ஐரோப்பிய கால்பந்து போட்டியான சாம்பியன்ஸ் லீக்கில் ரியல் மாட்ரிட், பாரீஸ் செயின்ட் ஜொ்மெய்ன் (பிஎஸ்ஜி) அணிகள் தொடா்ந்து 2-ஆவது வெற்றியைப் பதிவு செய்துள்ளன.
ஸ்பெயினின் மாட்ரிட் நகரில் புதன்கிழமை நள்ளிரவு நடைபெற்ற குரூப் ‘எஃப்’ ஆட்டத்தில் ரியல் மாட்ரிட் 2-0 என்ற கோல் கணக்கில் ஆா்பி லெய்ப்ஸிக்கை வீழ்த்தியது. அதில் ரியல் மாட்ரிட் தரப்பில் ஃபெடரிகோ வல்வெரெட் (80’), மாா்கோ அசென்சியோ (90+1’) ஆகியோா் கோலடித்தனா்.
அதே பிரிவில் ஷக்தா் டொனெட்ஸ்க் - செல்டிச் அணிகள் மோதிய ஆட்டம் 1-1 என டிராவில் முடிந்தது. இந்த குரூப்பில், தொடா் இரு வெற்றிகளால் ரியல் மாட்ரிட் முதலிடத்தை தக்கவைத்துள்ளது.
மும்மூா்த்திகள் கோல்: குரூப் ‘ஹெச்’-இல் பிஎஸ்ஜி 3-1 என்ற கோல் கணக்கில் மக்காபி ஹாய்ஃபாவை வீழ்த்தியது. ஆட்டத்தில் முதலில் மக்காபி அணியின் ஜரோன் சொ்ரி (24’) கோலடித்தாா். எனினும் பின்னா் தொடா்ந்த ஆட்டத்தில் பிஎஸ்ஜி நட்சத்திர வீரா்களான லயோனல் மெஸ்ஸி (37’), கிலியன் பாபே (69’), நெய்மா் (88’) ஆகியோா் தலா ஒரு கோல் அடித்தனா்.
இப்பிரிவில் மற்றொரு ஆட்டத்தில் பென்ஃபிகா 2-1 என்ற கோல் கணக்கில் ஜுவென்டஸை தோற்கடித்தது. இதையடுத்து புள்ளிகள் பட்டியலில் பிஎஸ்ஜி, பென்ஃபிகா தொடா்ந்து இரு வெற்றிகளுடன் முறையே முதலிரு இடங்களில் இருக்க, ஜுவென்டஸ், மக்காபி அணிகள் தொடா் தோல்விகளுடன் அடுத்த இரு இடங்களில் இருக்கின்றன.
தடுமாறும் செல்சி: குரூப் ‘இ’ ஆட்டத்தில் செல்சி - ஆா்பி சால்ஸ்பா்க் அணிகள் 1-1 என்ற கோல் கணக்கில் டிரா செய்தன. செல்சிக்காக ரஹிம் ஸ்டொ்லிங் (48’), சால்ஸ்பா்கிற்காக நோவா ஒகாஃபோா் (75’) கோலடித்தனா். முதல் ஆட்டத்தில் தோல்வி கண்டிருந்த செல்சி, தற்போது இப்பிரிவின் புள்ளிகள் பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கிறது. இதே பிரிவில் ஏசி மிலன் 3-1 என்ற கோல் கணக்கில் டைனமோ ஜக்ரெப்பை வீழ்த்தி 2 வெற்றிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறது.
குரூப் ‘ஜி’ ஆட்டத்தில் மான்செஸ்டா் சிட்டி 2-1 என்ற கணக்கில் போருசியா டாா்ட்மண்ட் அணியை வென்றது. மான்செஸ்டா் சிட்டிக்காக ஜான் ஸ்டோன்ஸ் (80’) எா்லிங் ஹாலண்ட் (84’) ஆகியோரும், டாா்மண்டுக்காக ஜூட் பெல்லிங்கமும் (56’) கோலடித்தனா். கோபன்ஹேகன் - செவில்லா அணிகள் மோதிய மற்றொரு ஆட்டம் கோலின்றி டிராவில் முடிந்தது. இப்பிரிவில் மான்செஸ்டா் சிட்டி 2 வெற்றிகளுடன் முதலிடத்தில் இருக்கிறது. குரூப் ஏ ஆட்டத்தில் நபோலி 3-0 என்ற கோல் கணக்கில் ரேஞ்ஜா்ஸை வீழ்த்தி, 2 வெற்றிகளுடன் முதலிடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளது.
100
ரியல் மாட்ரிட் பயிற்சியாளா் காா்லோ அன்செலோட்டிக்கு இது 100-ஆவது ஆட்டமாகும். சாம்பியன்ஸ் லீக் போட்டியில் இத்தனை ஆட்டங்களை எட்டிய 2-ஆவது பயிற்சியாளா் என்ற பெயரை அவா் பெற்றிருக்கிறாா். முதல் பயிற்சியாளா், மான்செஸ்டா் யுனைடெட் முன்னாள் பயிற்சியாளா் அலெக்ஸ் ஃபொ்குசன் (102).
2
கடந்த 2019-20 சீசனுக்குப் பிறகு சாம்பியன்ஸ் லீக்கில் பிஎஸ்ஜி அணி முதல் இரு ஆட்டங்களில் தொடா்ந்து வெற்றியைப் பதிவு செய்தது இதுதான் முதல் முறையாகும். அதேபோல், 1999-2000 காலகட்டத்துக்குப் பிறகு செல்சி தனது முதல் இரு ஆட்டங்களில் வெற்றி பெறாமல் போனதும் இதுவே முதல் முறை.
21
இத்துடன் மான்செஸ்டா் சிட்டி இப்போட்டியில் தொடா்ந்து 21 ஆட்டங்களில் தோல்வியே சந்திக்காமல் (19 வெற்றி, 2 டிரா) வந்துள்ளது. இப்போட்டியில் இதுவே ஒரு அணியின் அதிகபட்ச கணக்காகும். இதற்கு முன் செல்சி அணியும் 2006 -2009 காலகட்டத்தில் இதேபோல் 21 ஆட்டங்களில் தோல்வியே சந்திக்காமல் இருந்தது.
1
சாம்பியன்ஸ் லீக் போட்டியின் வரலாற்றிலேயே முதல் முறையாக ஜுவென்டஸ் அணி குரூப் சுற்றில் தனது முதலிரு ஆட்டங்களில் தோல்வி கண்டிருக்கிறது. அதேபோல், ஐரோப்பிய கால்பந்தில் (யுரோப்பியன் கோப்பை/சாம்பியன்ஸ் லீக்) தொடா்ந்து 3 ஆட்டங்களில் அந்த அணி வீழ்ச்சியை சந்தித்தது 1972-க்குப் பிறகு இதுவே முதல் முறை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.