மில்லர், டுசன் அட்டகாசம்: தென்னாப்பிரிக்கா வெற்றி!

இந்தியாவுக்கு எதிரான முதல் டி20 ஆட்டத்தில் டேவிட் மில்லர் மற்றும் ரசி வான்டர் டுசன் அதிரடியால் தென்னாப்பிரிக்க அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
மில்லர், டுசன் அட்டகாசம்: தென்னாப்பிரிக்கா வெற்றி!


இந்தியாவுக்கு எதிரான முதல் டி20 ஆட்டத்தில் டேவிட் மில்லர் மற்றும் ரசி வான்டர் டுசன் அதிரடியால் தென்னாப்பிரிக்க அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

இந்தியா, தென்னாப்பிரிக்கா இடையிலான முதல் டி20 ஆட்டம் தில்லியில் இன்று (வியாழக்கிழமை) நடைபெற்றது. முதலில் பேட் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 211 ரன்கள் குவித்தது.

212 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய தென்னாப்பிரிக்காவுக்கு குயின்டன் டி காக் மற்றும் கேப்டன் டெம்பா பவுமா தொடக்க ஆட்டக்காரர்களாகக் களமிறங்கினர். முதலிரண்டு ஓவர்களில் தென்னாப்பிரிக்கா 22 ரன்கள் சேர்க்க, 3-வது ஓவரை வீசிய புவனேஷ்வர் குமார் பவுமா (10) விக்கெட்டை வீழ்த்தினார்.

இதன்பிறகு, 3-வது வீரராக ட்வைன் பிரிடோரியஸ் களமிறக்கப்பட்டார். பிரிடோரியஸும், டி காக்கும் சிறப்பான அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த தென்னாப்பிரிக்கா ஸ்கோர் உயர்ந்தது. குறிப்பாக ஹார்திக் பாண்டியா வீசிய 5-வது ஓவரில் ப்ரிடோரியஸ் 3 சிக்ஸர்களை பறக்கவிட்டார்.

இதனால், பவர் பிளேவின் கடைசி ஓவரை வீச ஹர்ஷல் படேலை அழைத்து வந்தார் பந்த். இதற்குப் பலனாக ப்ரிடோரியஸை (29) போல்டாக்கினார் அவர். பவர் பிளே முடிவில் தென்னாப்பிரிக்க அணி 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 61 ரன்கள் குவித்தது.

இதையடுத்து, ரன் வேகம் சற்று குறைந்தது. டி காக்கும் 22 ரன்களுக்கு அக்சர் படேல் சுழலில் ஆட்டமிழந்தார். 10 ஓவர்கள் முடிவில் தென்னாப்பிரிக்க அணி 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 86 ரன்கள் எடுத்தது. ரசி வான்டர் டுசன் ரன் குவிக்க சிரமப்பட்டதால், தென்னாப்பிரிக்காவின் வெற்றிக்குத் தேவையான ரன் ரேட் அதிகரித்தது. 

கடைசி 8 ஓவரில் 106 ரன்கள் தேவை என்ற நிலையில், அக்சர் படேலை மீண்டும் பந்துவீச அழைத்தார் பந்த். இந்த ஓவரை பயன்படுத்திக்கொண்ட டேவிட் மில்லர், கடைசி 3 பந்துகளில் ஒரு பவுண்டரி மற்றும் இரண்டு சிக்ஸர்களை பறக்கவிட்டார். ஐபிஎல் கிரிக்கெட் இருந்த நல்ல பேட்டிங் நிலையை இந்த ஆட்டத்திலும் தொடர்ந்தார் மில்லர். 

புவனேஷ்வர் குமார் வீசிய 15-வது ஓவரில் பவுண்டரி, சிக்ஸர் என விளாசி 14 ரன்கள் எடுத்த மில்லர், தனது 22-வது பந்தில் அரைசதத்தை எட்டினார். 

மில்லரின் ஆட்டத்தால், கடைசி 4 ஓவரில் தென்னாப்பிரிக்காவின் வெற்றிக்கு 56 ரன்கள் தேவை என்ற நிலை வந்தது. இதுவரை திணறல் ஆட்டத்தை வெளிப்படுத்தி 32 பந்துகளில் 30 ரன்கள் எடுத்திருந்த வான்டர் டுசன் வேறுநிலைக்குச் சென்று முற்றிலும் மாறுபட்ட அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

ஹர்ஷல் படேல் வீசிய 17-வது ஓவரில் அவர் 3 சிக்ஸர்கள், 1 பவுண்டரி விளாசினார். இதன்மூலம், 37-வது பந்தில் அவர் அரைசதத்தை அடைய, தென்னாப்பிரிக்காவுக்கும் அந்த ஓவரில் 22 ரன்கள் கிடைத்தன.

புவனேஷ்வர் குமார் வீசிய 18-வது ஓவரின் முதல் பந்தை மில்லர் சிக்ஸருக்கு அனுப்ப, கடைசி 3 பந்துகளை டுசன் ஒரு சிக்ஸர் மற்றும் 2 பவுண்டரிகளை விளாசினார். இதனால், இந்த ஓவரிலும் தென்னாப்பிரிக்காவுக்கு 22 ரன்கள் கிடைத்தன.

இதனால், கடைசி 2 ஓவரில் 12 ரன்கள் மட்டுமே தேவை என்ற எளிய நிலை உருவானது. 19-வது ஓவரை வீசிய ஹர்ஷல் படேல் 8 ரன்களை கொடுக்க, யுஸ்வேந்திர சஹால் வீசிய கடைசி ஓவரின் முதல் பந்தில் டுசன் பவுண்டரி அடித்து தென்னாப்பிரிக்கா வெற்றியை உறுதி செய்தார்.

19.1 ஓவரில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 212 ரன்கள் எடுத்த தென்னாப்பிரிக்க அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த டுசன் 46 பந்துகளில் 75 ரன்களும், டேவிட் மில்லர் 31 பந்துகளில் 64 ரன்களும் எடுத்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com