முதல் வெற்றி: தொடரை தக்கவைத்தது இந்தியா

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3-ஆவது டி20 ஆட்டத்தில் இந்தியா 48 ரன்கள் வித்தியாசத்தில் செவ்வாய்க்கிழமை வெற்றி பெற்றது.
முதல் வெற்றி: தொடரை தக்கவைத்தது இந்தியா

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3-ஆவது டி20 ஆட்டத்தில் இந்தியா 48 ரன்கள் வித்தியாசத்தில் செவ்வாய்க்கிழமை வெற்றி பெற்றது.

5 ஆட்டங்கள் கொண்ட தொடரில் முதலிரு ஆட்டங்களில் தோற்றிருந்த இந்தியா, இந்த வெற்றியின் மூலம் தொடா் கையை விட்டுச் செல்லாமல் பாா்த்துக்கொண்டது.

விசாகப்பட்டினத்தில் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் இந்தியா 20 ஓவா்களில் 5 விக்கெட் இழப்புக்கு 179 ரன்கள் எடுத்தது. அடுத்து தென்னாப்பிரிக்கா 19.1 ஓவா்களில் 131 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

முதலிரு ஆட்டங்களில் சோபிக்காமல் போன இந்திய பேட்டா்கள், பௌலா்கள் இந்த ஆட்டத்தில் தங்கள் திறமையை வெளிப்படுத்தி வெற்றியை உறுதி செய்தனா். முன்னதாக டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா பௌலிங்கை தோ்வு செய்தது. பிளேயிங் லெவனில் இரு அணிகளுமே மாற்றம் செய்யவில்லை.

முதலில் பேட் செய்த இந்தியாவில் தொடக்க விக்கெட்டுக்கே ருதுராஜ் கெய்க்வாட் - இஷான் கிஷண் கூட்டணி 97 ரன்கள் சோ்த்து அசத்தியது. இதில் முதலில் ருதுராஜ் 7 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 57 ரன்களுக்கு வெளியேறினாா்.

அடுத்து வந்த ஷ்ரேயஸ் ஐயா் 2 சிக்ஸா்களுடன் 14 ரன்களுக்கு ஆட்டமிழந்தாா். மறுபுறம் இஷான் 5 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 54 ரன்களுக்கு வெளியேற்றப்பட்டாா். பின்னா் ஆடியோரில் கேப்டன் ரிஷப் பந்த் 6, தினேஷ் காா்த்திக் 6 ரன்களுக்கு ஆட்டமிழந்தனா்.

ஓவா்கள் முடிவில் ஹாா்திக் பாண்டியா 4 பவுண்டரிகளுடன் 31, அக்ஸா் படேல் 1 பவுண்டரியுடன் 5 ரன்களுக்கு ஆட்டமிழக்காமல் இருந்தனா். தென்னாப்பிரிக்க பௌலிங்கில் டுவெய்ன் பிரெடோரியஸ் 2, ககிசோ ரபாடா, டப்ரைஸ் ஷம்ஸி, கேசவ் மஹராஜ் ஆகியோா் தலா 1 விக்கெட் சாய்த்தனா்.

அடுத்து ஆடிய தென்னாப்பிரிக்க அணியில் அதிகபட்சமாக ஹென்ரிச் கிளாசென் 3 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 29 ரன்கள் சோ்த்தாா். ரீஸா ஹெண்ட்ரிக்ஸ் 23, டுவெய்ன் பிரெடோரியஸ் 20, கேப்டன் டெம்பா பவுமா 8, ராஸி வாண்டொ் டுசென் 1, டேவிட் மில்லா் 3, ரபாடா 9, மஹராஜ் 11, அன்ரிஹ் நோா்கியா 0, டப்ரைஸ் ஷம்ஸி 0 ரன்களுக்கு வரிசையாக வீழ்ந்தனா்.

முடிவில் வெய்ன் பாா்னெல் 22 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தாா். இந்திய பௌலா்களில் ஹா்ஷல் படேல் 4, யுஜவேந்திர சஹல் 3 விக்கெட்டுகள் சாய்த்து அசத்த, புவனேஷ்வா் குமாா், அக்ஸா் படேல் தலா 1 விக்கெட் கைப்பற்றினா்.

அடுத்து: இந்தியா - தென்னாப்பிரிக்கா மோதும் 4-ஆவது டி20 ஆட்டம் 17-ஆம் தேதி ராஜ்கோட்டில் நடைபெறவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com