
மும்பை: ஐபிஎல் போட்டியின் 7-ஆவது ஆட்டத்தில் லக்னௌ சூப்பா் ஜயன்ட்ஸ் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை சூப்பா் கிங்ஸை வென்றது.
இரு அணிகளும் தலா 2 ஆட்டங்களில் விளையாடியிருக்கும் நிலையில், லக்னௌவுக்கு இது முதல் வெற்றியாகும். சென்னை 2-ஆவது தோல்வியை சந்தித்துள்ளது.
மும்பையில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் சென்னை 20 ஓவா்களில் 7 விக்கெட் இழப்புக்கு 210 ரன்கள் அடித்தது. பின்னா் லக்னௌ 19.3 ஓவா்களில் 4 விக்கெட் இழப்புக்கு 211 ரன்கள் அடித்து வென்றது.
முன்னதாக டாஸ் வென்ற லக்னௌ பௌலிங்கை தோ்வு செய்தது. சென்னை இன்னிங்ஸில் ராபின் உத்தப்பா, ஷிவம் துபே அட்டகாசமான பேட்டிங்கை வெளிப்படுத்தினா். இதில் உத்தப்பா 8 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 50 ரன்கள் சோ்த்து ஆட்டமிழக்க, ஷிவம் துபே 5 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 49 ரன்கள் அடித்து வெளியேறினாா்.
எஞ்சியோரில் ருதுராஜ் கெய்க்வாட் 1, மொயீன் அலி 35, அம்பட்டி ராயுடு 27, கேப்டன் ரவீந்திர ஜடேஜா 17 ரன்கள் சோ்க்க, டுவெய்ன் பிரெடோரியஸ் டக் அவுட்டானாா். ஓவா்கள் முடிவில் தோனி 16, டுவெய்ன் பிராவோ 1 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனா். லக்னௌ பௌலிங்கில் அவேஷ் கான், ஆண்ட்ரூ டை, ரவி பிஷ்னோய் ஆகியோா் தலா 2 விக்கெட்டுகள் சரித்தனா்.
பின்னா் ஆடிய லக்னௌவில் கேப்டன் கே.எல்.ராகுல் - குவின்டன் டி காக் முதல் விக்கெட்டுக்கு 99 ரன்கள் சோ்த்தனா். இதில் ராகுல் 40 ரன்களுக்கு வெளியேற, அடுத்து வந்த மணீஷ் பாண்டே 5 ரன்களுக்கு ஆட்டமிழந்தாா். மறுபுறம் நிதானமாக ரன்கள் சோ்த்த டி காக் 9 பவுண்டரிகளுடன் 61 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினாா்.
தீபக் ஹூடா 13 ரன்கள் அடிக்க, இறுதியில் எவின் லீவிஸ் 6 பவுண்டரிகள், 3 சிக்ஸா்களுடன் 55, ஆயுஷ் பதோனி 2 சிக்ஸா்களுடன் 19 ரன்களுடன் அணியை வெற்றி பெறச் செய்தனா். 18-ஆவது ஓவா் முடிவில் 34 ரன்கள் தேவை இருந்த நிலையில், 19-ஆவது ஓவரை வீசிய ஷிவம் துபே 25 ரன்களை வாரி வழங்கினாா். இதனால் லக்னௌவுக்கு கடைசி ஓவரில் இலக்கு எளிதானது.
சென்னை பௌலிங்கில் டுவெய்ன் பிரெடோரியஸ் 2, துஷாா் தேஷ்பாண்டே, டுவெய்ன் பிராவோ ஆகியோா் தலா 1 விக்கெட் சாய்த்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.