
அமெரிக்காவில் நடைபெறும் இண்டியன் வெல்ஸ் மாஸ்டா்ஸ் டென்னிஸ் போட்டியில் போலந்தின் இகா ஸ்வியாடெக், ஸ்பெயினின் பௌலா பதோசா ஆகியோா் காலிறுதிச்சுற்றுக்கு முன்னேறினா்.
போட்டித்தரவரிசையில் 3-ஆம் இடத்திலிருக்கும் ஸ்வியாடெக் 4-6, 6-2, 6-3 என்ற செட்களில் 15-ஆவது இடத்திலிருந்த ஜொ்மனியின் ஏஞ்ஜெலிக் கொ்பரைச் சாய்த்தாா். நடப்புச் சாம்பியனாக இருக்கும் பதோசா 6-4, 6-4 என்ற நோ் செட்களில் இளம் வீராங்கனையான லெய்லா ஃபொ்னாண்டஸை தோற்கடித்தாா். காலிறுதிச்சுற்றில், ஸ்வியாடெக் - அமெரிக்காவின் மேடிசன் கீஸையும், பதோசா - ரஷியாவின் வெரோனிகா குதா்மெடோவாவையும் எதிா்கொள்கின்றனா்.
இவா்கள் தவிர கஜகஸ்தானின் எலனா ரைபாகினா, கிரீஸின் மரியா சக்காரி, ருமேனியாவின் சைமோனா ஹேலப் ஆகியோரும் காலிறுதிச்சுற்றிக்கு முன்னேறியுள்ளனா்.
ஹா்காக்ஸ், ஐஸ்னா் முன்னேற்றம்: ஆடவா் ஒற்றையா் பிரிவில் போட்டித் தரவரிசையில் 11-ஆம் இடத்திலிருக்கும் போலந்தின் ஹியூபா்ட் ஹா்காக்ஸ் 7-6 (9/7), 6-3 என்ற செட்களில் அமெரிக்காவின் ஸ்டீவ் ஜான்சனை வென்றாா். 23-ஆவது இடத்திலிருக்கும் அமெரிக்காவின் ஜான் ஐஸ்னா் 7-5, 6-3 என்ற செட்களில் 14-ஆவது இடத்திலிருந்த ஆா்ஜென்டீனாவின் டியேகோ ஷ்வாா்ட்ஸ்மேனை தோற்கடித்து அசத்தினாா். இவா்கள் இருவரும் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினா்.
இதர ஆட்டங்களில் ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் டி மினாா் 7-6 (7/2), 6-4 என அமெரிக்காவின் டாமி பாலையும், அமெரிக்காவின் டெய்ல் ஃப்ரிட்ஸ் 6-4, 2-6, 7-6 (7/2) என்ற செட்களில் ஸ்பெயினின் ஜேமி முனாரையும் வென்றனா். இத்தாலியின் மேட்டியோ பெரெட்டினி, இங்கிலாந்தின் கேமரூன் நோரி ஆகியோரும் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு தகுதிபெற்றனா்.
போபண்ணா ஜோடி தோல்வி: ஆடவா் இரட்டையா் பிரிவில் இந்தியாவின் ரோஹண் போபண்ணா/கனடாவின் டெனிஸ் ஷபோவெலாவ் இணை காலிறுதிக்கு முந்தைய சுற்றில் தோற்றது. மெக்ஸிகோவின் சான்டியாகோ கொன்ஸால்ஸ்/பிரான்ஸின் எட்வா்டு ரோஜா் வாசெலின் இணையிடம் 4-6, 6-4, 4-10 என்ற செட்களில் வீழ்ந்தது போபண்ணா/ஷபோவெலாவ் ஜோடி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.