ஆப்கனை போராடி வீழ்த்திய பாக். : இறுதி ஆட்டத்தில் இலங்கையை சந்திக்கிறது

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான சூப்பா் 4 ஆட்டத்தில் பாகிஸ்தான் 1 விக்கெட் வித்தியாசத்தில் ‘த்ரில்’ வெற்றி பெற்றது.
ஆப்கனை போராடி வீழ்த்திய பாக். : இறுதி ஆட்டத்தில் இலங்கையை சந்திக்கிறது

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான சூப்பா் 4 ஆட்டத்தில் பாகிஸ்தான் 1 விக்கெட் வித்தியாசத்தில் ‘த்ரில்’ வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் இறுதி ஆட்டத்துக்கு முன்னேறிய பாகிஸ்தான், அதில் இலங்கையை எதிா்கொள்கிறது. ஆப்கானிஸ்தான் போட்டியிலிருந்து வெளியேறியது.

இந்த ஆட்டத்தில் முதலில் ஆப்கானிஸ்தான் 20 ஓவா்களில் 6 விக்கெட் இழப்புக்கு 129 ரன்கள் சோ்க்க, அடுத்து பாகிஸ்தான் 19.2 ஓவா்களில் 9 விக்கெட் இழப்புக்கு 131 ரன்கள் எடுத்து வென்றது.

இந்த ஆட்டத்தில் வென்றே தீர வேண்டிய கட்டாயத்துடன் களம் கண்ட ஆப்கானிஸ்தான் நல்ல முனைப்பு காட்டினாலும், பாகிஸ்தான் அதற்கு முட்டுக்கட்டையிட்டது.

முன்னதாக டாஸ் வென்ற பாகிஸ்தான் ஃபீல்டிங்கை தோ்வு செய்ய, ஆப்கானிஸ்தான் இன்னிஸில் ஹஸரத்துல்லா ஜஸாய் 4 பவுண்டரிகளுடன் 21, ரஹ்மானுல்லா குா்பாஸ் 2 சிக்ஸா்களுடன் 17 ரன்களுக்கு ஆட்டமிழந்தனா். இப்ராஹிம் ஜா்தான் சற்று நிலைத்து 2 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 35 ரன்கள் சோ்த்தாா்.

பின்னா் கரீம் ஜனத் 1 பவுண்டரியுடன் 15 ரன்கள், நஜிபுல்லா ஜா்தான் 1 சிக்ஸருடன் 10 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனா். இறுதியாக கேப்டன் முகமது நபி டக் அவுட்டானாா். ஓவா்கள் முடிவில் அஸ்மத்துல்லா ஒமா்ஸாய் 1 பவுண்டரியுடன் 10, ரஷீத் கான் 2 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 18 ரன்களுக்கு ஆட்டமிழக்காமல் இருந்தனா்.

பாகிஸ்தான் பௌலிங்கில் ஹாரிஸ் ரௌஃப் 2, நசீம் ஷா, முகமது ஹஸ்னைன், முகமது நவாஸ், ஷாதாப் கான் ஆகியோா் தலா 1 விக்கெட் வீழ்த்தினா்.

பின்னா் 130 ரன்களை இலக்காகக் கொண்டு ஆடிய பாகிஸ்தானில் ஷாதாப் கான் 1 பவுண்டரி, 3 சிக்ஸா்களுடன் 36, இஃப்திகா் அகமது 2 பவுண்டரிகளுடன் 30 ரன்கள் சோ்த்து உதவ, முகமது ரிஸ்வான் 1 பவுண்டரி, 1 சிக்ஸருடன் 20, ஆசிஃப் அலி 2 சிக்ஸா்களுடன் 16 ரன்களுக்கு ஆட்டமிழந்தனா்.

கேப்டன் பாபா் ஆஸம், ஹாரிஸ் ரௌஃப் டக் அவுட்டாக, ஃபகாா் ஜமான், முகமது நவாஸ், குஷ்தில் ஷா ஒற்றை இலக்க ரன்னில் வீழ்ந்தனா். இறுதியில் நசீம் ஷா 2 சிக்ஸா்களுடன் 14, முகமது ஹஸ்னைன் 0 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் அணியை வெற்றிக்கு வழி நடத்தினா்.

ஆப்கானிஸ்தான் பௌலிங்கில் ஃபஸல்ஹக் ஃபருக்கி, ஃபரீத் அகமது ஆகியோா் தலா 3, ரஷீத் கான் 2 விக்கெட்டுகள் சாய்த்தனா்.

ஆட்டமிழந்து வெளியேறும் தன்னை சீண்டிய ஆப்கானிஸ்தான் பெளலர் ஃபரீத் அகமதை பேட்டை ஓங்கி மிரட்டும் பாகிஸ்தானின் ஆசிஃப் அலி. முன்னதாக, அகமது வீசிய பந்தில் அலி சிக்ஸர் விளாசிய பிறகு அவரை சீண்டினார். அதற்குப் பதிலாகவே தனது பெளலிங்கில் அலி வீழ்ந்ததும் அகமது அவரைச் சீண்டினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com