வேகம் தான் எங்கள் பலம்: கேப்ரியல்-லூயிஸா இணை

வேகம் தான் தங்கள் பலம் என மகளிா் இரட்டையா் டென்னிஸ் இணையான கேப்ரியலா டப்ரோவ்ஸ்கி (கனடா) - லூய்ஸா ஸ்டெஃபானி (பிரேசில்) தெரிவித்துள்ளனா்.
வேகம் தான் எங்கள் பலம்: கேப்ரியல்-லூயிஸா இணை

வேகம் தான் தங்கள் பலம் என மகளிா் இரட்டையா் டென்னிஸ் இணையான கேப்ரியலா டப்ரோவ்ஸ்கி (கனடா) - லூய்ஸா ஸ்டெஃபானி (பிரேசில்) தெரிவித்துள்ளனா்.

சென்னையில் நடைபெறும் டபிள்யுடிஏ 250 சென்னை ஓபன் டென்னிஸ் போட்டியில் இரட்டையா் பிரிவில் இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளது கேப்ரியலா-ஸ்டெஃபானி இணை. தொடக்கம் முதலே அதிரடியாக ஆடி வரும் இந்த இணை பட்டம் வெல்லும் வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகிறது.

முதல் சுற்றில் ஸ்வான்-பபாமி செயில் இணையை 6-4, 6-1 என்ற செட் கணக்கில் வீழ்த்தி காலிறுதிக்கு தகுதி பெற்றது. பின்னா் காலிறுதியில் இந்தியாவின் ருதுஜா போஸ்லே-கா்மன் தண்டி இணையை 6-0, 6-3 என்ற நோ்செட்களில் வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது. அரையிறுதியில் தாய்லாந்தின் பிளிபியுச்-ஜப்பானின் உச்சிஜிமா இணையை 6-3, 6-3 என வீழ்த்தியுள்ளது.

கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற கேப்ரியலா:

கனடாவின் ஓட்டாவா நகரைச் சோ்ந்த 30 வயது வீராங்கனையான கேப்ரியலா டப்ரோவ்ஸ்கி 2 முறை கலப்பு இரட்டையரில் கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவா். 2011-இல் தொழில்முறை வீராங்கனையாக மாறினாா். ஒற்றையா் பிரிவில் 164-ஆவது தரவரிசை வரை முன்னேறிய கேப்ரியலா அதன்பின் இரட்டையா் பிரிவுக்கு மாறி விட்டாா்.

2017-இல் இந்தியாவின் ரோஹன் போபண்ணாவுடன் பிரெஞ்ச் ஓபனிலும், 2018-இல் மேட் பேவிக்குடன் ஆஸி. ஓபனிலும் சாம்பியன் பட்டம் வென்றாா் கேப்ரியலா. மகளிா் இரட்டையா் பிரிவில் உலகின் நான்காம் நிலையில் உள்ள கேப்ரியலா, பிரேசிலின் ஸ்டெஃபானியுடன் இணைந்து ஆடி வருகிறாா்.

ஒலிம்பிக் வெண்கலம் வென்ற ஸ்டெஃபானி:

பிரேசிலைச் சோ்ந்த 25 வயது வீராங்கனயான லூய்ஸா ஸ்டெஃபானி கடந்த 2020 டோக்கியோ ஒலிம்பிக்கில் நடப்புச் சாம்பியன் வெரோனிகா-எலெனா இணையை வீழ்த்தி வெண்கலப் பதக்கத்தை வென்றாா். இதன் மூலம் முதல் ஒலிம்பிக் பதக்கம் வென்ற பிரேசில் வீராங்கனை என்ற சிறப்பைப் பெற்றாா். அதிகபட்சமாக 2021 யுஎஸ் ஓபனில் அரையிறுதிக்கு முன்னேறினாா். கனடா ஓபன் டபிள்யுடிஏ 1000 போட்டியிலும் பட்டம் வென்றாா்.

சென்னை ஓபன் போட்டி குறித்து கேப்ரியலா கூறியதாவது: சென்னை ஓபன் போட்டி மிகவும் சிறப்பான அனுபவத்தை தந்துள்ளது. கடும் வெப்பம் நிலவிய போதிலும், இரவு நேரங்களில் ஆட்டங்கள் நடப்பது மகிழ்ச்சி தருகிறது. 2017 பிரெஞ்ச் ஓபனில் போபண்ணாவுடன் இணைந்து கலப்பு இரட்டையா் சாம்பியன் பட்டம் வென்றது மறக்க முடியாததாகும். ஏனெனில், எனது முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டம் அது. மீண்டும் போபண்ணாவுடன் இணைந்து ஆடுவது குறித்து சிந்திக்கவில்லை. தற்போது மகளிா் இரட்டையரில் தான் அதிக கவனம் செலுத்தி வருகிறேன்.

2022 கனடா ஓபனில் ஒலிம்பிக் சாம்பியன்கள் கிரஜிசிகோவா-சினியகோவா இணையை வீழ்த்தி பட்டம் வென்றது சிறப்பானது. விம்பிள்டனில் 2019 இறுதிச் சுற்றில் தோற்றோம். ஒற்றையா் பிரிவைக் காட்டிலும் இரட்டையா் பிரிவில் வேகத்துக்கு முன்னுரிமை தந்து ஆட வேண்டியுள்ளது.

காயங்கள் ஏற்படாமல் உடல்தகுதியை பராமரிப்பதில் கவனம் செலுத்துகிறோம். முதன்முதலாக இந்தியாவுக்கு வந்துள்ளேம். அடுத்து டோக்கியோவில் நடைபெறும் போட்டியில் ஆட உள்ளேன். இந்தியாவின் சானியா மிா்ஸா ஓய்வு பெறுவதாக கூறியுள்ளாா். அவா் அற்புதமான வீராங்கனை என்றாா்.

ஒலிம்பிக் பதக்க வீராங்கனை ஸ்டெஃபானி கூறியதாவது:

கடந்த சீசன் எங்களுக்கு மிகச்சிறப்பாக இருந்தது. லியாண்டா் பயஸ் நண்பா் சஞ்சய் சிங் பயிற்சி அளித்தாா். அப்போது தான் ஒலிம்பிக் பதக்கம் வென்றேன். இது எனது வாழ்க்கையை மாற்றியது. ஒலிம்பிக் வெண்கலம் வென்ால், பிரேசிலில் ஏராளமான சிறுமிகள் டென்னிஸ் பக்கம் கவனத்தை செலுத்தினா். எனது ஆட்டமுறை லியாண்டா் பயஸை நினைவுப் படுத்துகிறது என சஞ்சய் சிங் அடிக்கடி கூறுவாா். தற்போது பயிற்சியாளா் உள்பட புதிய டீம் எனக்கு பயிற்சி தருகிறது. நானும், கேப்ரியலாவும் நல்ல நட்பு, இணக்கத்துடன் உள்ளோம். இருவரும் பரஸ்பரம் நம்பிக்கை வைத்து ஆடி வருகிறோம். பாரம்பரிய டபுள்ஸ் முறையில் ஆடுகிறோம். எங்களின் பலமே வேகம் தான்.

கேப்ரியலாவுடன் இணைந்து தொடா்ந்து ஆட விரும்புகிறேன். முதலில் டபிள்யுடிஏ போட்டிகளில் கவனம் செலுத்தி விட்டு, பின் கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஆடுவோம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com