
நானும் கவாஸ்கரும் உடற்பயிற்சியே செய்ததில்லை என முன்னாள் வீரர் ஸ்ரீகாந்த் கூறியுள்ளார்.
ஜூன் 25, 1983. இந்த நாளை இந்திய கிரிக்கெட் ரசிகர்களால் மறக்க முடியாது. கபில் தேவ் தலைமையிலான இந்திய அணி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பையை வென்று சாதனை படைத்த நாள் இது.
இறுதிச்சுற்றில் இரு அணிகளிலும் அதிக ரன்கள் எடுத்தவர் ஸ்ரீகாந்த். 57 பந்துகளில் 7 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 38 ரன்கள் எடுத்தார்.
1983 உலகக் கோப்பை அனுபவங்கள் பற்றி சென்னை சூப்பர் கிங்ஸ் இணையத்தளத்துக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:
அப்போது ஒரு நல்ல விஷயம், எங்களுக்குப் பயிற்சியாளர் என யாரும் கிடையாது. எங்களுடைய மேலாளருக்கு கிரிக்கெட் பற்றி ஒன்றும் தெரியாது. இது பலவழிகளிலும் எங்களுக்கு உதவியது. யாரிடமிருந்தும் எங்களுக்கு எவ்வித அழுத்தமும் வரவில்லை.
நாங்கள் உடற்பயிற்சி செய்தது கிடையாது. நானும் சந்தீப் பாட்டிலும் எங்கள் வாழ்நாளில் உடற்பயிற்சியே செய்ததில்லை. சிலர் (மைதானத்தில்) நான்கு சுற்றுகள் செல்வார்கள். கிர்மானி கொஞ்சம் உடற்பயிற்சி செய்வார். கவாஸ்கர் உடற்பயிற்சி செய்து நான் பார்த்ததே கிடையாது. அவர் எவ்வளவு ரன்கள் எடுத்துள்ளார். இதெல்லாம் மனநிலை தொடர்புடையது. சிலர் தனிப்பட்ட முறையில் உடற்பயிற்சி செய்வார்கள். அமர்நாத் ஓரளவு உடற்பயிற்சி செய்வார். நான் கொஞ்சம் சோம்பேறி. எனக்கு 62 வயது ஆகிறது. உடற்பயிற்சி செய்யுங்கள், நடை செல்லுங்கள் என என் மனைவி சொல்வார். நான் எப்போதும் இயற்கையாகவே நல்ல உடற்தகுதியுடன் இருப்பவன் தான் எனச் சொல்வேன் எனப் பேட்டியளித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.