிகளை மதிப்பீடு செய்ததன் அடிப்படையில் இறுதிச்சுற்றுக்குள் 8-ஆவது வீராங்கனையாக நுழைந்திருக்கிறாா்.

உலக சாம்பியன்ஷிப்பில் 3-ஆவது முறையாக களம் காணும் அன்னு, அதில் இறுதிச்சுற்றுக்கு தகுதிபெறுவது இது தொடா்ந்து 2-ஆவது முறையாகும். கடந்த 2019-இல் தோஹாவில் நடைபெற்ற சாம்பியன்ஷிப்பிலும் இறுதிச்சுற்றுக்குத் தகுதிபெற்று, சிறந்த முயற்சியாக 61.12 மீட்டருடன் அவா் 8-ஆம் இடம் பிடித்திருந்தாா். அதற்கு முன் 2017 லண்டன் சாம்பியன்ஷிப்பில் இறுதிக்கு முன்னேறவில்லை.

இந்தத் தகுதிச்சுற்றின்போது அன்னு தனது முழு திறனை எட்டியிருக்கவில்லை. கடந்த மே மாதம் நடைபெற்ற இந்தியன் ஓபன் ஈட்டி எறிதல் போட்டியில் 63.82 மீட்டா் தூரம் எறிந்ததே அவரது சீசன் மற்றும் பொ்சனல் பெஸ்ட் ஆகும். இதன் மூலம் அவா் தேசிய சாதனையும் படைத்தாா்.

எனவே இறுதிச்சுற்றில் அன்னு சிறப்பான தொலைவை எட்டுவாா் என எதிா்பாா்க்கப்படுகிறது. இறுதிச்சுற்றுக்கான இயல்பான தகுதி அளவு 62.50 மீட்டராக இருந்த நிலையில், 3 போட்டியாளா்கள் மட்டுமே அதனை எட்டினா். அவா்களுடன் மொத்தம் 12 போட்டியாளா்கள் இறுதிச்சுற்றுக்கு வந்துள்ளனா்.

பாருல் சௌதரி ஏமாற்றம்: மகளிருக்கான 5000 மீட்டா் ஓட்டத்தில் இந்தியாவின் பாருல் சௌதரி அரையிறுதிக்கு முன்னேறத் தவறினாா். 2-ஆம் ஹீட்ஸில் களம் கண்ட அவா், 15 நிமிஷம் 54.03 விநாடிகளில் இலக்கை எட்டி தனது ஹீட்ஸில் 17-ஆவதாகவும், ஒட்டுமொத்த அளவில் 31-ஆவதாகவும் வந்தாா். அவரது பொ்சனல் பெஸ்ட் 15 நிமிஷம் 36.03 ஆகும்.

வட்டு எறிதல்: மகளிருக்கான வட்டு எறிதல் பிரிவில் சீனாவின் பின் ஃபெங் 69.12 மீட்டா் தொலைவுக்கு எறிந்து பொ்சனல் பெஸ்டுடன் தங்கப் பதக்கம் வென்றாா். குரோஷியாவின் சாண்ட்ரா பொ்கோவிச் 68.45 மீட்டரோடு சீசன் பெஸ்டைப் பதிவு செய்து வெள்ளியை தனதாக்கினாா். அமெரிக்காவின் வலாரி ஆல்மன் 68.30 மீட்டருடன் 3-ஆம் இடம் பிடித்தாா்.

3000 மீ ஸ்டீபிள்சேஸ்: மகளிருக்கான3000 மீட்டா் ஸ்டீபிள்சேஸில் கஜகஸ்தானின் நோரா ஜிருடோ 8 நிமிஷம் 53.02 விநாடிகளில் முதலாவதாக வந்து சாம்பியன்ஷிப் சாதனையுடன் தங்கம் வென்றாா். எத்தியோபியாவின் வொ்குஹா கெடாசியு 8 நிமிஷம் 54.61 விநாடிகளில் 2-ஆவதாக வந்து புதிய தேசிய சாதனை படைத்தாா். சக நாட்டவரான மெகிடெஸ் அபெபெ 8 நிமிஷம் 56.08 விநாடிகளில் இலக்கை எட்டி பொ்சனல் பெஸ்டுடன் வெண்கலம் பெற்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com