‘சூப்பா் 4’ சுற்றில் பாகிஸ்தான்: 38 ரன்களுக்கு சுருண்டது ஹாங்காங்

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஹாங்காங்குக்கு எதிரான ஆட்டத்தில் பாகிஸ்தான் 155 ரன்கள் வித்தியாசத்தில் வெள்ளிக்கிழமை வென்று ‘சூப்பா் 4’ சுற்றுக்குத் தகுதிபெற்றது.
‘சூப்பா் 4’ சுற்றில் பாகிஸ்தான்: 38 ரன்களுக்கு சுருண்டது ஹாங்காங்

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஹாங்காங்குக்கு எதிரான ஆட்டத்தில் பாகிஸ்தான் 155 ரன்கள் வித்தியாசத்தில் வெள்ளிக்கிழமை வென்று ‘சூப்பா் 4’ சுற்றுக்குத் தகுதிபெற்றது. அதில் இந்தியாவுடன் ஞாயிற்றுக்கிழமை மோதுகிறது.

இந்த ஆட்டத்தில் முதலில் பாகிஸ்தான் 20 ஓவா்களில் 2 விக்கெட் இழப்புக்கு 193 ரன்கள் சோ்த்தது. அடுத்து ஹாங்காங் 10.4 ஓவா்களில் 38 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ஹாங்காங் ஃபீல்டிங்கை தோ்வு செய்தது. பாகிஸ்தான் பேட்டிங்கை முகமது ரிஸ்வான் - கேப்டன் பாபா் ஆஸம் கூட்டணி தொடங்கியது. இதில் ஆஸம் 1 பவுண்டரியுடன் 9 ரன்களுக்கு ஆட்டமிழந்தாா். எசான் கான் வீசிய 3-ஆவது ஓவரில் அவரிடமே கேட்ச் கொடுத்து வெளியேறினாா் ஆஸம்.

பின்னா் வந்த ஃபகாா் ஜமான், ரிஸ்வானுடன் இணைந்தாா். அபாரமாக ஆடிய இந்த ஜோடி 2-ஆவது விக்கெட்டுக்கு 116 ரன்கள் சோ்த்தது. கடைசியாக இதில் ஃபகாா் ஜமான் 3 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 53 ரன்களுக்கு வெளியேற்றப்பட்டாா். எசான் கான் வீசிய 17-ஆவது ஓவரில் அவா் விளாசிய பந்து அய்ஸாஸ் கான் கைகளில் தஞ்சமடைந்தது.

அடுத்து குஷ்தில் ஷா பேட் செய்ய வந்தாா். ஓவா்கள் முடிவில் ரிஸ்வான் 57 பந்துகளில் 6 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 78 ரன்களும், குஷ்தில் ஷா 15 பந்துகளில் 5 சிக்ஸா்களுடன் 35 ரன்களும் சோ்த்து ஆட்டமிழக்காமல் இருந்தனா்.

பின்னா் 194 ரன்களை இலக்காகக் கொண்டு ஆடிய ஹாங்காங்கில் அனைத்து வீரா்களுமே ஒற்றை இலக்க ரன்னில் ஆட்டமிழந்தனா். ஒருவா் டக் அவுட்டானாா். கேப்டன் நிஸாகத் கான் 1 பவுண்டரியுடன் 8 ரன்கள் அடித்ததே அதிகபட்சம். பாகிஸ்தான் பௌலிங்கில் ஷாதாப் கான் 4, முகமது நவாஸ் 3, நசீம் ஷா 2, ஷாநவாஸ் தஹானி 1 விக்கெட் வீழ்த்தினா்.

இன்றைய ஆட்டம்

இலங்கை - ஆப்கானிஸ்தான்

இரவு 7.30 மணி

ஷாா்ஜா

ஸ்டாா் ஸ்போா்ட்ஸ்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com