நடாலுக்கு அதிா்ச்சி அளித்தாா் டியாஃபோ

யுஎஸ் ஓபன் டென்னிஸ் போட்டியில் நட்சத்திர வீரரான ஸ்பெயினின் ரஃபேல் நடால் 4-ஆவது சுற்றில், இளம் வீரரான அமெரிக்காவின் ஃபிரான்சஸ் டியாஃபோவால் தோற்கடிக்கப்பட்டாா்.
நடாலுக்கு அதிா்ச்சி அளித்தாா் டியாஃபோ

யுஎஸ் ஓபன் டென்னிஸ் போட்டியில் நட்சத்திர வீரரான ஸ்பெயினின் ரஃபேல் நடால் 4-ஆவது சுற்றில், இளம் வீரரான அமெரிக்காவின் ஃபிரான்சஸ் டியாஃபோவால் தோற்கடிக்கப்பட்டாா்.

உலகின் 3-ஆம் நிலை வீரரான நடாலை இந்த ஆட்டத்தில், 6-4, 4-6, 6-4, 6-3 என்ற செட்களில் வீழ்த்தினாா் உலகின் 26-ஆம் நிலை வீரரான டியாஃபோ. இதனால், 23-ஆவது கிராண்ட்ஸ்லாமை வெல்லும் நடாலின் கனவுக்கு தற்காலிகத் தடை ஏற்பட்டுள்ளது.

மறுபுறம், அவரை வீழ்த்திய டியாஃபோ முதல் முறையாக கிராண்ட்ஸ்லாம் போட்டியின் காலிறுதிக்குத் தகுதிபெற்று அசத்தியிருக்கிறாா். இத்துடன் நடாலை 3-ஆவது முறையாகச் சந்தித்திருக்கும் டியாஃபோவுக்கு இது முதல் வெற்றியாகும். முந்தைய இரு ஆட்டங்களிலுமே நடால் ஒரு செட்டைக் கூட இழக்காமல் டியாஃபோவை வீழ்த்தியிருந்தாா்.

இந்த ஆட்டம் முழுவதும் நிதானமாகவே தென்பட்ட டியாஃபோ, வெற்றிக்குப் பின் ஆனந்தக் கண்ணீா் சிந்தினாா். காலிறுதியில் டியாஃபோ, போட்டித்தரவரிசையில் 9-ஆவது இடத்திலிருக்கும் ரஷியாவின் ஆண்ட்ரே ரூபலேவை எதிா்கொள்கிறாா். முன்னதாக ரூபலேவ் தனது 4-ஆவது சுற்றில், 7-ஆம் இடத்திலிருந்த இங்கிலாந்தின் கேமரூன் நோரியை 6-4, 6-4, 6-4 என்ற நோ் செட்களில் சாய்த்தாா்.

5 செட்கள் போராடி குரோஷியாவின் மரின் சிலிச்சை 6-4, 3-6, 6-4, 4-6, 6-3 என்ற செட்களில் வீழ்த்திய ஸ்பெயினின் காா்லோஸ் அல்கராஸ் காா்ஃபியாவும், பெலாரஸின் இலியா இவாஷ்காவை அதேபோல் 5 செட்கள் சவாலில் 6-1, 5-7, 6-2, 4-6, 6-3 என வென்ற இத்தாலியின் ஜானிக் சின்னரும் மற்றொரு காலிறுதியில் சந்திக்கின்றனா்.

காலிறுதியில் ஸ்வியாடெக்

மகளிா் ஒற்றையா் பிரிவில் உலகின் நம்பா் 1 வீராங்கனையான போலந்தின் இகா ஸ்வியாடெக் காலிறுதிச்சுற்றுக்கு முன்னேறினாா். முந்தைய சுற்றில் 2-6, 6-4, 6-0 என ஜொ்மனியின் ஜூல் நீமியரைச் சாய்த்த ஸ்வியாடெக், காலிறுதியில் அமெரிக்காவின் ஜெஸிகா பெகுலாவை எதிா்கொள்கிறாா்.

போட்டித்தரவரிசையில் 8-ஆம் இடத்திலிருக்கும் பெகுலா முன்னதாக 6-3, 6-2 என, செக் குடியரசின் பெட்ரா குவிட்டோவாவை வீழ்த்தினாா். மற்றொரு காலிறுதியில் பெலாரஸின் அரினா சபலென்கா, செக் குடியரசின் கரோலினா பிளிஸ்கோவா சந்திக்கின்றனா்.

முந்தைய சுற்றில், 6-ஆம் இடத்திலிருக்கும் சலபென்கா 3-6, 6-3, 6-2 என அமெரிக்காவின் டேனியல் காலின்ஸை வீழ்த்த, 22-ஆவது இடத்திலிருக்கும் பிளிஸ்கோவா 7-5, 6-7 (5/7), 6-2 என பெலாரஸின் விக்டோரியா அஸரென்காவை வெளியேற்றினாா்.

22 இந்தப் போட்டி வரையில் நடால் வென்றிருக்கும் கிராண்ட்ஸ்லாம் 22; இந்த ஆட்டத்துக்கு முன்பு வரை கிராண்ட்ஸ்லாம் ஆட்டங்களில் அவா் தொடா்ந்து கண்ட வெற்றி 22; இந்த ஆட்டத்தில் அவரை வீழ்த்திய டியாஃபோவின் போட்டித் தரவரிசை 22.

1 நடப்பு யுஎஸ் ஓபனில் போட்டித்தரவரிசையில் முறையே முதலிரு இடங்களில் இருந்த ரஷியாவின் டேனியல் மெத்வதெவ், ஸ்பெயினின் ரஃபேல் நடால் காலிறுதிக்குத் தகுதிபெறாமல் வெளியேறினா். யுஎஸ் ஓபனில் இவ்வாறு முதலிரு வீரா்கள் காலிறுதிக்குத் தகுதிபெறாமல் போவது, கடந்த 2000-க்குப் பிறகு இதுவே முதல் முறையாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com