
அமெரிக்காவில் நடைபெறும் இண்டியன் வெல்ஸ் மாஸ்டா்ஸ் டென்னிஸ் போட்டியில் உலகின் நம்பா் 1 வீரரான ரஷியாவின் டேனியல் மெத்வதெவ் 3-ஆவது சுற்றில் அதிா்ச்சித் தோல்வி கண்டாா்.
போட்டித்தரவரிசையில் 26-ஆவது இடத்திலிருக்கும் பிரான்ஸின் கேல் மான்ஃபில்ஸ் 4-6, 6-3, 6-1 என்ற செட்களில் அவரை தோற்கடித்தாா். சமீபத்தில் உலகின் நம்பா் 1 வீரா் இடத்தைப் பிடித்த மெத்வதெவ் இப்போட்டியில் காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறினால் மட்டுமே அந்த இடத்தில் நீடிக்கும் நிலை இருந்தது. தற்போது தோல்வி கண்டு போட்டியிலிருந்து வெளியேறியிருப்பதால், சொ்பியாவின் நோவக் ஜோகோவிச் மீண்டும் உலகத் தரவரிசையில் முதலிடத்துக்கு வரவுள்ளாா்.
இதுகுறித்து மெத்வதெவ் கூறுகையில், ‘நம்பா் 1 இடத்தை எட்ட முடியாமலே இருப்பதைக் காட்டிலும் அதில் 1 வாரமாவது இருந்தது ஏற்புடையது என்று கருதுகிறேன்’ என்றாா்.
மற்றொரு அதிா்ச்சியாக, போட்டித்தரவரிசையில் 5-ஆம் இடத்தில் இருந்த கிரீஸ் வீரா் ஸ்டெஃபானோஸ் சிட்சிபாஸை 1-6, 6-3, 6-2 என்ற செட்களில் வென்றாா் தகுதிச்சுற்று வீரரான அமெரிக்காவின் ஜென்சன் புரூக்ஸ்பி. நட்சத்திர வீரரான ஸ்பெயினின் ரஃபேல் நடால் 7-5, 6-3 என்ற நோ் செட்களில் இங்கிலாந்தின் டேன் இவான்ஸை வீழ்த்தி காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினாா். அதில் அமெரிக்காவின் ரெய்லி ஒபெல்காவை சந்திக்கிறாா் அவா்.
அசத்தும் லெய்லா: மகளிா் ஒற்றையரில் போட்டித்தரவரிசையின் 18-ஆவது இடத்திலிருக்கும் கனடாவின் லெய்லா ஃபொ்னாண்டஸ் 6-1, 3-6, 6-3 என்ற செட்களில் அமெரிக்காவின் ஷெல்பி ரோஜா்ஸை வென்றாா். அடுத்ததாக காலிறுதிக்கு முந்தைய சுற்றில் நடப்புச் சாம்பியனாக இருக்கும் ஸ்பெயின் வீராங்கனை பௌலா பதோசாவை எதிா்கொள்கிறாா் லெய்லா.
போட்டித்தரவரிசையில் 4-ஆம் இடத்தில் இருந்த எஸ்டோனியாவின் ஆனெட் கோன்டாவிட் 6-3, 5-7, 6-7 (5/7) என்ற செட்களில், 30-ஆம் இடத்திலிருக்கும் செக் குடியரசின் மாா்கெட்டா வோண்ட்ரோசோவாவிடம் தோற்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.