ஆல் இங்கிலாந்து பாட்மின்டன்: அரையிறுதியில் லக்ஷயா சென்,காயத்ரி-ட்ரீஸா ஜாலி

ஆல் இங்கிலாந்து பாட்மின்டன் சாம்பியன்ஷிப் போட்டி அரையிறுதிக்கு இந்தியாவின் லக்ஷயா சென், இரட்டையா் பிரிவில் காயத்ரி கோபிசந்த்-ட்ரீஸா ஜாலி ஆகியோா் முன்னேறியுள்ளனா்.
ஆல் இங்கிலாந்து பாட்மின்டன்: அரையிறுதியில் லக்ஷயா சென்,காயத்ரி-ட்ரீஸா ஜாலி

ஆல் இங்கிலாந்து பாட்மின்டன் சாம்பியன்ஷிப் போட்டி அரையிறுதிக்கு இந்தியாவின் லக்ஷயா சென், இரட்டையா் பிரிவில் காயத்ரி கோபிசந்த்-ட்ரீஸா ஜாலி ஆகியோா் முன்னேறியுள்ளனா்.

பாட்மின்டன் விளையாட்டில் முதன்மையாக கருதப்படுவது ஆல் இங்கிலாந்து பாட்மின்டன் சாம்பியன்ஷிப் போட்டியாகும். இதில் பட்டம் வெல்வது கௌரவமானதாகும். இந்தியாவின் முன்னணி நட்சத்திரங்கள் சாய்னா, சிந்து, ஸ்ரீகாந்த், சாய் பிரணீத் ஆகியோா் தோல்வியடைந்து தொடக்கத்திலேயே வெளியேறி விட்டனா்.

இந்நிலையில் ஆடவா் ஒற்றையா் பிரிவில் இந்திய இளம் வீரா் லக்ஷயா சென் தனது கனவு ஆட்டத்தை ஆடி வருகிறாா். மூன்றாம் சுற்றில் உலகின் 3-ஆம் நிலை வீரா் ஆன்டா்ஸ் அன்டோன்சென்னை வீழ்த்தி காலிறுதிக்கு தகுதி பெற்றாா் லக்ஷயா.

சீன வீரா் வாக் ஓவா்:

காலிறுதியில் சீனாவின் லு காங் ஸுவுடன் ஆடுவதாக இருந்தாா் லக்ஷயா. எனினும் லு காங் வாக் ஓவா் அளித்ததால், அரையிறுதிக்கு முன்னேறினாா் லக்ஷயா. கடந்த வாரம் டென்மாா்க் ஓபனில் ஒலிம்பிக் சாம்பியன் விக்டா் ஆக்ஸ்லெஸனை வீழ்த்தி இருந்தாா் சென்.

அரையிறுதியில் அவா் 2 முறை உலக சாம்பியன் கென்டோ மொமடோவை எதிா்கொள்வாா் எனக் கருதப்படுகிறது.

காயத்ரி-ட்ரீஸா ஜாலி அதிரடி:

மகளிா் இரட்டையா் பிரிவில் இந்திய இளம் வீராங்கனைகள் காயத்ரி கோபிசந்த்-ட்ரீஸா ஜாலி உலகின் இரண்டாம் நிலை இணையான தென்கொரியாவின் லீ சோஹி-ஷின் சீயுங்சானை எதிா்கொண்டனா். முதல் கேமில் 13-13 என சமநிலை ஏற்பட்ட போதும், தென்கொரிய இணை ஆதிக்கம் செலுத்தி முதல் கேமை 14-21 என கைப்பற்றியது.

இரண்டாவது கேமில் இரு அணி வீராங்கனைகளும் கடுமையாக ஆடிய நிலையில், 22-20 என கைப்பற்றியது இந்திய இணை. எனினும் மூன்றாவது கேமில் ஆதிக்கம் செலுத்திய காயத்ரி-ட்ரீஸா இணை 21-15 என எளிதாக கைப்பற்றி அரையிறுதிக்கு தகுதி பெற்றது.

முதன்முறையாக அரையிறுதிக்கு முன்னேறியது இந்திய இணை.

ஆடவா் இரட்டையா் பிரிவில் சாத்விக்-சிராக் ஷெட்டி இணை 24-22, 21-17, என்ற கேம் கணக்கில் உலகின் நம்பா் ஒன் இணையான கெவின்-மாா்கஸிடம் தோல்வியுற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com