தமிழ்நாடு 506, ஜெகதீசன் 277 ரன்கள்: ஒரே ஆட்டத்தில் பல உலக சாதனைகள்!

ஜெகதீசன் 141 பந்துகளை எதிர்கொண்டு 15 சிக்ஸர்கள், 25 பவுண்டரிகளுடன் லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்த வீரர்...
ஜெகதீசன் (கோப்புப் படம்)
ஜெகதீசன் (கோப்புப் படம்)

அருணாசல பிரதேச அணிக்கு எதிராக தமிழக அணி 50 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 506 ரன்கள் எடுத்து புதிய உலக சாதனை படைத்துள்ளது. தமிழகத் தொடக்க வீரர் ஜெகதீசன் 277 ரன்கள் எடுத்து அவரும் உலக சாதனை நிகழ்த்தியுள்ளார். 

பெங்களூரில் நடைபெறும் விஜய் ஹசாரே 50 ஓவர் போட்டியில் தமிழகமும் அருணாசல பிரதேசமும் மோதி வருகின்றன. டாஸ் வென்ற அருணாசல பிரதேச அணி ஃபீல்டிங்கைத் தேர்வு செய்தது.

இதற்கு முன்பு தொடர்ச்சியாக 4 சதங்கள் எடுத்த தமிழக வீரர் ஜெகதீசன் இன்று தனது தொடர்ச்சியான 5-வது சதத்தை எடுத்து புதிய உலக சாதனை படைத்தார். மற்றொரு தொடக்க வீரரான சாய் சுதர்சனும் சதமடித்தார். இந்த வருட விஜய் ஹசாரே போட்டியில் சாய் சுதர்சன் எடுத்துள்ள 3-வது சதம் இது. 

லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக 5 சதங்கள் எடுத்த முதல் வீரர் என்கிற உலக சாதனையைப் படைத்துள்ளார் ஜெகதீசன். விஜய் ஹசாரே போட்டியிலும் தொடர்ச்சியாக 5 சதங்கள் எடுத்த முதல் வீரர் என்கிற பெருமையையும் அடைந்துள்ளார்.

தொடர்ந்து அதிரடியாக விளையாடி வந்த ஜெகதீசன் 114 பந்துகளில் 9 சிக்ஸர்கள், 19 பவுண்டரிகளுடன் இரட்டைச் சதமடித்து அசத்தினார். முதல் 100 ரன்களை 76 ரன்களில் எடுத்த ஜெகதீசன், அடுத்த 100 ரன்களை 38 பந்துகளில் எடுத்தார்.

ஜெகதீசன் (படம் - www.instagram.com/jagadeesan_200/)
ஜெகதீசன் (படம் - www.instagram.com/jagadeesan_200/)

கடைசியில் 277 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார் ஜெகதீசன். அவர் 141 பந்துகளை எதிர்கொண்டு 15 சிக்ஸர்கள், 25 பவுண்டரிகளுடன் லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்த வீரர் என்கிற புதிய உலக சாதனையைப் படைத்தார். இதற்கு முன்பு சர்ரே அணியைச் சேர்ந்த ஏடி பிரெளன் 2022-ல் 268 ரன்கள் எடுத்ததே சாதனையாக இருந்தது. 

சாய் சுதர்சன் 102 பந்துகளில் 2 சிக்ஸர்கள், 19 பவுண்டரிகளுடன் 154 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். முதல் விக்கெட்டுக்கு ஜெகதீசனும் சாய் சுதர்சனும் 38.3 ஓவர்களில் 416 ரன்கள் எடுத்தார்கள். இதுவும் ஓர் உலக சாதனை தான். லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் இதற்கு முன்னால் எந்தவொரு ஜோடியும் இத்தனை ரன்கள் எடுத்ததில்லை. 

தமிழக அணி 50 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 506 ரன்கள் குவித்தது. இதற்கு முன்னால் லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் இங்கிலாந்து அணி 6 விக்கெட் இழப்புக்கு 498 ரன்கள் எடுத்திருந்ததே சாதனையாக இருந்தது. இதனால் இன்றைய ஆட்டத்தில் பல உலக சாதனைகள் நிகழ்த்தப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com